இயல் 7
தலைப்பு : உழவன்
ஏர்பிடித்து உழுபவன்...
ஏற்றம்கட்டி இறைப்பவன்...
இறைவனுக்கு அடுத்தவன்...
இருதொழிலே தெரிந்தவன்...
வள்ளலாரின் மூத்தவன்...
வழுவாமல் காப்பவன்...
பசிப்பிணி அறிந்தவன்...
பயிர்களை ஆள்பவன்...
பேரிடரைப் பொறுப்பவன்...
பெருமைதான் சொல்லிடவோ..!
விளக்கம்:
ஏர்பிடித்து உழுபவன் - தனது வலிமையான கரங்களால் ஏர் பிடித்து உழுபவன்
ஏற்றம்கட்டி இறைப்பவன் - கமலத்தில் காளையைப் பூட்டி கிணற்றிலிருந்து நீர் இறைப்பர்.
இறைவனுக்கு அடுத்தவன் -
(உணவளித்து) மக்களைக் காப்பதில் இறைவனுக்கு அடுத்தவன்.
இருதொழிலே தெரிந்தவன் -
இறைவன் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்கின்றான். ஆனால், உழவரோ பயிரினை ஆக்கல், காத்தல் ஆகிய இரு தொழிலினை மட்டுமே செய்கின்றார். ஒருபோதும் 'அழித்தல்' என்ற தொழிலை செய்வது இல்லை. அந்தவகையில் உழவன், இறைவனை விட ஒருபடி மேலானவன்.
இங்கு, இறைவன் மூன்று தொழில்கள் செய்வதாகவும் உழவன் இரண்டு தொழில்களை மட்டுமே செய்வதாகவும் உழவனைப் பழித்துக் கூறி, பின்பு இறைவனைப் போல் 'அழித்தல்' தொழிலை உழவன் செய்யாமையால் உழவனைப் புகழ்ந்து கூறினார். எனவே, இது 'வஞ்சப்புகழ்ச்சி அணி' ஆயிற்று.
வள்ளலாரின் மூத்தவன் - 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார், வள்ளலார். பயிர் எப்போதெல்லாம் வாடிப் போகிறதோ, அப்போதெல்லாம் வாடக்கூடிய இயல்புடையவர் 'உழவர்'. அந்த வகையில் முதலில் தோன்றிய தொழில், உழவுத் தொழில். அதனால், வள்ளலாரை விட உழவரின் முகமே முதலில் வாடி இருந்திருக்கும். அதனால் வள்ளலாரை விட மூத்தவன் 'உழவன்' எனப்பட்டது.
வழுவாமல் காப்பவன் - எத்தகைய சூழ்நிலையிலும், (வறட்சிக் காலமாக இருந்தாலும், புயல் காலமாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும், நோய் வந்து தாக்கினாலும், பூச்சிகள் அழித்தாலும், தாவர உண்ணிகளிடமிருந்தும் ஒரு சிறு குறையும் இல்லாமல்) பயிர்களைக் காப்பவன்.
பசிப்பிணி அறிந்தவன் - வயலில் பகல் முழுவதும் பசியோடு இருந்து பயிர்களைக் காக்கும் உழவனுக்கு பசியின் கொடுமை நன்கு தெரியும்.
பயிர்களை ஆள்பவன் - எப்போது மழை வரும்? எப்போது விதை விதைக்க வேண்டும்? எப்போது களை எடுக்க வேண்டும்? எப்போது, எவ்வளவு நீர் பாய்ச்ச வேண்டும்?
எப்படி விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பது? எப்படி பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பது? எப்படி நோயிடமிருந்து பயிர்களைக் காப்பது? எப்போது பயிர் விளையும்? எப்போது அறுவடை செய்யலாம்? என்றெல்லாம் அறிந்து பயிர்களை ஆட்சி செய்பவன்.
பேரிடரைப் பொறுப்பவன் - உழவும் பேரிடரும் 'ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்' என்பதை நாம் அறிவோம். வறட்சி, வெள்ளம், புயல் என்று அத்தனை பேரிடர்களையும் பொறுத்துக் கொள்பவன்.
பெருமைதான் சொல்லிடவோ - உழவனின் பெருமைகள் ஓராயிரம் இருக்க, அத்தனையும் சொல்வது எளிதன்று.
- மலர் மகேந்திரன்.
No comments:
Post a Comment