Showing posts with label 5 மதிப்பெண் கவிதை. Show all posts
Showing posts with label 5 மதிப்பெண் கவிதை. Show all posts

Saturday, November 7, 2020

கவிதை

 காட்சி



கா.மு. ஷெரிப் அவர்களின் கவிதை


'காட்சியைக் கண்டு கவினுற எழுதுக' என்ற பகுதியில் கேட்கப்படலாம்.

Wednesday, September 16, 2020

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 இயல் 7



தலைப்பு : உழவன்


ஏர்பிடித்து உழுபவன்...

ஏற்றம்கட்டி இறைப்பவன்...

இறைவனுக்கு அடுத்தவன்...

இருதொழிலே தெரிந்தவன்...

வள்ளலாரின் மூத்தவன்...

வழுவாமல் காப்பவன்...

பசிப்பிணி அறிந்தவன்...

பயிர்களை ஆள்பவன்...

பேரிடரைப் பொறுப்பவன்...

பெருமைதான் சொல்லிடவோ..!

விளக்கம்:

ஏர்பிடித்து உழுபவன் - தனது வலிமையான கரங்களால் ஏர் பிடித்து உழுபவன்



ஏற்றம்கட்டி இறைப்பவன் - கமலத்தில் காளையைப் பூட்டி கிணற்றிலிருந்து நீர் இறைப்பர்.


இறைவனுக்கு அடுத்தவன் - 
(உணவளித்து) மக்களைக் காப்பதில் இறைவனுக்கு அடுத்தவன்.

இருதொழிலே தெரிந்தவன் - 
இறைவன் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்கின்றான்.  ஆனால், உழவரோ பயிரினை ஆக்கல்,  காத்தல் ஆகிய இரு தொழிலினை மட்டுமே செய்கின்றார்.  ஒருபோதும் 'அழித்தல்' என்ற தொழிலை செய்வது இல்லை.  அந்தவகையில் உழவன், இறைவனை விட ஒருபடி மேலானவன்.  

இங்கு, இறைவன் மூன்று தொழில்கள் செய்வதாகவும் உழவன் இரண்டு தொழில்களை மட்டுமே செய்வதாகவும் உழவனைப் பழித்துக் கூறி, பின்பு இறைவனைப் போல் 'அழித்தல்' தொழிலை உழவன் செய்யாமையால் உழவனைப் புகழ்ந்து கூறினார். எனவே, இது 'வஞ்சப்புகழ்ச்சி அணி' ஆயிற்று. 


வள்ளலாரின் மூத்தவன் - 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார், வள்ளலார்.  பயிர் எப்போதெல்லாம் வாடிப் போகிறதோ, அப்போதெல்லாம் வாடக்கூடிய இயல்புடையவர் 'உழவர்'.  அந்த வகையில் முதலில் தோன்றிய தொழில், உழவுத் தொழில்.  அதனால், வள்ளலாரை விட உழவரின் முகமே முதலில் வாடி இருந்திருக்கும். அதனால் வள்ளலாரை விட மூத்தவன் 'உழவன்' எனப்பட்டது.


வழுவாமல் காப்பவன் - எத்தகைய சூழ்நிலையிலும், (வறட்சிக் காலமாக இருந்தாலும், புயல் காலமாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும், நோய் வந்து தாக்கினாலும், பூச்சிகள் அழித்தாலும், தாவர உண்ணிகளிடமிருந்தும் ஒரு சிறு குறையும் இல்லாமல்) பயிர்களைக் காப்பவன்.

பசிப்பிணி அறிந்தவன் - வயலில் பகல் முழுவதும் பசியோடு இருந்து பயிர்களைக் காக்கும் உழவனுக்கு பசியின் கொடுமை நன்கு தெரியும்.

பயிர்களை ஆள்பவன் - எப்போது மழை வரும்? எப்போது விதை விதைக்க வேண்டும்? எப்போது களை எடுக்க வேண்டும்? எப்போது, எவ்வளவு நீர் பாய்ச்ச வேண்டும்?
 எப்படி விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பது? எப்படி பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பது? எப்படி நோயிடமிருந்து பயிர்களைக் காப்பது? எப்போது பயிர் விளையும்? எப்போது அறுவடை செய்யலாம்? என்றெல்லாம் அறிந்து பயிர்களை ஆட்சி செய்பவன்.

பேரிடரைப் பொறுப்பவன்  - உழவும் பேரிடரும் 'ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்' என்பதை நாம் அறிவோம்.  வறட்சி, வெள்ளம், புயல் என்று அத்தனை பேரிடர்களையும் பொறுத்துக் கொள்பவன்.

பெருமைதான் சொல்லிடவோ - உழவனின் பெருமைகள் ஓராயிரம் இருக்க, அத்தனையும் சொல்வது எளிதன்று.

- மலர் மகேந்திரன்.

Tuesday, September 15, 2020

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 இயல் 8





தலைப்பு : ஈகை


அன்பே அகிலம் ஆள வேண்டும்

ஆசை நிலவாய்த் தேய வேண்டும்

இன்பம் கடலாய்ப் பெருக வேண்டும்

ஈகை என்றும் நிலைக்க வேண்டும்

உழைப்பை யாவரும் மதிக்க வேண்டும்

ஊக்கம் கொண்டு உழைக்க வேண்டும்

உள்ளம் குளம் போல் இருக்க வேண்டும்

கைகள் கொடுத்துச் சிவக்க வேண்டும்

தானம், தருமம் வளர வேண்டும்

தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்.


விளக்கம்: 


அன்பே அகிலம் ஆள வேண்டும்: இந்த உலகம் முழுவதும் அன்பால் நிறைந்திருக்க வேண்டும்.  அனைவரும் ஒருவர் பால் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும்.  அப்போதுதான் இல்லாதவர்க்கு இல்லாமை உண்டாகும்.


ஆசை நிலவாய்த் தேய வேண்டும் - ஆசையுள்ள மனிதர்கள் பிறருக்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்.  பொருளீட்டுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்கள்.  அப்படிப்பட்ட ஆசைகள் தேய்பிறை போலத் தேய வேண்டும்.

ஈகை என்றும் நிலைக்க வேண்டும் - பிறருக்கு கொடுத்தலாகிய ஈகைப்பண்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும்.  அதற்காக பிறரிடம் எப்போதும் கையேந்தும் பிச்சைக்காரர்கள் இருக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல... பிறருக்கு கொடுக்கும் குணம் உள்ளவர்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.

ஊக்கம் கொண்டு உழைக்க வேண்டும் : மக்கள் அனைவரும் எப்போதும் ஊக்கத்துடனே உழைப்பில் ஈடுபட வேண்டும். அவ்வாறு உழைப்பை மதித்து ஊக்கத்துடன் உழைக்கும் போது நிறைய பொருள் ஈட்ட முடியும். இல்லாதவருக்கு, இயலாதவருக்குக் கொடுத்து உதவ முடியும்.

உள்ளம் குளம் போல் இருக்க வேண்டும் - ஊரின் நடுவே உள்ள குளம் ஊரார் அனைவரும் பயன்படும்.  அத்தகைய குளம்போல கொடுப்பவர் உள்ளம் இருக்க வேண்டும்.

கைகள் கொடுத்துச் சிவக்க வேண்டும் - கொடை கொடுப்பவர்களுடைய கைகள் கொடுத்துக் கொண்டிருப்பதால் கைகள் சிவந்து விடும்.


தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும் - ஈகை, கொடை கொடுப்போரைத் தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்.


- மலர் மகேந்திரன்.


காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 இயல் 6



தலைப்பு: ஒயிலாட்டம்

காலின் சலங்கையில் கனவுகள் நில்லும்!

கைச்சிறு துணியில் காரியம் செல்லும்!

இடுப்பின் கச்சையில் ஈரம் சிந்தும்!

உருமியின் ஓசையில் உணர்ச்சிகள் உந்தும்!

ஒய்யார ஆட்டத்தில் வீரமே முந்தும்!

தாளத்தின் நீளத்தில் தாவலும் இருக்கும்!

ஒத்த அசைவில் ஓர்மை ஒளிரும்!

கலையின் நிறைவில் கண்கள் மிளிரும்!



விளக்கம்: 

காலின் சலங்கையில் கனவுகள் நில்லும் - ஒயிலாட்டம் ஆடுபவர், காலில் சலங்கை கட்டி ஆடுவர்.  எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொருவருக்கும் உண்டு. அத்தகைய கனவுகளை ஒவ்வொருவரும் சுமப்பர்.  இங்கு, ஒயிலாட்டம் ஆடுபவர் தங்களுடைய கனவுகளை தம்முடைய காலின் சலங்கையில் சுமப்பதாக உருப்படுத்தப்பட்டுள்ளது.


கைச்சிறு துணியில் காரியம் செல்லும் - ஆண்கள் அனைவரும் கையில் சிறு துணியை பிடித்துக்கொண்டு ஒரே மாதிரியாக அசைத்து ஆடுவர். யாருடைய தவறும் அங்கு இருக்காது. காரியம் சிறப்பாக இருக்கும்.


இடுப்பின் கச்சையில் ஈரம் ஒழுகும் - ஆண்கள் வேகமாக காலை எடுத்து வைத்து ஆடும் போது உண்டாகும் வியர்வைத் துளிகளால், இடுப்பில் கட்டியிருக்கும் கச்சையானது நனைந்து வியர்வைத்துளிகள் ஒழுகும். ஆட்டத்தின் கடினத்தன்மை இங்கு கூறப்பட்டுள்ளது.


உருமியின் ஓசையில் உணர்ச்சிகள் உந்தும் - ஒயிலாட்ட த்தின் போது இசைக்கப்படும் உருமியின் ஓசையானது, ஆடுபவர், பார்ப்பவர் ஆகியோர் அனைவரது உணர்ச்சிகளையும் உந்தித் தள்ளும்.


ஒய்யார ஆட்டத்தில் வீரமே முந்தும் - ஒரே மாதிரியான இடைவெளியில், ஒரே மாதிரியாக ஆடும் ஆட்டத்தில் ஆண்களின் வீரம் புலப்படும்.


தாளத்தின் நீளத்தில் தாவலும் இருக்கும் - இசைக்கப்படும் காலத்திற்கு ஏற்றார் போல, ஆண்கள் தாவி ஆடுவர்.


ஒத்த அசைவில் ஓர்மை ஒளிரும் - ஒரே மாதிரியான சலங்கை.  ஒரே மாதிரியான கச்சை.  ஒரே மாதிரியான கைக்குட்டை அல்லது துணி.  ஒரே மாதிரியான நடனம்.  ஒரே மாதிரியான பாவனை.  இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஓர்மை புலப்படும்; ஒற்றுமையை வெளிப்படும்.


கலையின் நிறைவில் கண்கள் மிளிரும் - ஒயிலாட்டம் முடிந்தபின்பு ஆடிய ஆடவர் கண்களில் ஒரு நிறைவு வெளிப்படும்.  அந்த நிறைவில் அவர்களது கண்கள் ஒளிரும்.  


- மலர் மகேந்திரன்.

Monday, September 14, 2020

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 இயல் 5




தலைப்பு: மரம் வளர்த்திடுக!


மரம் அழித்த மானிடர்..!

வரம் இழந்து போயினர்..!

சோலைகள் பாலைகள் ஆயின...

சுவாசமும் சுவர்க்கமும் ஏகின...

கரும்பலகையில் மரம் வரைந்து

கற்பதில் ஏது பயன்?

உணவும் உயிரும் தந்திடும்!

உணர்வும் ஊக்கமும் தந்திடும்!

உள்ளம் தெளிந்து,

விருட்சம் வளர்த்து,

பெறுக நற்பயன்!

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 இயல் 4




தலைப்பு: தொழில்நுட்ப அடிமை


கிரகாம்பெல் கண்ட அற்புத விளக்கு!

மார்ட்டின் கூப்பரின் மந்திர விளக்கு!

பேஜ் பிரினின் கூகுள் தேடல்...

சூக்கர் பெர்கின் முகநூல் நட்பு...

ஆக்டன்- கௌமின் புலனப் பார்வை ...

ஆளை மயக்கும் ஆண்ட்ராய்டு பதிப்பு..!

ஆட் கொண்டதில் இல்லையே வியப்பு..!

ஆசை உறவை அலைபேசியில் கண்டாய்!

படிப்பும் பணியும் கைபேசியில் முடித்தாய்!

தொழில்நுட்பத் தொல்லையில் தொலைந்தேன் போனாய்?!

தொடுதிரை உலகில் அடிமை ஆனாய்..!


தொலைபேசியைக் கண்டறிந்தவர், அலெக்சாண்டர் கிரகாம்பெல்.



செல்போனைக் கண்டறிந்தவர் மார்ட்டின் கூப்பர்.



கூகுளைக் கண்டறிந்தவர்கள் லாரி பேஜ், செர்ஜி பிரின்




முகநூலைக் கண்டறிந்தவர் மார்க் ஸுக்கர்பெர்க்.



புலனத்தைக் கண்டறிந்தவர்கள் ஜன் கௌம், பிரையன் ஆக்டன்




தொழில்நுட்பத் தொல்லையில் மறைந்து ஏன் போனாய்- ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.  அவை, நமது கவனத்தைத் திசை திருப்பி, நம்மை ஆசையில் விழவைத்து, நாம் அதில் மறைந்து போகின்றோம். அவ்வாறு 'தொழில்நுட்பத் தொல்லையால்' நம்மை நாம் இழப்பது தவறு. 'அது' தவறு என்று கேள்வி எழுப்பப்படுகிறது.


காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 இயல் 3



தலைப்பு: அன்பு


ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்...
ஒருவேளைக் கூழே உண்டாலும்...
உள்ளம் நிறைய அன்புடனே...
ஒருகை நீயும் அளித்தாயே!
கசங்கிய உடையை அணிந்தாலும்...
கலங்கா உள்ளம் படைத்தாயே!
இல்லா நிலையை அடைந்தாலும்...
இரங்கிய உள்ளம் படைத்தாயே!
உன்போல் ஒருவரைக் கண்டாலே...
ஊக்கத்தால் உள்ளம் துளிர்த்திடுமே!!


ஒருவேளைக் கூழே உண்டாலும்- ஒரு வேளைதான் உணவு கிடைக்கிறது.  அதுவும் கூழ்தான்.

உள்ளம் நிறைய அன்புடனே ஒருகை நீயும் அளித்தாயே- ஒரு கை அளவுதான் உணவு என்றாலும் நீ அளித்தது உள்ளம் நிறைய அன்புடன்... அந்த உணவு இவ்வுலகில் விலைமதிப்பற்றது.

கலங்கா உள்ளம் படைத்தாயே- தனது ஏழ்மை நிலையைக் கண்டு மனம் சிறிதும் கலங்கவில்லை.

உன்போல் ஒருவரை காணும்போதெல்லாம் அத்தகைய இரங்கிய உள்ளம் தனக்கும் வர வேண்டும் என்ற எண்ணமும் பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கும் உள்ளத்தில் துளிர்க்கிறது.  இது, ஒரு தீக்குச்சி ஓராயிரம் விளக்குகளை ஏற்றுவதற்குச் சமமானது.


- மலர் மகேந்திரன்.

Sunday, September 13, 2020

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 2




தலைப்பு: மரம் வளர்த்திடு


ஆறறிவு படைத்த மானிடா!
புல்லறிவு கொண்டது ஏனடா?!
சூழல் கெடுத்து சூனியம் வைத்தாய்!
முற்றும் மறந்து உற்றவை அழித்தாய்!
ஓரறிவு கொண்டது தானடா!
உலகிற்கு உயிரென்று ஆனதடா!
மழை தந்து வாழ வைக்கும்!
மன்னுயிர்க் கெல்லாம் உரமாய் நிற்கும்!
தவமிருந்து மரங்கள் வளர்த்திடு!
தலைமுறை தனைக் காத்திடு!


புல்லறிவு-கீழான அறிவு
முற்றும் மறந்து உற்றவை அழித்தாய்-கீழான அறிவினால் எல்லாவற்றையும் மறந்து தனக்கு நன்மை செய்கின்ற மரங்கள் , செடிகள் , கொடிகள் , விலங்கினங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை அழித்தாய்.
சூழல் கெடுத்து சூனியம் வைத்தாய்- சுற்றுச் சூழலை அழித்து, தான் வாழ்வதற்கான வழிகளை அடைத்தாய்.

- மலர் மகேந்திரன்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 இயல் 1


தலைப்பு : கல்வி



புத்தகம் வாசித்திடு; புதிதாய்ச் சுவாசித்திடு
தீமை துரத்திடும்; தூய்மை ஆக்கிடும்
வறுமை ஓட்டிடும்; வளமை கூட்டிடும்
விதியை விலக்கிடும்; விழியைத் திறந்திடும்
மதியை வளர்த்திடும்; மதிப்பை உயர்த்திடும்
அற்றம் காத்திடும்; நம் சுற்றம் காத்திடும்
உளியாய்ச் செதுக்கிடும்; பழியை அகற்றிடும் 
இன்பம் ஊட்டிடும்; வீட்டைக் காட்டிடும்.


அற்றம் காத்திடும்-கல்வியானது பகைவரிடம் இருந்து நம்மை காக்கும்.

இங்கு வீடு என்பது நற்பேற்றைக் குறிக்கிறது.

- மலர் மகேந்திரன்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

இயல் 9

தலைப்பு: மனிதம்



எல்லாம் இழந்த கணம்!

ஈயென இரங்கும் மனம்!

பணம் இடுவர் சிலர்!

சினம் இடுவர் சிலர்!

தன்பி எடுப்போரும் உளர்!!

வாடும் உடலும் தினம்!

வாழ்வும் சில்லறைப் பணம்!

காட்சியில் மனிதம் பிணம்!

காணும் என்மனம் கனம்!

பெருக வேண்டும் தானம்!


மனம் வாடிய பின்னரே உடல் வாடத் தொடங்குகிறது. 'மனமும் உடலும்' என்று கூறுவதற்குப் பதிலாக, 'வாடும் உடலும் தினம்' என்று கூறப்பட்டது.  தினம் தினம் சேரும் சில்லறைகளால் வாழ்வு அமைகிறது. அதனால், 'வாழ்வும் சில்லறைப் பணம்' என்று கூறப்பட்டது.


ஈகைப் பண்பு இயல்பாக இல்லாமல் 'தற்பெருமைக்காக' என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால்,       'காட்சியில் மனிதம் பிணம்' என்று கூறப்பட்டது.

-மலர் மகேந்திரன்