Thursday, October 15, 2020

2 மதிப்பெண் வினாக்கள் இயல் 4

 இயல் 4

2 மதிப்பெண் வினாக்கள்


1). வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா: செயற்கை நுண்ணறிவு இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

விடை:

அ). செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வகுப்பறை ரோபோ ஆசிரியர்.

ஆ). நுட்பமான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவ ரோபோ.


2). மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.  நோயாளி மருத்துவர்பால் கொண்டிருக்கும் இத்தகைய அன்பும் நம்பிக்கையுமே அவரை விரைவிலேயே குணமடையச் செய்யும்.  மருத்துவர் நோயாளி மீது காட்டும் அன்பும் அக்கறையும் அவருக்குக் 'கைராசிக்காரர்' என்ற பெயரைப் பெற்றுத் தரும்.


3). உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவை எனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

எதுவுமே இல்லாத பெருவெளியில் பேரொலியுடன் காற்று முதலான அணுக்களுடன் வளர்கின்ற வானம் தோன்றியது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து நெருப்புப் பந்தாய்ப் பூமி உருவானது. பிறகு பூமி குளிர மழை பெய்தது.  தொடர் மழையால், மீண்டும் மீண்டும் உருவான தொடர் வெள்ளத்தால், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் உருவானது.


4). வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்- இத்தொடர் காலவழுவமைதி எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

'வருகின்ற கோடை விடுமுறை' என்பது எதிர்காலம்.  இத்தொடரில் எதிர்காலப் பயனிலையாக 'செல்வேன்' என்று அமைவதற்குப் பதிலாக நிகழ்காலப் பயனிலை 'செல்கிறேன்' என்று வந்துள்ளது.  இங்கே நிகழ்ச்சியின் உறுதித்தன்மை குறித்து, இது காலவழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.


5). "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிரக் கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.  இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.


"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிரக் கடிக்காது" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

2 மதிப்பெண் வினாக்கள், இயல் 3

 இயல் 3

2 மதிப்பெண் வினாக்கள்


1). 'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டுக் குற்றி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.


வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வகையிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர், நம் முன்னோர்.  இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை. எனவே, அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்துவந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது. இது விருந்தோம்பலுக்குச் செல்வத்தைவிட, விருந்தோம்பல் பண்பே இன்றியமையாதது என்பதைக் காட்டுகிறது.


2). விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

வாருங்கள்... வாருங்கள்... உங்களைக் கண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உட்காருங்கள்! முதலில் சிறிது நீர் பருகுங்கள். நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தது, நான் செய்த பெரும்பேறு. கண்டிப்பாக உணவருந்திவிட்டுதான் நீங்கள் செல்ல வேண்டும்.  உங்களைச் சந்திக்க நான் மிகவும் ஆவலாக இருந்தேன்.


3). 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக.

இறடி- தினை; பொம்மல்- சோறு.

இறடிப் பொம்மல் பெறுகுவிர்' - இத்தொடர் உணர்த்தும் பொருள் 'தினைச்சோற்றைப் பெறுவீர்கள்' என்பதாம்.


4). 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடர் ஆனது. 'சிரித்துப் பேசினாள்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?


'சிரித்துப் பேசினாள்' என்பது 'சிரித்துச் சிரித்துப் பேசினாள்' என அடுக்குத்தொடர் ஆகும்.


5). பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?


பாரதியார் கவிஞர்- பெயர்ப் பயனிலை

நூலகம் சென்றார்-வினைப் பயனிலை

அவர் யார்?- வினாப் பயனிலை.


6). 'நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் அண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாததால், ஒருவராலும் விரும்பப்படாதவன்.


7). கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். - இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.


கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் - இன்னிசை அளபெடை


8). பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்து போன்று - உயிரினும் ஓம்பப்படும்.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.


விடை:

அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப் படும்.

ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்று - நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.


9). எய்துவர் எய்தாப் பழி - இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ). கூவிளம் தேமா மலர்

ஆ). கூவிளம் புளிமா மலர்

இ). தேமா புளிமா காசு

ஈ). புளிமா தேமா பிறப்பு


விடை:

அ). கூவிளம் தேமா மலர்


----------------------------------------------

2 மதிப்பெண் வினாக்கள் இயல் 2

 இயல் 2

2 மதிப்பெண் வினாக்கள்

1). "நமக்கு உயிர் காற்று 

காற்றுக்கு வரம் மரம் - மரங்களை

வெட்டி அறியாமல் நட்டு வளர்ப்போம்"

- இது போன்ற உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழுக்கத் தொடர்களை எழுதுக.

உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான முழக்கத்தொடர்கள்:

1). மரம் தரும் உயிர்வளி 

     மனிதர் வாழ ...

     மரம் வளர்ப்பதே ஒரே வழி.


2). பட்டம் கூட முட்டும்!

     பாழ்படுத்தாதீர்..!

     நித்தம் மூச்சும் முட்டும்!


2). வசன கவிதை - குறிப்பு வரைக.

வசன கவிதை

  1. உரைநடையும் கவிதையும் இணைந்து, யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் 'வசனகவிதை' எனப்படுகிறது.  
  2. இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.  
  3. இவ்வசனகவிதையே 'புதுக்கவிதை' என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று.


3). பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

அழும் தம்பிக்கு என்னுடைய ஆறுதல்:

  • அம்மாவும் அப்பாவும் இப்போதே வந்துவிடுவர். அழாதே செல்லம்! அழாதே!
  • உனக்குப் பிடித்த தின்பண்டம் வாங்கி வருவார்கள். உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள். அழாதே தங்கம்! அழாதே!
  • அக்கா, உன்கூட விளையாடுவேன்; ஆசையாய்த் தூக்கிக் கொஞ்சிடுவேன். அழாதே! முத்தே அழாதே!
4). மாஅல் - பொருளும் இலக்கண குறிப்பும் தருக.

மாஅல்


பொருள்: மாஅல் - மால் - திருமால். பெருவடிவு கொண்டு உலகத்தை ஓரடியால் அளந்தவர்.

இலக்கணக்குறிப்பு: மாஅல் -இசைநிறை அளபெடை (செய்யுளிசை அளபெடை)

5). தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

அ). தண்ணீர் குடி- தண்ணீரைக் குடி.
தினமும் ஐந்து லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

ஆ). தயிர்க்குடம் - தயிரை உடைய குடம்.
அவள் தயிரை உடைய குடத்தை எடுத்து வந்தாள்.

2 மதிப்பெண் வினா, இயல் 1

 இயல் 1

2 மதிப்பெண் வினாக்கள்

1. "மண்ணும் சிலம்பே மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்கப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

"மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்கள்:

  • சிலப்பதிகாரம் 
  • மணிமேகலை

எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்கள்:

  • சீவக சிந்தாமணி 
  • வளையாபதி 
  • குண்டலகேசி

2. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

1). சரியான தொடர்கள்:

  1. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
  2. ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

2). பிழையான தொடர்:

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

3). பிழைக்கான காரணம்:

தாற்றில் தான் சீப்புகள் இருக்கும்.


3. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார், கி. வா.ஜகந்நாதன்.
அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது அவர், " அடடே , காலையிலேயே மாலை வந்துவிட்டதே" என்றார்.
அவரது சொல்லின் சிலேடை நயத்தை அனைவரும் ரசித்தனர்.


4. 'வேங்கை' என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

வேங்கை - மரம், வேம்+கை (வேகின்ற கை)

1). தனிமொழி: 'வேங்கை' என்னும் சொல் தனியாக நின்று வேங்கை மரத்தைக் குறிப்பதால், தனிமொழியாகிறது.

2). தொடர்மொழி: 'வேங்கை' என்னும் சொல் பிரிந்து நின்று 'வேகின்ற கை' என்னும் பொருளைத் தருவதால், தொடர் மொழியாகிறது.

3). பொதுமொழி: இவ்வாறு, 'வேங்கை' எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்து, பொதுமொழியாகிறது.


5. 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்' - இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

1). உடுப்பதூஉம் உண்பதூஉம்-இன்னிசை அளபெடை

2). இன்னிசை அளபெடை:

செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக உயிர் எழுத்துகள் அளபெடுப்பது, இன்னிசை அளபெடையாகும்.

Wednesday, October 14, 2020

ஒரு மதிப்பெண் இயங்கலைத் தேர்வு



ஒரு மதிப்பெண் இயங்கலைத் தேர்வு

(Only book back questions)

9 இயல்கள். - 45 வினாக்கள்

தேர்வு எழுத இங்கே தொடவும்

பணி வாய்ப்பு வேண்டி தன்விவரக் குறிப்பு எழுதுதல்

 பணிவாய்ப்பு வேண்டி தன் விவரக் குறிப்பு எழுதுதல்

தன்விவரக் குறிப்பு படிவத்தை நிரப்ப இங்கே தொடவும்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம்

 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம்

விண்ணப்பப் படிவத்தைப் பெற இங்கே தொடவும்