Friday, October 2, 2020

5 மதிப்பெண் வினா சொற்பொழிவு, பரிபாடல்

 

நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.


சொற்பொழிவு

தலைப்பு: தமிழ் இலக்கியத்தில் அறிவியல்

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர்.  ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில், அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும் புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள்,  இலக்கியங்களில் உள்ளன.  சங்க இலக்கியமான பரிபாடலில்....


தூசுத்திரட்சியால் உண்டாகும் நெபுலாக்களில் இருந்து எப்படி நட்சத்திரங்கள் தோன்றி அழிகின்றனவோ அப்படி இந்த உலகமும் தோன்றி அழிவதை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கீராந்தையார் என்னும் சங்ககாலத் தமிழ்ப்புலவர் கூறியுள்ளார்.


தொன்றுதொட்டு வரும் இயற்கையின் நியதிப்படி சந்திரனும் ஏனையவையும் அழிந்த ஊழியின் முடிவில் மீண்டும் உலகம் தோன்றுவதை பரிபாடல் சொல்கிறது. 

(1). "விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல".  அதாவது, ஒன்றுமில்லாத ஊழிக்காலம் வந்தது. அந்த ஊழிக்காலம் செல்ல,

(2). "கரு வளர் வானத்து இசையில் தோன்றி, உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்". அதாவது, பரம அணுவிலிருந்து தோன்றிய ஓசையால் உருவம் இல்லாத ஆகாயம் தோன்றியது.

(3). "உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ் ஊழியும்". அதாவது, பரம அணுவைச் சுற்றிச் சுழல்கின்ற காற்றால் உப்பிய காற்றின் ஊழிக்காலம் வந்தது.

(4).  "செந்தீச்சுடரிய ஊழியும்". அதாவது, காற்றினால் செந்நிறத்தில் ஒளிரும் நெருப்பு ஊழிக்காலம் வந்தது.

(5). "பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்". அதாவது, காற்று மற்றும் நெருப்பின் விளைவால் பனியும் மழையும் பெய்த ஊழிக்காலம் வந்தது.

(6). "அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்". அதாவது, வெள்ளத்தால் மூடி இருந்த நிலம் எரிமலை வெடிப்புகளால் மீண்டும் மேலெழுந்து நிலமும் கடலும் தோன்றியது.


இதேபோன்று, மற்றொரு சங்க இலக்கியமான புறநானூறு, உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்பதை, "மண் திணிந்த நிலனும்

நிலம் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போல்" என்று குறிப்பிடுகிறது.

தானியங்கி விமானம் குறித்து 'வலவன் ஏவா வான ஊர்தி' என்று குறிப்பிடுகிறது.  

வானவெளியில் உள்ள வெற்றிடம் குறித்து 'வறிது நிலைஇய காயமும்' என்கிறது.


'சுழன்றும் ஏர்பின்னது உலகம்' என்ற குறள் மூலம் உலகம் உருண்டை என்பதையும், 'மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி' என்ற குறள் மூலம் திங்களுக்குத் தானாக ஒளிவிடும் தன்மை இல்லை என்பதையும், 'திங்களைப் பாம்பு கொண்டற்று' என்ற குறள் மூலம் சந்திரகிரகணம் பற்றியும் திருக்குறள் குறிப்பிடுகிறது.

"தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும்" என்ற கபிலரின் வரிகள் ஒளியியல் குறித்த அறிவுக்குச் சான்றாகும்.

'புல்லாகிப் பூடாகி' எனத்தொடங்கும் திருவாசக வரிகள் பரிணாம வளர்ச்சி குறித்துக் கூறுகிறது.

'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி' என்னும் அவ்வையாரின் வரிகள் அறிவியல் அறிவைப் பறைசாற்றுகின்றன.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" எனும் குறள் மருத்துவ அறிவை வெளிப்படுத்துகின்றது.

இவையெல்லாம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறிவியல் செய்திகள் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.  

நன்றி, வணக்கம்!

No comments:

Post a Comment