Sunday, October 18, 2020

3 மதிப்பெண் வினாக்கள், இயல் 2

 இயல் 2

3 மதிப்பெண் வினாக்கள்


1). உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் 'காற்று' தன்னைப் பற்றிப் பேசுகிறது.  இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.


நீர் - தன் வரலாறு கூறுதல்

குறிப்புச் சட்டகம்


  1. அமிழ்தாக நான்
  2. ஆற்றலாக நான்
  3. இலக்கியத்தில் நான்
  4. உருமாறும் நான் 
  5. சடங்குகளில் நான் 
  6. பல பெயர்களில் நான்

2). சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் எழுதுக.

(சோலைக்காற்றும் மின்விசிறிக்காற்றும் பேசிக் கொள்கின்றன)

சோலைக் காற்று: மலைவீழ் அருவியும், குளிர்பூஞ்சோலையும், ஓங்குயர் மரங்களுமே எனது பிறப்பிடமும் இருப்பிடமும் ஆகும்.

மின்விசிறிக் காற்று: மின்னோட்டத் தூண்டுதலில் பிறந்து, அறைகளின் சுவர்களுக்கு இடையே முடங்குகிறேன்.

சோலைக் காற்று: குளிரிளந்தென்றலாய் நறுமண மலர்களைப் பருகி வரும் என்னில், உலவி மகிழ மாலையில் கூடுவர், மனிதர்.

மின்விசிறிக் காற்று: வெதுவெதுப்பான இதந்தரும் என்னில், வேண்டும் போதெல்லாம் வியர்வை துடைத்துக் களைப்பைப் போக்குவர், மனிதர்.

சோலைக் காற்று: கவிஞர்கள் என் அருமை உணர்ந்து கவிதை வடிப்பர்.  கற்பனையில் என்னைத் தூது விடுப்பர்.

மின்விசிறிக் காற்று: மின்சாரம் இன்றி நான் இல்லை.  எனினும்,  நான் இன்றி அலுவலகமே இல்லை என்னும் அளவில் பெரிதும் பயன்படுகிறேன். நமக்கு இருக்கும் ஒரே எதிரி 'மாசு' மட்டுமே.  மாசினைக் குறைப்பது மனிதர்களின் கடமை. மனிதர்கள் நமக்காக இல்லாவிட்டாலும், தமக்காகவாது மாசினைக் குறைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி, நண்பா!


3). மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணித்து எழுதுக .

குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் - தேங்கிய குட்டையில் ' சளப் தளப் ' என்று குதிக்கும் குழந்தைகள் - ஓடும் நீரில் காகிதக் கப்பல் .

மழை நின்றவுடன் புலப்படும் காட்சி


மழை நின்றது. தூவானம் மெல்ல மெல்ல வெளிறியது. வெண்மேகம் ஓய்வெடுக்க மலைச்சரிவைத் தேடியது.  இலைகளிலிருந்து நீர் 'சொட் சொட்' என்று சொட்டியது. ஒடுங்கியிருந்த கானக்குயில் பாடியது. கோல மாமயில் ஆடியது. சில்லென்று பரவிய காற்றால், உடலெங்கும் மெல்லிய குளிர் ஓடியது.  

தேங்கிய குட்டையில் 'சளப் சளப்' என்று குழந்தைகள் குதிக்கின்றனர்; ஒருவர் மேல் ஒருவர் சேற்றை வாரி இறைக்கின்றனர்; காகிதக் கப்பல்களை ஓடவிடுகின்றனர்.  

ஒதுங்கியிருந்த கோழிகள் தலைகாட்டுகின்றன; நழுவிச் செல்லும் மண்புழுக்களைக் கொத்தித் தின்கின்றன.

4). தோட்டத்தில் மல்லிகைப்பூப் பறித்த பூங்கொடி வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டிற்கு வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.

தொகைச்சொற்கள்:


மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
இதில் 'மல்லிகை' என்பது சிறப்புப் பெயர்.  'பூ' என்பது பொதுப் பெயர்.  இவ்வாறு முதலில் சிறப்புப் பெயரும், அதனைத்தொடர்ந்து பொதுப் பெயரும் இணைந்து வருவது 'இருபெயரொட்டுப் பண்புத்தொகை' ஆகும்.

பூப்பறித்த- இரண்டாம் வேற்றுமைத்தொகை.
'பூப்பறித்த' என்பது 'பூவைப் பறித்த' என விரிந்து வரும். இதில் 'இரண்டாம் வேற்றுமை உருபு' மறைந்து வந்துள்ளது. எனவே, இது 'இரண்டாம் வேற்றுமைத் தொகை' ஆகும்.

ஆடுமாடுகள்- உம்மைத்தொகை.
'ஆடுமாடுகள்' என்பது 'ஆடுகளும் மாடுகளும்' என விரிந்து வரும். இதில் 'உம்' என்ற உருபு மறைந்து வந்துள்ளதால், இது 'உம்மைத்தொகை' ஆகும்.

தண்ணீர்த்தொட்டி -இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
 'தண்ணீர்த் தொட்டி' என்பது 'தண்ணீரை உடைய தொட்டி' என விரிந்து பொருள் தரும்.  இதில் 'ஐ' என்ற வேற்றுமை உருபும் 'உடைய' என்ற உருபின் பயனும் மறைந்து வந்துள்ளதால், இது 'இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை' ஆகும்.

குடிநீர் நிரப்பினாள்- இரண்டாம் வேற்றுமைத்தொகை.
'குடிநீர் நிரப்பினாள்' என்பது 'குடிநீரை நிரப்பினாள்' என விரிந்து பொருள்தரும்.  இதில் 'ஐ' என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால், இது 'இரண்டாம் வேற்றுமை தொகை' ஆகும்.

குடிநீர்- வினைத்தொகை.
'குடிநீர்' என்பது குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர் என்று விரியும். இவ்வாறு, பெயரெச்சமும் முக்காலமும் (கரந்து) மறைந்து வருவது 'வினைத்தொகை' ஆகும்.

சுவர்க் கடிகாரம்- ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை.
'சுவர்க்கடிகாரம்' என்பது 'சுவரின் கண் உள்ள கடிகாரம்' என விரிந்து பொருள் தரும். இதிலுள்ள 'கண்' என்ற ஏழாம் வேற்றுமை உருபும், 'உள்ள' என்ற உருபின் பயனும் மறைந்து வந்துள்ளதால், இது 'ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை' ஆகும்.

மணி பார்த்தாள்- இரண்டாம் வேற்றுமைத் தொகை.
'மணி பார்த்தாள்' என்பது 'மணியைப் பார்த்தாள்' என விரியும். இதில் 'ஐ' என்ற இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளதால், இது 'இரண்டாம் வேற்றுமைத்தொகை' ஆகும்.


No comments:

Post a Comment