பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 'மரம் நடும் விழாவுக்கு' வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும் பெற்றோருக்கும் பள்ளியின் பசுமை பாதுகாப்புப்படை சார்பாக நன்றியுரை எழுதுக.
நன்றியுரை
இடம்:சங்கரலிங்கபுரம்
நாள் : 24.09.2020
எங்களது பள்ளியில் நடைபெற்ற மரம் நடு விழாவிற்கு வருகை தந்து சிறப்புச் சேர்த்த சான்றோர் பெருமக்களே!
மரம் நடுவதன் அவசியம் குறித்து சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த வனப்பாதுகாப்பு அலுவலர் அவர்கள் கூறிய அறிவுரைகள், எங்களது நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்தது. பசுமைப்படை திட்ட அலுவலரும், பள்ளித் தலைமை ஆசிரியரும் வழங்கிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்தது.
நம் பள்ளியின் பசுமை படை அலுவலர், "மரம் இயற்கை நமக்கு தந்த வரம். உண்ணக் கனியும் ஒதுங்க நிழலும் தந்தது; உடலுக்கு மருந்தும், உணர்வுக்கு விருந்தும் தந்தது; அடையக் குடிலும், அடைக்கக் கதவும் தந்தது; அழகு வேலியும், ஆடத் தூலியும் தந்தது; தடவத் தைலமும் தாளிக்க எண்ணையும் தந்தது; எழுதக் காகிதமும் எரிக்க விறகும் தந்தது. மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்! மறந்தான் மறந்தான், மனிதன் மறந்தான்.
மனிதா, மனிதனாக வேண்டுமா? மரத்திடம் வா. ஒவ்வொரு மரமும் போதி மரம்!!" என்று பேசினார். அவரது கருத்து எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது.
மரங்களின் வகைகள், அவற்றின் பயன்கள், எந்தெந்த மண்ணில் எந்தெந்த மரங்கள் வளரும், மரங்களின் பொருளாதார பயன்கள், பருவநிலை மாற்றம், எதிர்காலச் சவால்கள் குறித்த தகவல்களை இந்த விழா மூலமாக நாங்கள் அறிந்து கொண்டோம்.
இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த சிறப்பு விருந்தினர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பசுமைப் பாதுகாப்பு படை சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விழா சிறப்புடன் நடைபெறக் காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்!
No comments:
Post a Comment