பத்தாம் வகுப்பு இயல் 6
பலவுள் தெரிக
1.குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
2.கூற்று 1: போராட்ட பண்புடனே வளர்ந்தவர் கலைஞர் கூற்று ரெண்டு அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
கூற்று 1 மற்றும் 2 சரி
3.மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
தளரப் பிணைத்தால்
4.தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது.- இத்தொடருக்கான வினா எது?
கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
5.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அங்கு வறுமை இல்லாததால்
குறுவினா
1.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள் கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
முதற்பொருள்
1.நிலம்-காடு (முல்லை)
2.பொழுது-
- பெரும்பொழுது-மழைக்காலம்(கார்காலம்)
- சிறுபொழுது-மாலை
கருப்பொருள்:
உணவு: வரகு
2.“கலைஞர், பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளர், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்”- பேராசிரியர் அன்பழகன். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
கலைஞர், பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளராகவும், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளராகவும் திகழ்ந்ததாகப் பேராசிரியர் அன்பழகன் பாராட்டியுள்ளார்.
3.உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
- உறங்குகின்ற “கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!” என்ற சொல்லி எழுப்புகிறார்கள்.
- “காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!” என்று அவனை உறங்கச் சொல்கிறார்கள்.
4.சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித்தண்டுகள். இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
- ஒல்லித்தண்டுகளே பெரிய மலர்களைத் தாங்குகின்றன.
- அதுபோல, மென்மையான அன்பு என்னும் பண்பே அமைதியான பிரபஞ்சத்தைச் சுமக்கின்றது.
5.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லை பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
- உழவர்கள் வயலில் உழுதனர்.
- நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
சிறுவினா
1.வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
- திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும்.
- இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும்.
- பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயறு சரிந்தாடட்டும்.
- பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும்.
- கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும்.
- உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும்.
- தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளியுள்ள முருகனே! செங்கீரை அடி அருள்க!
- இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.
2.நவீன கவிதையில் வெளிப்படும் நுன்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
நவீன கவிதை
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்.
நாட்டுப்புறப் பாடல்
கையாலே பூவெடுத்தா - மாரிக்கு
காம்பழுகிப் போகுமின்னு
விரலாலே பூவெடுத்தா- மாரிக்கு
வெம்பி விடுமென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு மாரிக்குத்
தாங்கி மலரெடுத்தார்.
நாட்டுப்புறப் பாடலிலும் வெளிப்படும் நுண்மை உள்ளம்
- மலர்கள் மென்மையானவை. மனமே நூலாகும் நுண்மையுற்றாலொழிய பூத்தொடுப்பது அரிது. மிகுந்த கவனத்தோடு பூத்தொடுக்க வேண்டும் என்ற நுட்பம், நாட்டுப்புறப் பாடலிலும் வெளிப்படுகிறது.
- மலரைக் கையாலோ விரலாலோ பூத்தொடுத்தால் பாழாகிக் போய்விடும். அதனால் அழுக்குப் படாமல் மிகுந்த கவனத்தோடு, தங்கத் துரட்டி கொண்டு மாரியம்மனுக்கு மலர் பறித்தனர்.
3.‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’.- காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணை நிலைத்தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
- குறிஞ்சி: அன்று தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல். இன்று இவற்றுடன் சுற்றுலாவும் வளர்ச்சியடைந்துள்ளது.
- முல்லை: அன்று ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல். இன்று காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- மருதம்: அன்று நெல்லரிதல், களைபறித்தல். இன்று இவற்றுடன் பலவகைத் தொழில்களும் பெருகியுள்ளன.
- நெய்தல்: அன்று மீன்பிடித்தல், உப்பு விளைத்தல். இன்று இவற்றுடன் பல்வகைப் தொழில்களும் நடைபெறுகின்றன.
- பாலை: அன்று வழிப்பறி, நிரைகவர்தல். இன்று இத்தகைய தொழில்களுக்கு இடமில்லை.
4.தமிழ் மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.
- மனோன்மணியம் சுந்தரனாரின் “நீராரும் கடலுடுத்த” என்னும் பாடலை அரசுவிழாக்கள் அனைத்தும் தொடக்கப் பாடலாக பாடுவதற்கு வழிவகுத்தார்.
- அத்துடன், கல்வித்துறையைப் பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்ததோடு தமிழ் வளர்ச்சித்துறை எனப் புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்குத் தமிழறிஞர் ஒருவரையே அமைச்சராக்கி அழகு பார்த்தார்.
நெடுவினா
1.நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக
பாராட்டுரை
பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது. விரல் நுனியில் காட்சிகளை மாற்றி கண்முன்னே நிறுத்துவது இதன் சிறப்பம்சம். உயிருள்ள மனிதர்கள் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளுணர்வில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.
நெகிழிப் பைகளின் தீமை
நமது பள்ளி ஆண்டு விழா என்பது ஒவ்வொரு மாணவருக்கும் மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். என்றும் பசுமையான நினைவுகளாக இருக்கக்கூடிய ஆண்டுவிழாவில், ஆண்டுதோறும் புதியபுதிய சிந்தனைகளை மாணவர்கள் மனத்தில் விதைப்பீர்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நெகிழிப்பைகளின் தீமையைக் கருவாகக் கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதை விதைப்பதற்கு நமது பாரம்பரியக் கலையான பொம்மலாட்டக் கலையைத் தேர்வு செய்த பள்ளி ஆண்டுவிழா ஏற்பாட்டாளர்களுக்குத் தலை வணங்குகிறேன்.
பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர்வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. நீர்தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. நெகிழிப்பைகள் பல்லுயிர்பெருக்கச் சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன.
நிகழ்ச்சியின் தாக்கம்
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல இந்த நிகழ்ச்சியின் மூலம் பொம்மலாட்டக் கலையின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டதோடு நெகிழிப் பைகளின் தீமைகளையும் அறிந்துகொண்டோம். நெகிழிப் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற மனமாற்றத்தைப் பெற்றோம்.
நிறைவாக…
அழிவில் இருக்கும் பொம்மலாட்டக் கலையைக் காக்க மத்திய மாநில அரசுகள் பள்ளிப்பாடத்திட்டத்தில் செயல்முறைப்பயிற்சியாக பொம்மலாட்டத்தை வைக்க வேண்டும் என்று கூறி எனது பாராட்டுரையை நிறைவு செய்கிறேன்.
போராட்டக் கலைஞர்- பேச்சுக் 2.கலைஞர்- நாடகக் கலைஞர்- திரைக்கலைஞர்- இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
பன்முகக் கலைஞர்
முன்னுரை
இயற்பெயர் மறைந்து இட்டபெயர் நிலைக்கும் அளவுக்குக் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை அடையாளப்படுத்தி தன்னைப் பெருமை படுத்திக் கொண்டது கலை! கலைஞர் பகுத்தறிவுக்கொள்கை பரப்பும் சிந்தனையாளர்; பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளர்; படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்; கலைத்துறையில் வாகைசூடிய படைப்பாளர்; தொட்டது துலங்க துறைதோறும் தம் முத்திரை பதிக்கும் திறமையாளர்; முத்தமிழிலும் வல்ல வித்தகர்; செந்தமிழுக்கு ஒரு தீமையெனில் தம்முயிரும் தந்திடத் துணியும் தியாகத் திருவுருவம்!
போராட்டக் கலைஞர்
கலைஞர் திருவாரூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அரசியல் அரிச்சுவடியாய் அமைந்த ஒரு புத்தகத்தைத் துணைப்பாடமாகப் படித்தார். பள்ளி முடிந்த மாலை வேளைகளில் தாம் எழுதிய ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச்!’ என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் வந்தார். இப்படிப் போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.
பேச்சுக் கலைஞர்
பேச்சுக் கலையில் பெருவிருப்புக் கொண்ட கலைஞர் ‘நட்பு’ என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. சிறுவயதிலேயே ‘சிறுவர் சீர்திருத்தச் சங்கம்’, ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார். தாம் சென்றவிடமெல்லாம் தெளிவாகத் தமிழ்பேசித் தன்மானத்தை, தமிழ் உணர்வை, தமிழ் இலக்கியத்தை, பகுத்தறிவை, மத ஒருமைப்பாட்டை, சமூக நல்லிணக்கத்தை நமக்கெல்லாம் ஊட்டினார்.
நாடகக் கலைஞர்
இவர் எழுதிய ‘பழனியப்பன்’ என்னும் நாடகம் 1944 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னர் ‘சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப் பூ’ உட்பட பல நாடகங்களை எழுதினார். ‘தூக்குமேடை’ என்னும் நாடகத்திற்கான பாராட்டுவிழாவில்தான் அவருக்குக் ‘கலைஞர்’ என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது.
திரைக்கலைஞர்
1947இல் இராஜகுமாரி என்னும் படத்துக்கான முழுவசனத்தையும் எழுதினார். அதன்பின்னர் மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், பராசக்தி, திரும்பிப்பார், ராஜாராணி, ரங்கோன் ராதா, ஆகியவற்றுக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றார். இவரது வசனங்கள் பகுத்தறிவு, சமூகம், பெண்கள் முன்னேற்றம், அரசியல், இலக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இயற்றமிழ்க் கலைஞர்
‘கயிற்றில் தொங்கிய கணபதி’ என்ற கட்டுரை நூலை எழுதினார். பின்னர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக்கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு ஆகிய சிறுகதைகளையும் ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே ரத்தம் ஆகிய புதினங்களையும் சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகிய உரைநூல்களையும் எழுதியுள்ளார். தம் வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.
முடிவுரை
தமிழின் பெருமிதங்களையும் விழுமியங்களையும் மீட்டெடுக்க எண்ணிய கலைஞர் அதற்கான பணிகளை தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தார். இலட்சக்கணக்கான பக்கங்கள் எழுதியதும் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியதும் அவர் அளவுக்குச் செயல்பட்டதுமான தலைவர்கள் மிகக் குறைவு. இவ்வாறு, ‘உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’ என்னும் கூற்றுக்குச் சான்றாக வாழ்ந்த கலைஞர் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் நாள் தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானார்.
3.சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட… இவ்வுரையைத் தொடர்க!
சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்
ஆன்றோர்களே, கல்வியில் சிறந்த சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத நிலக் காட்சி
வண்டுகள் பாட, மயில்கள் ஆட, மேகங்கள் மத்தளம் கொட்ட, தாமரை மலர்கள் விளக்குகளை ஏற்ற, குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்கும் மருதநிலக் காட்சியை நீரலைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இராமனின் அழகுக் காட்சி
இராமனுடைய மேனியில் பகலவனின் ஒளி கரைகிறது. மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று உவமை சொன்ன கம்பர் இறுதியில் அழியாத அழகு உடையான் என்று முடிக்கிறார்.
குகனின் மனவோட்டம்
பெரிய யானைப்படை கொண்ட பரதனை, கங்கை ஆற்றைக் கடந்து போகவிட்டால் வேடன் ஆகிய என்னை இறந்திருக்கலாமே என உலகத்தார் பழி சொல்ல மாட்டார்களா? என்று குகன் எண்ணுகிறான்.
கும்பகருணனை எழுப்புதல்
உறங்குகின்ற கும்பகருணனே, உம்முடைய பொய்யான வாழ்வு இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. இனிக் காலதூதர் கையில் படுத்து உறங்குவாயாக என்று கும்பகருணனை எழுப்புகிறார்கள்.
இவையெல்லாம் இயற்கைக் காட்சிகளைச் சந்த நயத்தோடு வருணிப்பதில் கம்பர் சிறந்தவர் என்பதற்குச் சான்று பகர்கின்றன.
கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வு குறித்துக் கட்டுரை எழுதுக
கட்டுரை -கலைத்திருவிழா
முன்னுரை
மனிதன் கொண்ட விழைவின் வெளிப்பாடே விழா. இவ்விழாவில் அவரவர் சார்ந்த சமூகத்தின் விழுமியங்கள் கலைகள் வடிவில் பொதுவில் நிகழ்த்தப்படும். சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கலைகள் மனத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருவதோடு வாழ்க்கை நெறிகளையும் வகுத்துக் கூறும். இத்தன்மை வாய்ந்த கலைத் திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று வந்தேன். அதைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.
கண்கவர் கலைத் திருவிழா
மதுரை அரசுக் கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்" என்பதை மனத்தில் கொண்டு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்திருந்தனர். "ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்" என்ற சிலப்பதிகார அரங்கம் போல் இக்கலைத் திருவிழா அரங்கம் விளங்கிற்று. வண்ணவண்ணத் தோரணங்களும் வரவேற்புப் பதாகைகளும் சிவப்புக்கம்பள விரிப்பும் விசாலமான பார்வையாளர் அரங்கும் கண்களைக் கவர்ந்தன!
நிகழ்ச்சித் தொடக்கம்
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அமைச்சர் பெருமக்கள், பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நோக்கம் மற்றும் குறிக்கோள்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த கலைத் திறன்களை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இக்கலைத் திருவிழா 2022ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற குறிக்கோளில் நடத்தப்பட்டது.
பல்வேறு போட்டிகள்
வகுப்புகள் 1-2, 3-5, 6-8, 9-10, 11-12 என ஐந்து பிரிவுகளில் கவின்கலை, இசை, நாடகம், நடனம் என்னும் வகைகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு செதுக்குச் சிற்பங்களிலும் வண்ண ஓவியங்களிலும் சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை வெளிப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறந்த சிற்பக் கலைஞர்களையும் ஓவியக் கலைஞர்களையும் அடையாளம் காண முடிந்தது.
கருவி இசையும் வாய்ப்பாட்டும்
கருவி இசைக்கென்று தனியாக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. கருவி இசையில் தோற்கருவி, துளைக்கருவி, தந்திக்கருவி எனப் பலவகை இசைக்கருவிகளை இசைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத" என்று ஆண்டாள் பாடியது போன்று மாணவர்கள் பம்பை, உறுமி, உடுக்கை, பறை, மிருதங்கம், தபேலா, டிரம்ஸ், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், கிட்டார் ஆகியவற்றை இசைத்தனர்; பார்வையாளர்கள் மயங்கினர். மற்றொருபுறம் வாய்ப்பாட்டு இசையில் பங்கேற்ற மாணவர்கள் நாட்டுப்புறப் பாடல்களையும் செவ்வியல் இசைப் பாடல்களையும் பாடி அசத்தினர்.
நடனமும் நாடகமும்
தனிநபர் நடனம் மற்றும் குழு நடனம் என்னும் இரண்டு பிரிவுகளாக நடனப் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் பாடல்களுக்கு ஏற்ப வண்ண வண்ண ஆடை அலங்காரங்களுடன் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எனப் பலவகை நடனங்களை ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். தனிநபர் நடிப்பு, பலகுரல் பேச்சு, நகைச்சுவை வழங்குதல், குழுநாடகம் என்னும் பிரிவுகளில் நாடகப் போட்டி நடத்தப்பட்டது. சூழல் பாதுகாப்பைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகங்கள் பார்வையாளர்கள் மனத்தில் பதிந்தன. மாணவர்களின் நடனமும் நடிப்பும் தேர்ந்த திரைக் கலைஞர்களைப் போலவே இருந்தது. இக்கலைத் திருவிழாக் காட்சிகளையெல்லாம்,"அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறை விரித்தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்" என்பது போல நாங்கள் நோக்கினோம்.
விருது வழங்கும் நிகழ்ச்சி
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற மாணவர்கள் முகத்திலே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. "போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாட்டுச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அமைச்சர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்த்துரையுடன் கலைத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. ஆயினும், கலைத்திருவிழாக்காட்சிகள் என் கண்களைவிட்டு அகலவே இல்லை!
முடிவுரை
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரின் நெஞ்சிலும் கலைத் திருவிழாவே குடிகொண்டிருந்தது. "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலாய்" மாணவர்கள் ஒவ்வொருவரும் கலைஞர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களின் திறன்கள் மெருகூட்டப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் மாணவர்கள் மிகப்பெரிய சாதனையைப் படைக்க இக்கலைத் திருவிழா நிச்சயம் தூண்டுகோலாக அமையும் என உறுதியாக நம்பலாம்.
மொழிபெயர்க்க
Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions covers a wide range; poems, letters, screenplays, novels, biograpies, historical novels, stage-plays, dialogues and movie songs. Written kuralovium for thirukkural, tholkappiya poonga, poompukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture.. Like the kuralovium in which kalaignar Wrote about thirukural, through the construction of valluvar kottam he have an architectural presence to thiruvalluvar, in Chennai. At kanyakumari, karunanidhi constructed a 133-foot-high statue of thiruvalluvar in honour of the scholar.
கலைஞர் கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்குத் தனது பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். அவரது பங்களிப்புகள் பரந்த அளவிலானவை; அவை கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று நாவல்கள், மேடை நாடகங்கள், உரையாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள் ஆகியனவாகும். குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார் முதலிய நூல்களையும் மற்றும் பல கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலக்கியம் மட்டுமின்றிக் கலை, கட்டிடக்கலை மூலமும் தமிழ்மொழிக்குக் கருணாநிதி பங்களித்துள்ளார். திருவள்ளுவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை நிறுவியுள்ளார். கன்னியாகுமரியில் 133 அடி உயரமுடைய திருவள்ளுவர் சிலையைக் கருணாநிதி நிர்மாணித்துள்ளார்.
தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1.அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.(தனிச்சொற்றொடர்களை கலவைச் சொற்றொடராக மாற்றுக)
அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.
2.இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்ககங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார் (தொடர் சொற்றொடராக மாற்றுக)
இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்; அடுக்கி வைத்தார்; எடுத்துக் கொடுத்தார்.
3.கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர் எழுத்து வழியாக தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)
கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்து, தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.
4.முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி வார இதழாக்கி, நாளேடாக்கினார் கலைஞர். (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)
கலைஞர் முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கினார். பின்னர் அதனை வார இதழாக்கினார். பின்னர் அதனை நாளேடாக்கினார்
5.ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)
ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அதனால், அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைப்பட்டது.
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக
1.வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2.அனைவரின் பாராட்டுக்களால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது
3.வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4.கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசுமையான புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது
5.வெயிலில் அலையாதே; உடல் கருக்கும்
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக
(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து).
1.விரட்டாதீர்கள்- பறவைக்கு மரம் வீடு. வெட்டாதீர்கள் -மனிதருக்கு அவை தரும் மரவீடு.
2.காலை ஒளியினில் மலரிதழ் அவிழும். சோலைப்பூவினில் வண்டினம் கவிழும்.
3.மலைமுகட்டில் மேகம் தங்கும்- அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.
4.வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும்-இதைத் தத்துவமாய்த் தோற்பாவைக்கூத்து சொல்லும்.
5.தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது.- அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.
அகராதியில் காண்க
1.தால்- நாக்கு
2.அகவுதல்- அழைத்தல், ஒலித்தல், பாடுதல்
3.அணிமை- அண்மை, அருகு, பக்கம்
4.உழுவை- புலி
5.ஏந்தொழில்- மிகுந்த அழகு
கலைச்சொல் அறிவோம்
1.Playwrite -நாடக ஆசிரியர்
2.storyteller -கதை சொல்லி
3.screenplay -திரைக்கதை
4.Asthetics-அழகியல், முருகியல்
பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக
பிறமொழிச் சொல் -தமிழ்ச்சொல்
- கோல்ட் பிஸ்கட்- தங்கக் கட்டி
- யூஸ் பண்ணி- பயன்படுத்தி
- ஈக்வலாக- சமமாக
- வெயிட்- எடை
- பட்- ஆனால்
- எக்ஸ்பெரிமெண்ட் -பரிசோதனை
- ரிப்பீட்- மீண்டும்
- ஆன்சர் -விடை
- ஆல் தி பெஸ்ட் -வாழ்த்துக்கள்
நிற்க அதற்குத் தக
நீங்கள் படித்து முடித்த பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.
- என் துறையில் வல்லுநரானபின் அத்துறையினைப் பற்றிய நூல்களைத் தமிழாக்கம் செய்வேன்
- என் துறையில் இருக்கும் கலைச்சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன்.
- என் துறையைத் தமிழோடு தொடர்புபடுத்துவேன்.
- என் துறையின் சிறப்புக் கூறுகளைத் தமிழ்ப் படுத்துவேன்.
- என் துறையைத் தமிழர் வாழ்வுக்காக மேம்படுத்துவேன்.
திருக்குறள் குறுவினா
1.கரப்பிடும்பை இல்லார்’ இத்தொடரின் பொருள் கூறுக.
கரப்பிடும்பை இல்லார்:
‘தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்’ என்பது இதன் பொருளாகும்.
2.தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.
- தஞ்/சம் – நேர் நேர் – தேமா
- எளி/யர் – நிரை நேர் – புளிமா
- பகைக்/கு – (நிரை நேர்) – நிரைபு - பிறப்பு (வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீராகக் கருதி)
3.வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
குறளின் கருத்து:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.
4.பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.
- செந்நாப்போதார், உழைத்ததால் கிடைத்த ஊதியத்தைக் கூரான ஆயுதம் என்கிறார்.
- ஏனெனில், உழைத்ததால் கிடைத்த ஊதியமே, பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்.
சிறுவினா
1.வள்ளுவம் , சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
அமைச்சு
- ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார்.
- மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சர் ஆவார்.
- இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் பெற்றிருப்பவரே அமைச்சர் ஆவார்.
- ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார்.
- இவ்வாறாக வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துகின்றன.
2.பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
தமக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்காதவருக்கு வள்ளுவர் கூறும் அறிவுரை:
- சுற்றத்தாருடன் ஒருவர், அன்பு இல்லாமலும், பொருந்திய துணை இல்லாமலும், வலிமை இல்லாமலும், இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?
- மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் அன்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.