அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்
முன்னுரை
அறிவை விட முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில், அறிவு என்பது
நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்த பேரண்டத்தையும் அளப்பது.
ஹாக்கிங்குடன் நான்…
நாசா நடத்திய தேர்வில் நான் முதலிடம் பெற்றதால், ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றேன். ஏற்கனவே
அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் “காலத்தின்
சுருக்கமான வரலாறு” நூலை வாசித்திருந்தேன். அதனால் பேரண்டம் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம்
மேலிட்டது.
தன்னம்பிக்கை மனிதர்
கொலம்பியா விண்வெளி ஓடத்தில் அமர்ந்தோம். அவர் புன்முறுவல் செய்தார். என்னுடைய மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை. சக்கரநாற்காலியில்
அமர்ந்திருந்த அவரின் கன்னத்தசை அசைவுகளை உள்வாங்கி, நுண்ணறிவுக்
கணினி என்னிடம் மொழிபெயர்க்கத் தொடங்கியது. அவரின்
தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைத்தது.
கலந்துரையாடல்
அவருடனான கலந்துரையாடலின்போது பல செய்திகளைத்
தெரிந்து கொண்டேன். மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை. அறியாமை அறிவாற்றலில் மிகப்பெரிய எதிரி
அல்ல. அது அறிவின் மாயை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதைக் கணிதவியல்
அடிப்படையில் விளக்கினார். இப்பிரபஞ்சத்தைப்
படைத்தவர் ‘கடவுள்’ என்ற கருத்தை மறுத்தார்.
கருந்துளை
நம் பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன.
ஒரு விண்மீனின் ஆயுட்கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை சுருங்கி, அதன் ஈர்ப்பு உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. அப்போது அதிலிருந்து ஒளிகூட தப்பி வரமுடியாது. அதனைச் சுற்றிய பகுதிகளில் இருந்து வரும் கதிர்வீச்சுகளைக்
கொண்டுதான் அது ஒரு கருந்துளை என்பதை அறிய முடியும். அது இறுதியில்
வெடித்துச் சிதறிவிடும். சிதறியவை மீண்டும்
நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகும். ஆகவே, கருந்துளை என்பது படைப்பு ஆற்றல்.
பெற்ற விருதுகள்
- அமெரிக்க அதிபர் விருது
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது
- உல்ஃப் விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
நகைச்சுவை உணர்வு
தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என
நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது
ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? எள்ளி நகையாடுகிறார்.
துணிச்சல்காரர்
சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து
தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய
ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.
உலகிற்கு எடுத்துக்காட்டு
"உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ ஊனமோ ஒருவனுக்குக்
குறையாகாது. ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத்தன்மை இல்லாமல் இருப்பதே
குறையாகும்" என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ஹாக்கிங்.
முடிவுரை
விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். அவர் என் மனக்கண்ணில் தன்னம்பிக்கையின் சிகரமாக நிழலாடுகிறார். அறிவுத்தேடலில் உடல் உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை. அவரின் வாழ்வு உலகிற்கான பாதை.
No comments:
Post a Comment