Wednesday, October 14, 2020

8 மதிப்பெண் வினா ஒருவன் இருக்கிறான்

 அழகிரிசாமியின் 'ஒருவன் இருக்கிறான்' என்னும் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.


ஒருவன் இருக்கிறான்


துணையின்றி வாழும்நிலை இரங்கத்தக்கது. எப்படிப்பட்டவராக இருந்தாலும் பிறரது துணையைச் சார்ந்திருக்க வேண்டியநிலை இருக்கிறது.  துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணை ஒன்று இருப்பதை அறியும்போது நமக்குக் குற்ற உணர்ச்சி தோன்றும் வாய்ப்பு இருக்கிறது. எப்படிப்பட்டவருக்கும் ஒரு துணை இருக்கும். அந்தத் துணைதான் மனிதத்தின் வேருக்கு நீர். அதில் மனிதம் துளிர்க்கும்.

கட்டைத் தொட்டி ஆறுமுகத்தின் மனிதநேயம்

அம்மா அப்பா இல்லாத குப்புசாமி, காஞ்சிபுரத்தில் தாய்மாமன் வீட்டில் தங்கி ஒரு சைக்கிள்கடையில் வேலைசெய்து வாழ்ந்து வந்தான். அந்தக் கடைக்கு எதிரே ஒரு விறகுக் கடையில் வேலைசெய்து வந்தவன்தான் கட்டைத் தொட்டி ஆறுமுகம். ஆறுமுகத்தின் பக்கத்து வீட்டுக்காரன் வீரப்பன் என்பவனும், குப்புசாமியும் நெருங்கிய நண்பர்கள். குப்புசாமி வயிற்றுவலி காரணமாக சென்னைக்கு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தான்.  சென்னைக்குத் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு வந்த ஆறுமுகம் குப்புசாமியைப் பார்க்க, அவனுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றான். பார்க்க முடியவில்லை. அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்தவரிடம், தன் குழந்தைகளுக்காக வாங்கிய சாத்துக்குடிப் பழங்களில் இரண்டு சாத்துக்குடிப் பழங்களையும், ஒருரூபாய் நோட்டு ஒன்றையும் கொடுத்து, அதைக் குப்புசாமியிடம் சேர்த்துவிடும்படி வேண்டுதலை முன்வைத்துத் தன்னுடைய மனிதத்தை வெளிப்படுத்தினான்.

ஏழ்மையிலும் இரங்கிய வீரப்பன்

வீடுகட்டுகிற ஒரு மேஸ்திரியிடம் சிப்பந்தியாக வேலைசெய்து வந்தவன் வீரப்பன்.  நோய் காரணமாகக் குப்புசாமி வேலை இழந்து தாய்மாமன்வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, வீரப்பன்தான் அவ்வப்போது அவனை அழைத்துவந்து சாப்பாடு போடுவான். சிலநாட்கள் வேலை இல்லாமல், வருமானமும் இல்லாமல் துயரப்படுகிற ஏழையாக இருந்தாலும், கடன் வாங்கியாவது தன் நண்பனுக்கு உதவிசெய்து வந்தான்.

கடிதத்தில் கசிந்த மனிதம்

சென்னைக்குச் சிகிச்சைக்கு சென்ற குப்புசாமிக்கு, ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பிய வீரப்பனின் கடிதத்தில் மனிதம் கசிந்திருந்தது. அந்தக் கடிதத்தில்,"என் உயிர்நண்பன் குப்புசாமிக்கு எழுதிக் கொண்டது... நீ இங்கிருந்து போனதிலிருந்து என் உயிர் இங்கே இல்லை. சதா உன் ஞாபகமாகத்தான் இருக்கிறேன். கடவுள் அருளால் நீ உடம்பு சௌக்கியமாகி வரவேண்டும் என்று தினமும் ஒருதடவை கோவிலுக்குப் போய்க் கும்பிடுகிறேன். எனக்கு இப்போது வேலை இல்லை. கொஞ்ச நாட்களாக வருமானம் இல்லாமல் இருக்கிறேன். நேற்று கட்டைத்தொட்டி ஆறுமுகம் பட்டணம் போவதாகச் சொன்னான். உடனே ஓடி ஒருவரிடம் மூன்றுரூபாய் கடன் வாங்கி அவனிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். நானே வரலாம் என்று பார்த்தேன். வந்தால் இந்த மூன்றுரூபாயும் பஸ்ஸூக்குச் செலவாகிவிடும். உனக்குச் சமயத்தில் உதவியாக இருக்கும் என்று நினைத்து நான் ரூபாயைச் செலவழித்துக் கொண்டு வராமல் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். இன்னோர் இடத்திலும் பணம் கேட்டிருக்கிறேன். கிடைத்தால் நான் சீக்கிரம் உன்னைப் பார்க்க வருவேன். உன்னைப் பார்த்தால்தான் நான் தின்னும் சோறு, சோறாக இருக்கும்" என்று உருக்கமாக எழுதியிருந்தான்.

கதைசொல்லியின் மனத்தில் கசிந்த மனிதம்

மேற்கண்ட கடிதத்தைப் படித்த கதைசொல்லியின் கண்களில் கண்ணீர் கசிந்தது.  அதை வெளிக்காட்டாமல் மனைவியை அழைத்து, "குப்புசாமியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போய் வருவோம்" என்றார். அவளும் மகிழ்ச்சி அடைந்தாள்.  "குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான். குப்புசாமிக்கு மட்டுமா? எனக்குமே ஒருவனாக அவன் இருக்கிறான்" என எண்ணியபடி குப்புசாமிக்குப் பழம் வாங்கப் புறப்பட்டார்.

வீரப்பன், கட்டைத்தொட்டி ஆறுமுகம் போன்ற மனிதர்களின் மனிதத்தால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் நிலைபெற்றிருக்கிறது.  இதைத்தான் வள்ளுவர், "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்" என்று இயம்பியிருக்கிறார் போலும்!

5 மதிப்பெண் வினா தேம்பாவணி வீரமாமுனிவரின் கவிதாஞ்சலி

கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

தேம்பாவணி

கருணையின் தன் தாயார் எலிசபெத் அம்மையாருடன் கானகத்தில் வாழ்ந்து வந்தார். அச்சூழலில் அவருடைய தாய் இறந்து விட்ட போது கருணையன் அடையும் துன்பத்தில் இயற்கையும் பங்குகொண்டு கலங்கி, ஆறுதல் அளிப்பதை வீரமாமுனிவர் படம் பிடித்துக் காட்டுகிறார்.

கருணையனின் கண்ணீர்!

கருணையின் தன் பூப்போன்ற கைகளைக் குவித்து, "பூமித்தாயே! என் அன்னையின் உடலை அன்போடு காப்பாயாக" என்று வணங்கினான். மலர்ப்படுக்கையில் அன்னையின் உடலை அடக்கம் செய்து, அதன்மீது பூக்களையும் கண்ணீரையும் பொழிந்தான்.

கருணையனின் புலம்பல்

"தாயின் மணி போன்ற வாய்மையை மழைநீராகப் பருகி, அன்னையின் மார்பில் மாலையாக மனமகிழ்ந்து வாழ்ந்தேன்.  மணி போன்ற மழைத்துளியின்றி பயிர் வாடியது போல வாடுகின்றேன்.  கொம்பில் கொய்த மலராக வாடுகின்றேன். நஞ்சுதடவிய எரியும்அம்புதுளைத்த புண்ணின் வேதனையை அனுபவிக்கின்றேன்துணையைப் பிரிந்த பறவையைப் போல வாடுகின்றேன். வழுக்கு நிலத்தில் வழிதவறியவன் போல் ஆனேன். 

உயிர் பிழைக்கும் வழி அறியேன்.  உணர்விழந்த உறுப்பின் தன்மை அறியேன்.  உணவு தேடும் வழி அறியேன்.  கானில் செல்லும் வழி அறியேன்.  தாய் காட்டிய வழி அறிவேன். தாயும் என்னைத் தவிக்க விட்டுப் போனாள்" என்று நவமணிமாலை போன்று நல்லறத் தவத்தை அணிந்த கருணையன் புலம்பினான்.

கருணையன் புலம்பலுக்கு இரங்கியவை

தேன்சிந்தும் மரங்களிலும் மணமலர்ச் சுனைகளிலும் உள்ள பறவைகளும் வண்டுகளும் கருணையனின் புலம்பலுக்கு இரங்கி, அழுவன போன்று ஒலித்தன.

பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள உவமைகள்:

  1. பூப்போன்ற கைகள்
  2. மணி போன்ற வாய்மை
  3. மணி போன்ற மழைத்துளி
  4. மழையின்றிப் பயிர் வாடியது போல
  5. கொம்பின் கொய்த மலரைப் போல
  6. துணையைப் பிரிந்த பறவையைப் போல
  7. வழுக்கு நிலத்தில் வழிதவறியவன் போல
  8. நவமணிமாலை போன்று நல்லறத் தவத்தை அணிந்த
  9. கானம் கொல் என்று ஒலித்து அழுவது போன்று.

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள உருவகங்கள்:

  1. பூமித்தாய்
  2. வாய்மையே மழைநீராக.

-மலர் மகேந்திரன்

Tuesday, October 13, 2020

8 மதிப்பெண் வினா ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

 ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.


ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழைப் பதிவிறக்கம் செய்ய இங்கே தொடுக.

8 மதிப்பெண் வினா, நாடகம் , கொக்கை போல கோழியைப் போல உப்பைப் போல

 குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.  

மாணவன் - கொக்கைப் போல, கோழியைப் போல - உப்பைப் போல - இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் - குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி - கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் - ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.


நாடகம்

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?


கதைக்களம்: தத்துவமேதை சாக்ரடீஸ் அவர்களின் வீடு

கதைமாந்தர்கள்: சாக்ரடீஸ், அவரது மாணவர்

(சாக்ரடீஸிடம், அவருடைய‌ மாணவன் ஒருவன் வந்தான்). 

மாணவன்: ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

சாக்ரடீஸ்: மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்.

மாணவன்:  ஒன்றும் புரியவில்லை ஐயா. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா.

சாக்ரடீஸ்: கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்.

மாணவன்: கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?

சாக்ரடீஸ்: கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.

அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி விட்டு, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாணவன்: அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…

சாக்ரடீஸ்: ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.

அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்.

மாணவன்: எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?

சாக்ரடீஸ்: மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்.(புன்னகை பூக்கிறார்)

(அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.)

கிரேக்க தத்துவமேதையான சாக்ரடீஸ் கூறிய 'மாணவன் எப்படி இருக்க வேண்டும்?' என்பதை அறிந்து கொண்டீர்களா? அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.

நன்றி: inithu.com

5 மதிப்பெண் வினா காலக்கணிதம் பாநயம் பாராட்டல்

 காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம் 

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் 

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் 

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம் 

இவை சரி என்றால் இயம்புவது என் தொழில் 

இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை 

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும் 

அவனும் யாருமே அறிந்தவை; அறிக!

- கண்ணதாசன்.


பாநயம் பாராட்டல்

காலக்கணிதம்

திரண்ட கருத்து

"நான் ஒரு கவிஞன்.  நானே காலத்தைக் கணிக்கும் வானசாத்திரமும் ஆவேன். மனத்தில் எழும் கருத்துக்களைக் கவிதையாகப் படைப்பேன்.  இந்தப் பூமியில், நானே புகழ்பெற்ற தெய்வமும் ஆவேன்.  என்னுடைய கவிதைகள் பொன்னை விட விலை மிகுந்தவை.  நன்மை தரும் செயல்களைப் பாராட்டியும், தவறான செயல்களை எதிர்த்தும் கவிதை வடிப்பது என்னுடைய வேலை. இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரிகின்றான்.  நானும் கவிதையைப் படைத்தல், மக்களுக்கு நல்லறிவு புகட்டுதல், மக்களின் மனங்களில் உள்ள தீய சிந்தனைகளை அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்கின்றேன். அறிவீர்களாக!" என்று கண்ணதாசன் கவிதை பாடுகிறார்.

மையக்கருத்து

காலத்தைக் கணித்தும் முத்தொழில் புரிந்தும் இறைவனுக்குச் சமமான நிலையினைப் பெற்ற கவிஞனைப் புகழ்ந்துரைப்பது இப்பாடலின் மையக்கருத்து ஆகும்.

சொல் நயம்

'கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்'

என்ற பாடலடியில் சொல்நயம் மிகுந்து வந்துள்ளது.

பொருள் நயம்

"யானோர் காலக் கணிதம், கருப்படு பொருளை உருப்பட வைப்பேன், பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்" ஆகிய சொற்கள் ஆழமான பொருள் உடையன.  கவிதையின் மையக் கருத்துக்கு அழகு சேர்ப்பன.

சந்த நயம்

'சந்தம் செந்தமிழுக்கே சொந்தம்' என்பார்கள். வல்லோசையும் மெல்லோசையும் சேருமிடத்தில் சந்தநயம் பிறக்கிறது.

"புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் 

பொன்னினும் விலைமிகு பொருள் என் செல்வம்" என்ற கவிதை வரிகளில் இனிமையான சந்தநயம் பயின்று வந்துள்ளது.

தொடை நயம்

"தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்" என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, முரண், இயைபு ஆகிய நான்கு தொடை நயங்களும் பயின்று வந்துள்ளன.


மோனை நயம்

முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் ஆகும்.

"படைக்கு அழகு யானை 

பாடலுக்கு அழகு மோனை" என்பதற்கு ஏற்ப இப்பாடலில்,

விஞன்

ணிதம்

புவியில்

புகழுடைத்

ளித்தல்

ழித்தல்

என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.

எதுகை நயம்

முதலெழுத்து அளவொத்து, இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை நயம் ஆகும்.

ருப்படு

பொருளை

ருப்படு

வை சரியென்றால்

வை தவறாயின்

என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.

முரண் நயம்

முரண்பட்ட சொற்களால் அமைவது முரண்நயம் ஆகும்

'ஆக்கல் ×அழித்தல், சரி×தவறு ' என்ற சொற்கள் முரண் சுவையைத் தருகின்றன.

இயைபு நயம்

பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ இயைந்து வருவது இயைபுநயம் ஆகும்.

கணிதம்

தெய்வம்

செல்வம்

என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணிநயம்

'அணி இல்லாத கவிதை

பணி இல்லாத வனிதை' என்பார்கள். இப்பாடலில், கவிஞர் தம்மைக் காலக்கணிதமாகவும் புகழுடைத் தெய்வமாகவும் உருவகப்படுத்தியுள்ளார்.  மேலும், தன்னுடைய கவிதையைச் செல்வமாகவும் உருவகப்படுத்தியுள்ளார். இவ்வாறு, உவமையின் தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறுவது உருவகம் ஆகும். எனவே, இப்பாடலில் வந்துள்ள அணி 'உருவக அணி' ஆகும்.

கவிஞர் கண்ணதாசன் தமிழ்ப்பெரும் கவிஞர்களுள் ஒருவர்.  அவரது கவிதைகளில் கவித்துவம் நிரம்பி வழியும் என்பதற்கு இக்கவிதை சான்று.


-மலர் மகேந்திரன்

Monday, October 12, 2020

8 மதிப்பெண் வினா மங்கையராய் பிறப்பதற்கே மகளிர் நாள் விழா அறிக்கை

 நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம் - பள்ளிக் கலையரங்கம்.    நாள்: 08-03-2021

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் - தலைமை ஆசிரியரின் வரவேற்பு - இதழாளர் கலையரசியின் சிறப்புரை - ஆசிரியர்களின் வாழ்த்துரை - மாணவர் தலைவரின் நன்றியுரை.


மகளிர் நாள் விழா - அறிக்கை

இடம் - பள்ளிக் கலையரங்கம்.                                    நாள்: 08-03-2021


கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல்

மார்ச் 8, 2021 ஆம் ஆண்டு, மாலை 4 மணி அளவில் சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக் கலையரங்கத்தில் மகளிர் நாள் விழாக் கொண்டாட்டத்திற்காகப் பள்ளி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது.  மாணவர்கள் வரிசையாக அணிவகுத்து வந்தனர்.  ஆசிரியர்கள், அவர்களை ஒழுங்கு முறையில் அமர வைத்தனர். தலைமையாசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர் கலையரசி ஆகியோர் விழா மேடையில் தோன்றினர்.

தலைமையாசிரியரின் வரவேற்பு

விழா, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது.  தலைமையாசிரியர், மகளிர்தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கத்தைப் பற்றிக் கூறி, விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.  சிறப்பு விருந்தினர் கலையரசியின் இதழ்ப்பணி குறித்தும், பெண்கள் முன்னேற்றப் பணிகள் குறித்தும் எடுத்துக்கூறி, அவரை அறிமுகப்படுத்தினார்.  மாணவர்களின் கரவொலி முழங்க, இதழாளர் கலையரசிக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை

'திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம்' எனத் தொடங்கி பெண்களின் மென்மைக் குணங்கள், குடும்ப நலன் காக்கும் பெண்ணியம், பெண்களின் மன உறுதி, சாதனை படைத்த பெண்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தீர்வுகளும் ஆகிய தலைப்புகளில் ஆழமான கருத்துகளை விதைத்தார். அவருடைய கனிவான, கருத்துச் செறிவான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. 

"பெண்ணே நீ உனக்கென

வாழ்வது எப்போது?

உண்மையான மாற்றம் வரும்

அப்போது

என்று கூறி, உரையை நிறைவு செய்தார்.

ஆசிரியர்களின் வாழ்த்துரை

பலத்த கரவொலிகளுக்கிடையே தமிழாசிரியர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க மேடையில் தோன்றினார்.  'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற கவிமணியின் பாடலுடன் தொடங்கி மாணவக் கண்மணிகளை வாழ்த்திப் பேசினார்.  அவரைத் தொடர்ந்து சமூக அறிவியல் ஆசிரியர், இன்றைய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்கூறி, அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிந்தார்.  மாணவச் செல்வங்கள் வரலாற்றில் தடம் பதிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெற்றார். 

மாணவர் தலைவரின் நன்றியுரை

இந்த நாளை இனிய பொன்னாளாக மாற்றிக் கொடுத்த தலைமை ஆசிரியர், சிறப்பு விருந்தினர், ஆசிரியர்ப் பெருமக்கள், மாணவக் கண்மணிகள் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு ஆகியோருக்கு மாணவர் தலைவர் நன்றி தெரிவித்துப் பேசினார்.  நாட்டுப்பண் இசைக்க, விழா இனிதே நிறைவுற்றது.


-மலர் மகேந்திரன்

8 மதிப்பெண் வினா சங்க இலக்கியத்தில் அறம் உறவினருக்கு கடிதம்

 பள்ளித் திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டும் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.


உறவினருக்குக் கடிதம்


விருதுநகர்,

12-10-2020.


அன்புள்ள அத்தைக்கு,

வணங்குகிறேன்.  இங்கு நானும் அப்பாவும் அம்மாவும் தம்பியும் நலமாக இருக்கிறோம்.  உங்களது நலம் மற்றும் மாமாவின் நலம் அறிய ஆவல்.  சிறுவயது முதலே எனக்கு நல்ல அறநெறிக் கதைகளைக் கூறி நல்வழிப்படுத்தினீர்கள்.  நீங்கள் கூறிய நன்னெறிப்படியே இதுவரை நான் ஒழுகி வந்துள்ளேன்.  அதனால் ஏற்பட்ட நன்மையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.  அதற்காகத் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கடந்த திங்களன்று மதிய உணவு இடைவேளையில் உணவு அருந்துவதற்காக நானும் எனது நண்பனும் பள்ளித்திடல் அருகில் உள்ள வேப்ப மரத்தடிக்குச் சென்றோம்.  அங்கு ஒரு பணப்பையைக் கண்டேன். எடுத்துப் பார்த்தபோது அதில் சில இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளும் அடையாள அட்டைகளும் இருப்பதைக் கண்டேன்.  பணப்பையை தவறவிட்டவரின் மனம் எவ்வளவு துடித்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன்.  

ஆதார் அட்டையில் உள்ள தொலைபேசி எண்ணில் உரியவரைத் தொடர்பு கொண்டேன்.  உடன் பள்ளி தலைமையாசிரியர் அறைக்குச் சென்று நடந்ததைக் கூறினேன்; பணப்பையை ஒப்படைத்தேன்.  சிறிது நேரத்தில் உரியவர் வந்தார்.  சரியான அடையாளத்தைக் கூறிப் பணத்தை பெற்றுக் கொண்டார்; என்னை வாழ்த்திச் சென்றார்; தலைமையாசிரியரும் ஆசிரியப் பெருமக்களும் என்னைப் பாராட்டினார்கள்.  இந்த வாழ்த்துக்கெல்லாம் உரியவர் நீங்கள்தான்.  எனக்கு நீங்கள் சொல்லிக்கொடுத்த, "இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்" என்ற திருக்குறள் எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்து மகிழ்ந்தேன்.  

நன்றி அத்தை!


தங்கள் அன்புள்ள,

தமிழன்


உறைமேல் முகவரி

பெறுநர்

     திருமதி. இந்துமதி,

     கம்பர் தெரு,

     இராஜபாளையம்.