Showing posts with label தமிழ்ப் பண்பாடு. Show all posts
Showing posts with label தமிழ்ப் பண்பாடு. Show all posts

Saturday, November 21, 2020

யாதும் ஊரே யாவரும் கேளிர்- தமிழர் பண்பாடு

தமிழர் பண்பாடு

யாதும் ஊரே யாவரும் கேளிர்

//இன்றைய காலத்து இளைஞர்கள், நடிகர்கள்- நடிகைகள் பின்னால் மனத்தை அலைய விடுவதும், சாதி மத மொழி வட்டாரப் பற்றுகளின் அடிப்படையில் தலைவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் முறை அன்று என்பதை வலியுறுத்தும் பாடல் இது//

//தமக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் தாமே காரணம் என்பதை எடுத்துரைக்கும் பாடல் இது//

//ஆற்றின் போக்கிலேயே செல்லும் ஓடம் போல, நமது உயிர் நாம் வாழும் முறையிலேயே அமையும்//

//வாழ்வும் சாவும் ஒன்றெனக் கூறும் பாடல் இது//

//செல்வம் உடையவரைப் புகழ்வதும் வறியவரை இகழ்வதும் கூடாது என்பதை வலியுறுத்தும் பாடல் இது//

புறநானூறு 192

யாதும் ஊரே யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர் தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் 

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் 

இன்னாது என்றலும் இலமே; மின்னொடு 

வானம் தண்துளி தலைஇ ஆனாது 

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று 

நீர்வழிப் படூஉம் புனை போல் ஆருயிர் 

முறைவழிப் படூஉம் என்பது திறவோர் 

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் 

பெரியோரை வியத்தலும் இலமே; 

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

- கணியன் பூங்குன்றனார் பாடியது 

பாடலின் பொருள்:

//எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே; //

//எல்லாரும் எம் சுற்றத்தார்; //உலகில் உள்ள அனைவரையும் தம்முடைய சுற்றத்தாராக எண்ணுவது உலகிலேயே தலை சிறந்த பண்பாடாகும்.

//கேடும் ஆக்கமும் பிறரால் வருவன அல்ல;//

// நோதலும் அது தீர்தலும் பிறரால் வருவன அல்ல; //

நமக்கு வரும் துன்பத்தை பொறுத்துக் கொள்ளாமல் அதற்கு ஒரு காரணத்தை கண்டுபிடித்து பிறர்மீது பழி போடுவதும், நமக்கு நாமே சமாதனம் சொல்லுவதும் ஆகிய பொது உளவியலை கொண்ட மனிதர்களுக்கு மத்தியில், விரிந்த சிந்தனை உடைய தமிழர்களின் பண்பாடு வியப்புக்குரியதே. 

//இன்பமும் துன்பமும் தம்மாலேயே விளைவன ஆகும். //

//இறத்தலும் புதிது அன்று; //

உலக பற்றுகள் மிகுந்த மனிதர்கள் வாழும் இவ்வுலகில் , இறப்பு என்ற நிகழ்வை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு மிகவும் உயர்வானது.

//கருவில் உருவான நாள் முதல் இறப்பு என்பது முடிவு செய்யப்பட்டது.//

//  வாழ்வது இனிது என்று மகிழ்ந்தது இல்லை; //

//ஒரு வெறுப்பு வரும் போது வாழ்க்கை துன்பமானது என ஒதுக்குவதும் இல்லை; //

பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையில் அவ்வப்போது வரும் துன்பங்களைக் கண்டு அஞ்சி வாழ்க்கையை வெறுப்பதும், தற்கொலை செய்து கொள்ள முனைவதும் அரங்கேறும்.  

//மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பொழிவதால் கல்லை உருட்டி வந்த ஆறு ஒலி எழுப்பும். அத்தகைய பெரிய ஆற்று வழியே செல்லும் தெப்பம் போல அரிய உயிர், விதியின் வழியே செல்லும் என்பதை நன்மைகளைப் பயிலும் அறிவார்ந்தவர்களின் நூல் வழி அறியலாம். //

//எனவே, நன்மையால் மிக்க பெரியவர்களை மதித்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.//

VIP களைப் புகழ்ந்து பாடி நன்மை அடைய விரும்புவதை விடுத்து...

தனித்துவமான வாழ்க்கை வாழ வழிகாட்டியுள்ளது, புறநானூறு.

பொருளியலும் புறநானூறும்

பண்டைத்தமிழரின் அறநெறி வாழ்க்கை

//உலகில் எங்கும் காணப்படாத தமிழரின் அறநெறி//

செல்வத்துப் பயனே ஈதல்

//பொருளியலின் செல்வப் பகிர்வுக் கோட்பாடு புறநானூற்றில் மிளிர்கிறது//

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

//அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் உண்பது நாழி, உடுப்பவை இரண்டே//

//செல்வம் நிலையில்லாதது. மிகுதியான செல்வத்தை வீட்டிற்குள் பூட்டி வைப்பது அறமாகாது. வறியவருக்குப் பயன்படும்படி செய்தலே அறமாகும்//

புறநானூறு 189

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி 

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் 

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், 

உண்பது நாழி உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே,

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே; தப்புந பலவே.


பாடலின் பொருள்

தெளிந்த நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுவதையும் பிற வேந்தற்குப் பொதுவாதலின்றித் தமக்கே உரித்தாக ஆட்சிசெய்து வெண்கொற்றக் குடையால் காத்த அரசருக்கும், இடையாமத்தும் நண்பகலும் துயிலாது விரைந்த வேகம் கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியறிவு இல்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாளித் தானியமே; உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை ஆகிய இரண்டே; இவற்றைப் போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே விளங்கும். எனவே செல்வத்தால் பெறும்பயன் பிறருக்கு கொடுத்தலே ஆகும். செல்வத்தைத் தாமே நுகர்வோம் எனக் கருதினால் அறம், பொருள், இன்பம் ஆகியன கிடைக்கா.


-மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

உலகம் அழியுமா? புறநானூறு

உலகம் அழியாமல் இருக்கக் காரணமாகப் புறநானூறு கூறுவது...


//பிறருக்காக வாழும் நல்லவர்கள் இருக்கும் வரை உலகம் அழியாது.//

புறநானூறு 182

உண்டால் அம்ம, இவ்வுலகம் - இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் 

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர் ;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் 

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,

 உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்வு இலர்; 

அன்ன மாட்சி அனைய ராகித்,

 தமக்கென முயலா நோன்தாள்,

 பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. 

பாடலின் பொருள் :

தேவருக்கு உரிய அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனக் கொண்டு தனித்து உண்டலும் இலரே.  பிறர் அஞ்சத் தகும் துன்பத்திற்கு அஞ்சி, அதைத் தீர்க்கும் பொருட்டு சோம்பி இருத்தலும் இலர். புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர். பழி எனின் அதனால் உலகம் முழுவதும் பெறினும் கொள்ளார்.  மனக் கவலை இல்லார். அத்தகைய உயர்ந்த தன்மையராய்த் தமக்கென முயலா பிறர்க்கென முயலும் சான்றோர் இருப்பதால்தான் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது 

-கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய பாடல் இது

வரிச்சுமை GST - புறநானூறு

அரசனுக்கு அறிவுரை

வரி மேல் வரி விதித்து மக்களைத் துன்புறுத்த கூடாது என்று பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்குப் புலவர் பிசிராந்தையார் அறிவுரை கூறுவதாகப் பாடிய புறநானூற்றுப் பாடல்....(184)

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே; 

மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்; 

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, 

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; 

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, 

கோடி யாத்து நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் 

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, 

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், 

யானை புக்க புலம் போல, 

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.


பாடலின் பொருள்:

ஒரு மாவிற்குக் குறைந்த நிலம் ஆயினும் அதில் விளைந்த காய்ந்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொண்டால் யானைக்குப் பல நாள்களுக்கு அது உணவாகப் பயன்படும். நூறு வயல்கள் ஆயினும் யானை தனித்துச் சென்று புகுந்து உண்டால் அதன் வாயில் புகுந்த நெல்லை விட அதன் காலடியில் பட்டு அழிவது மிகுதியாகும். அறிவுடைய அரசன் தான் கொள்ளும் அரசு இறையைக் (வரியை) கொள்ளும் அளவு (மக்கள் தாங்கும் அளவு) அறிந்து கொள்ள (வரி வசூலிக்க) வேண்டும். அவ்வாறு செய்தால் அவன் நாடு கோடி பொருளை ஈட்டிக் கொடுத்துச் செழிப்படையும்.   வேந்தன் அறிவு குறைந்து நாள்தோறும் முறை அறியாத ஆரவாரம் உடைய சுற்றத்துடன் சேர்ந்து குடி மக்களின் அன்பு நீக்குமாறு கேட்டுப் பெரும்பொருளை விரும்பினால், அது அந்த யானை புகுந்த நிலம் போல் தானும் உண்ணப் பெறாமல் உலகமும் கெடும்.


-பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் பாடியது.