நிகழ்கலை வடிவங்கள்- அவை நிகழும் இடங்கள் - அவற்றின் ஒப்பனைகள் - சிறப்பும் பழைமையும் - இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் - அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன - இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
தலையங்கம்
தலைப்பு : நிகழ்த்துக் கலைகள்
மனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர் கேட்போர் மனத்தில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பண்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்தப்படுவது என்று தற்காலத் தமிழகராதி விளக்கமளிக்கிறது. இந்த அழகியல் உணர்வு வாழ்க்கை அனுபவத்திலிருந்து பெறப்பட்டுக் கலைத் தன்மையோடு நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
நிகழ்கலை வடிவங்கள்
மக்களின் முன் நிகழ்த்திக் காட்டும் வகையிலான கலைகளே நிகழ்த்துக் கலைகள் ஆகும். அவை ஆடலாகவோ, பாடலாகவோ, ஆடலும் பாடலும் இணைந்தோ, ஆடல் பாடல் உரையாடலுடன் கலந்தோ, ஒரு கலைஞராலோ, கலைஞர்கள் பலர் இணைந்தோ, ஒரு நிகழ்ச்சியையோ, கருத்தையோ, கதையையோ பார்வையாளர்கள் முன் நிகழ்த்திக் காட்டுவதாக அமையும். தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் நிகழ்த்துக் கலைகள் தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பகல் வேடம், சேவையாட்டம், உடுக்கைப் பாட்டு, ஒயிலாட்டம், கணியான் கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், குதிரை ஆட்டம், தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டம் எனப் பல வடிவங்களில் நிகழ்த்தப்படுகின்றது.
நிகழ்விடங்கள்
நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளை நிகழ்த்துவதற்கென்று குறிப்பிட்ட இடமோ, களமோ, அரங்கமோ கிடையாது. எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் (கோயில், ஊர்மந்தை, தெருக்கள்) நிகழ்த்திக் கொள்ளும் சுதந்திரப் போக்கைக் கொண்டவையாகும். சிறுதெய்வ வழிபாடுகளின் போது எங்கெல்லாம் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கலைஞர்களும் சென்று ஆடுவார்கள். தெய்வங்களை அலங்கரித்து ஊர்வலம் வரும்போது, அதன் முன்னால் கலைஞர்கள் ஆடிச் செல்வர். நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளுக்கான ஆடுகளம் விரிந்த பரப்பைக் கொண்டது.
ஒப்பனைகள்
நிகழ்த்துக் கலைகளில் இசையும் ஒப்பனையும் இருகண்களாக விளங்குகின்றன. கரகாட்டத்தை இசையின்றி இரசிக்க இயலாது; அதேபோல், தெருக்கூத்தை ஒப்பனையின்றிப் பார்க்க இயலாது. 'ஆள்பாதி ஆடைபாதி' என்ற பழமொழி நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளுக்கே பொருத்தமானதாகும். நிகழ்த்துக் கலைகளின் வடிவங்களுக்கு ஏற்பவும், கதாபாத்திரத்திற்கு ஏற்பவும் கலைஞர்கள் தங்களைத் தாங்களே ஒப்பனை செய்து கொள்கின்றனர். ஒரு கலைஞர் தமது குழுவினருக்கு ஒப்பனை செய்வதும் உண்டு. கலைஞர்களின் உடையலங்காரமும் முகப் பூச்சுமே பார்வையாளர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிகமான முகப் பூச்சு, பளபளப்பான ஜிகினா உடை, கதாநாயகர்கள் போன்ற தோற்றம் ஆகியவை நாட்டுப்புற நிகழ்த்துக் கலைஞர்களுக்கான பொது உடை ஒப்பனை முறையாகக் காணப்படுகிறது.
தெருக்கூத்து, கரகாட்டம், கணியான் கூத்து, குறவன் குறத்தி ஆட்டம், சேவையாட்டம், காளியாட்டம், பகல் வேடம் போன்ற நிகழ்த்துக் கலைகளின் உடை ஒப்பனை முறைகள் ஏனைய கலைகளிலிருந்து மாறுபட்டதாகவும் கூடுதல் தன்மை உடையவையாகவும் அமைந்துள்ளன.
நிகழ்த்துக் கலைகளின் சிறப்பு
நிகழ்கலைகள் ஊரக மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. இவை கற்றோராலும் மற்றோராலும் விரும்பப்படும் கலைகளாக உள்ளன; உழைப்பாளர்களின் உணர்வுகளாக உள்ளன; மக்களுக்கு மகிழ்ச்சி என்னும் கனி கொடுத்து கவலையைப் போக்குகின்றன. பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் துணை செய்கின்றன; எண்ண வெளிப்பாடாக, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக, மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்கமுடியாத பண்பாட்டுக் கூறுகளாக விளங்குகின்றன.
நிகழ்த்துக் கலைகளின் பழமை
நிகழ்த்துக்கலைகள் தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூறுவது எளிதன்று. அவை மக்களின் வாழ்க்கைச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. மக்களின் மத வழிபாடு மற்றும் சடங்குகளின் நீட்சியாக இக்கலைகள் வளர்ச்சி பெற்றன. தொடக்கக் கால மனிதன் தான் கண்டவற்றைப் போலச்செய்தலாய் நிகழ்த்திக் காட்டி அதனை முறைப்படுத்திக் கலைவடிவம் ஆக்கினான். அக்கலைகளில் ஆடலும் பாடலும் சிறப்பிடம் பெற்றன. பின்னாளில் கதைக் கூறுகள் சேர்க்கப்பட்டு உரையாடல் இடம் பெற்றது. இந்நிலையில் கலைகளின் தன்மைக்கேற்ப, அவை பெயர் சூட்டப்பட்டு, நிலைத்த கலை வடிவங்களாய் உலா வந்தன. ஒவ்வொரு நிகழ்த்து கலையும் தனக்குள் பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டமைந்தது.
மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள்
- இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றன. இதனால், தகவல் தொடர்பிற்கும், பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன.
- பொருளாதார வளர்ச்சி கோவில் சடங்குகளின் போக்கை மாற்றி இருக்கின்றது.
- கலைஞர்கள் மதுவுக்கு அடிமையாதல், சேமிப்புப் பழக்கமின்மை, அரசுச் சலுகைகள் பற்றிய அறியாமை, கலைகளுக்கான விருதுகளில் பாரபட்சம், நிகழ்த்துக்கலைகளுக்கான கருவிகள் மற்றும் உபகரணங்களின் விலை உயர்வு, இடைத்தரகர்களின் ஆதிக்கம், சாதி இறுக்கம், சமூக முன்னேற்றம் போன்றவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
- போதிய அளவில் நிகழ்ச்சிகளும் வருமானமும் இல்லை என்பதால் கலைஞர்களும் வேறு தொழில்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.
நிகழ்த்துக் கலைகளை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன:
- 'நிகழ்த்துக் கலைகள் - நமது பண்பாட்டின் விழுமியங்கள்' என்ற உணர்வை இளைஞர்களிடம் விதைக்க வேண்டும்.
- நிகழ்த்துக் கலைகளுக்கு முறையான அங்கீகாரமும் திறமைக்கேற்ற ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வழிபாடுகளில் நிகழ்த்துக் கலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- நிகழ்த்துக் கலைஞர்களின் மீதான சாதிய இறுக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
- மற்ற கலைஞர்களுக்கு வழங்கப்படுவது போலவே நிகழ்த்துக் கலைஞர்களுக்கும் விருதுகளும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment