Wednesday, August 21, 2024

இயல் 5

பத்தாம் வகுப்பு இயல் 5

பலவுள் தெரிக 

1.‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

2.அருந்துணை என்பதைப் பிரித்தால்______

அருமை+துணை

3.“இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது_____ வினா. “அதோ அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது______ விடை.

அறியா வினா, சுட்டுவிடை

4.“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

கல்வி

5.இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்_____ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்_______.

மன்னன், இறைவன்

சிறு வினா

1.“கழிந்த பெரும் கேள்வியினால் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டு புலவன் தென்சொல்”-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

  1. கழிந்த பெரும் கேள்வியினான்-மன்னன் குலேச பாண்டியன்
  2. காதல் மிகு கேண்மையினான்-புலவர் இடைக்காடனார்

2.செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

  1. அருளைப் பெருக்கு 
  2. அறிவைத் திருத்து 
  3. மருளை அகற்று 
  4. கல்வியைப் போற்று

3.அமர்ந்தான்- பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்+(ந்)த்+த்+ஆன்

  1. அமர்-பகுதி
  2. த்-சந்தி
  3. ந் ஆனது விகாரம் 
  4. த் -இறந்தகால இடைநிலை 
  5. ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி

4.இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.

  1. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா வினா 
  2. மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? -ஐய வினா

சிறுவினா

1.மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புப் செய்தது ஏன்? விளக்கம் தருக.

  1. பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான். 
  2. கபிலரின் நண்பரான இடைக்காடனார் எனும் புலவர், தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான். 
  3. மனம் வருந்திய இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார். மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோயிலை விட்டு நீங்கி, வடதிரு ஆலவாயில் சென்று தங்கினார். 
  4. இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான். 
  5. இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.

2.உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதையில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

  1. கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது சங்க இலக்கியம். 
  2. “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கிறது வெற்றி வேற்கை. 
  3. அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது கல்வியே ஆகும். 
  4. எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும் என்று எடுத்துரைப்பேன்.

3.ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு 

ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதை காதணிக்கேட்பியில் கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலி வாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிக் கேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார். இப்பகுதியில் இருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

  1. மொழிபெயர்ப்பு என்பது யாது? 
  2. விளக்குவது என்பது யாது? 
  3. மொழிபெயர்ப்பாளரின் பணி யாது?
  4. ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கிறதா?
  5. ஐ.நா. அவையில் மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பார்?

4.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

  1. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். இக்குறட்பாவில் ஆற்றுநீர்ப் பொருள்கோள் அமைந்துள்ளது. 
  2. முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும். பாடலின் தொடக்கம்முதல் முடிவுவரை ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது ‘ஆற்று நீர்ப் பொருள்கோள்’ ஆகும்.

நெடுவினா

1.இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக. 

திருவிளையாடற் புராணம்

இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தல் 

‘மன்னன் மிகுந்த கல்வியறிவு மிக்கவன்’ எனக் கற்றோர் கூறக் கேட்ட இடைக்காடனார் என்னும் புலவர் பாண்டியனின் அவைக்குச் சென்று, தான் இயற்றிய கவிதையைப் படித்தார்.

மன்னன் தன் புலமையை மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிடல் 

“பாண்டிய மன்னன் முன் சொற்சுவை நிரம்பிய கவிதை பாடினேன். அவனோ சிறிதேனும் சுவைத்துத் தலை அசைக்காமல் புலமையை அவமதித்தான். பாண்டியன் என்னை இகழவில்லை சொல்லின் வடிவாக உன் இடப்புறம் வீற்றிருக்கும் பார்வதி தேவியையும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்தான்” என்று சினத்துடன் கூறிச் சென்றார்.

இறைவன் கோவிலை விட்டு நீங்குதல் 

இடைக்காடனாருக்கும் கபிலருக்கும் மன மகிழ்ச்சி உண்டாக்க நினைத்த இறைவன் திருக்கோவிலை விட்டு வெளியேறி வைகை ஆற்றின் தென்பக்கத்தில் குடியேறினார்.

கோவிலை விட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டுதல் 

“இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் நல்லொழுக்கத்தில் குறைந்தனரா? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யார் அறியேன்” என்று பாண்டிய மன்னன் வேண்டினான்.

இறைவனின் பதில் 

இறைவன் மன்னனிடம், “இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் உன்னிடம் இல்லை. இடைக்காடனார் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு இங்கு வந்தோம்” என்றார்.

மன்னன் தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு இறைவனிடம் வேண்டுதல் 

மன்னன், “சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமை அல்லவா?” என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டிப் போற்றினான்.

மன்னன், புலவருக்கு மரியாதை செய்தல்

புலவர்கள் சூழ அறிவை அணிகலனாகப் பூண்ட இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.

மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டுதல்

பாண்டியன், “புண்ணிய வடிவான புலவர்களே, நான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று பணிந்து வேண்டினான்.

2.“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துக்களை விவரிக்க.

புதிய நம்பிக்கை

முன்னுரை

வரலாற்றில் மனிதர்கள் வருகிறார்கள். சிலர் வரலாறாகவே மாறி விடுகின்றார்கள். கல்வியறிவற்ற சமூகத்திலிருந்து ஒற்றை ஒளிச் சுடராக வெளிவந்து, அந்த சமூகத்தையே ஒளிவெள்ளத்தில் நிரப்பியவர்களில் ஒருவர்தான் மேரி.

மேரியின் குடும்பம்

கருப்பினச் சிறுமி மேரி. வாழ்க்கையின் ஒரே ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கக் கூடாது என்று பகல் முழுவதும் பருத்திக் காட்டில் வேலை செய்யும் குடும்பத்தை சார்ந்தவள். அம்மா பாட்ஸியுடன் துவைத்து தேய்த்து துணிகளை அடுக்கி கொண்டு, பென் வில்சன் என்ற வெள்ளைக்கார முதலாளி வீட்டிற்குச் சென்றாள்.  

உன்னால் படிக்க முடியாது

அங்கு வெள்ளைக்காரச் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள்; உள்ளே சென்றாள்; சுற்றிப் பார்த்தாள்; மேஜை மீது இருந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். “புத்தகத்தை என்னிடம் கொடு. நீ இதை எடுக்கக்கூடாது. உன்னால் படிக்க முடியாது. புத்தகங்கள், படிக்க முடியாதவர்களுக்கு இல்லை” என்ற வெள்ளைக்காரச் சிறுமியின் வார்த்தைகளால் மனம் கலங்கினாள்.

மேரியின் விருப்பம்

“நான் படிக்க வேண்டும். நான் படிக்கக் கற்றுக் கொள்ளப் போகிறேன். நான் எழுதப் படிக்கப் போகிறேன்” என்று சிந்தித்துக் கொண்டே இருந்தாள். தந்தை சாமிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினாள். ஆனால், அங்குக் கருப்பினச் சிறுமிகள் படிப்பதற்கென்று பள்ளிக்கூடம் கிடையாது.

பட்டம் பெற்ற மேரி

மிஸ் வில்சன் என்ற வெள்ளைக்காரப் பெண் மேரியைப் படிக்க மேயஸ்வில்லிக்கு அழைத்தாள். அடங்காத ஆர்வத்துடன் தினமும் பத்து மைல் தூரம் நடந்து சென்று படித்தாள். அக்கம்பக்கத்தினருக்கு கணக்குச் சொல்லிக் கொடுத்தாள். சில ஆண்டுகள் முடிவில் பட்டம் பெற்றாள். அதில், ‘இப்பட்டம் பெறுபவருக்கு எழுதப் படிக்கத் தெரியும்’ என்று இருந்தது. 

மேரியின் உயர்கல்விப் பயணம்

‘அடுத்து என்ன செய்யப் போகிறாய்?’ என்ற மிஸ் வில்சனின் கேள்விக்கு, ‘கல்லூரியில் படிக்க விரும்புகிறேன்’ என்றாள். மேரி உயர்கல்வி கற்க, ஊரே வழியனுப்பி வைத்தது; மேற்குப் பகுதியில் வசிக்கும் வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி பணம் அனுப்பினாள்.

முடிவுரை 

ஒடுக்கப்பட்ட சமூகம் எழுவதற்குக் காரணமாக அமைந்தது, மேரி பெற்ற கல்வி. பின்னாளில், மேரி கருப்பினக் குழந்தைகள் படிப்பதற்காகக் கட்டிய ‘பெதுன் குக்மேன் தனியார் பள்ளி’ பல்கலைக்கழகமாக வளர்ந்தது; தடைகளை எல்லாம் தகர்த்து முன்னேறி, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டின் ஆலோசகரானார்.

3.தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொழி- பிற மொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துக்கள்- பிறதுறைக் கருத்துக்கள்- தமிழுக்குச் செழுமை- மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக்கலை’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

முன்னுரை

ஒரு மொழியில் ஏற்படும் புதுமைகளை வேற்று மொழிக்கு கொண்டு வரும் அரிய கலையே ‘மொழிபெயர்ப்புக்கலை’ ஆகும். மொழிபெயர்ப்பு செய்யப்படும் பொழுது மூலமொழி சார்ந்துள்ள சமுதாயப் பின்னணியை எண்ணிப் பார்ப்பது அவசியமானது. 

தமிழின் இலக்கியவளம்

வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்து நெறியோடு வாழ்ந்த தமிழரின் சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பக்திப் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், புதுக்கவிதைகள், புதினங்கள் என்பவை தமிழின் இலக்கிய வளத்திற்குச் சான்றுகளாகும்.

கல்வி மொழி

மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதில் பெற முடியும். வெளிநாட்டவரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், வால்ட் விட்மனின் புதுக்கவிதைகள், ஜப்பானிய ஹைக்கூக் கவிதைகள் ஆகியவை மொழிபெயர்ப்பால் தமிழுக்குக் கிடைத்த இலக்கிய வளங்கள் ஆகும்.

அறிவியல் கருத்துகள்

தாமஸ் ஆல்வா எடிசன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடிஸ், கலிலியோ போன்ற அறிஞர்பெருமக்களின் கண்டுபிடிப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றபின் அறிவியல் வளர்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. 

பிறதுறைக் கருத்துகள் 

தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன. இதனால் புதுவகையான சிந்தனை மொழிக்கூறுகள் பரவுகின்றன.

தமிழுக்குச் செழுமை

மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது. மேலும், பிற இனத்தவரின் பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றை அறியமுடிகிறது. 

முடிவுரை

பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும், அவை போன்ற புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. மொழி வேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது.

மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

மதிப்புரை

நூலின் தலைப்பு: மணிமேகலை

நூலின் மையப் பொருள் : மணிமேகலை மேற்கொண்ட துறவு

மொழிநடை : நாவல்

வெளிப்படுத்தும் கருத்து : 

     நாம் போன பிறவியில் செய்த பாவத்தின் பயனாகத்தான் இந்த உடம்பு வாய்த்திருக்கிறது. இந்த உடம்பை வைத்துக்கொண்டு நல்லது செய்வதும் கெட்டது செய்வதும் முழுக்க முழுக்க நம்முடைய கையில் தான் இருக்கிறது. இந்த உடம்பு அழகானது என்று நினைத்தால் அந்த கருத்தைத் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அழகு நிலை இல்லாதது. இளமை போய் முதுமை வந்து விட்டால் அத்தனை அழகும் மறைந்து போகும். இந்த நிலை இல்லாத உடம்பைப் பராமரிக்கத் தான் எத்தனை அலங்காரங்கள்? அழகு சாதனங்கள், நறுமணப் பூச்சுகள். இதை எல்லாம் நீக்கி விட்டால் இந்த உடம்பு எத்தனை கேவலமான நாற்றம் கொண்டது என்று புரியும். புற்றுக்குள் பாம்பு புகுந்தது போல கோபம், வருத்தம், கவலை, துன்பம் எல்லாம் உள்ளே பூட்டி வைக்கிறோம்.

நூலின் நயம் : 

தீவதிலகையின் கூற்று:

     இந்த உலகத்தையே பெரும் துன்பத்தில் ஆழ்த்தக் கூடிய ஒரு மிகப்பெரிய நோய் பசி. அந்தப் பசியைப் போக்கும் அற்புத மருந்து அந்த அமுதசுரபி. நீ அதை ஏற்றுக்கொண்டு, இல்லாதவர்களுக்கு உணவு கொடுத்து மகிழச் செய்ய வேண்டும். உன் மூலம் இந்த பூமி மொத்தமும் நலம் பெறவேண்டும்.

அறவண அடிகளின் கூற்று:

     இங்கிருந்து சூரிய மண்டலம் தொலைவில் உள்ளது என்பதை நாம் உணர முடியும். ஆனால், அதைக் கண்ணால் பார்த்து அறிவது சாத்தியமில்லை. அதுபோலத்தான், நல்ல அறநெறிகளை நாம் நேரில் பார்த்தால் தான் நம்புவோம் என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது. மற்றவர்கள் உணர்த்துவதை உள்ளத்தால் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆதிரையின் கணவன் சாதுவன் கூற்று:

     கள் நம்முடைய அறிவை மயக்குகிறது. மாமிசம், மற்ற உயிர்களைக் கொன்று பிழைக்கச் சொல்கிறது. பல பெண்களின் பின்னே அலைவதும் மிருகக் குணம் தான்.

நூலின் கட்டமைப்பு : 

     மணிமேகலைக் காப்பியத்தை, இவள் பெயர் மணிமேகலைமுதல் குற்றம்தவிர்த்த வாழ்க்கை ஈறாக 66 தலைப்புகளில் நாவல் வடிவில் விளக்குகிறது.

சிறப்புக் கூறு : 

     மூல நூலான மணிமேகலையை விட, நாவல் வடிவிலமைந்த இந்த நூல் எளிய நடையில் கதை சொல்கிறது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

     நாடகக் காட்சிகளை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, மணிமேகலை வாழ்ந்த உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. 

     புத்தர் அறிவித்த நன்னெறிகள், நூல் முழுவதும் தொடர்கின்றன. இக்கால சமுதாயம் சீர்பெற மிகவும் அவசியமான நூலாகும்.

     மிகுந்த சுவையோடு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

நூலின் ஆசிரியர்: என். சொக்கன்

தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1.நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருட்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்.

2.காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது.

3.காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலை ஆக்குகிறது

4.பசுமையான காட்சியைக் காணுதல் கண்ணுக்கு நல்லது.

5.பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது

புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க

தார்போன்ற நிறமுண்டு கரியும் இல்லை

பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமும் இல்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியும் இல்லை

சோர்ந்து போகாமல் வீடு அமைப்பேன் பொறியாளரும் இல்லை

வீட்டுக்கு வரும் முன்னே, வருவதை கூறுவேன்.

நான் யார்?

விடை: காகம்

அகராதியில் காண்க

  1. மன்றல்- திருமணம்
  2. அகராதி- அகரமுதலி
  3. மருள்- மயக்கம்
  4. அடிச்சுவடு- காலடியின் அடையாளம்
  5. தூவல்- பேனா

கலைச்சொல் அறிவோம்

  1. Emblem -சின்னம்
  2. Thesis -ஆய்வேடு
  3. Intellectual -அறிவாளர்
  4. Symbolism -குறியீட்டியல்

நிற்க அதற்குத் தக

பள்ளியில் நான்

  1. உடன்பயிலும் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டுவேன்
  2. நண்பர்களுக்கு உதவி செய்வேன்
  3. வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருப்பேன்
  4. ஒழுக்கத்தைப் கடைப்பிடிப்பேன்

வீட்டில் நான்

  1. பெற்றோருக்கு உதவி செய்வேன்.
  2. செடிகொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவேன்
  3. வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பேன்.
  4. பெற்றோரை மதிப்பேன். 

மொழிபெயர்ப்பு

  1. Lute music -யாழிசை
  2. Chamber-அறை
  3. To look up-எட்டிப்பார்த்தேன்
  4. Grand-daughter-பேத்தி
  5. Rote-நெட்டுரு
  6. Didactic compilation-நீதி நூல் திரட்டு

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க 

1.கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான் 

அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

2.மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் 

குளிர்ந்த நிழல்தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3.வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது 

மேடுபள்ளம் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது

5.கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் 

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

6.குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்

சுற்றுலா செல்ல விரும்பும் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும். 

அட்டவணையில் விடுபட்டதை எழுதுக 

  1. சொன்ன அம்மா -பெயரெச்சத் தொடர்
  2. அம்மா, சொல்-விளித்தொடர்
  3. அரசர் தந்தார் -எழுவாய்த் தொடர்
  4. எனக்குத் தந்தார்-வேற்றுமைத் தொடர்
  5. சிரித்த பெண் -பெயரெச்சத் தொடர்

பெண்ணே, சிரி-விளித்தொடர்

ஓடி விளையாடினான்-வினையெச்சத் தொடர்

என்னுடன் வா-வேற்றுமைத் தொடர்

இயல் 6

பத்தாம் வகுப்பு இயல் 6

பலவுள் தெரிக

1.குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______

குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

2.கூற்று 1: போராட்ட பண்புடனே வளர்ந்தவர் கலைஞர் கூற்று ரெண்டு அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

கூற்று 1 மற்றும் 2 சரி

3.மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

தளரப் பிணைத்தால்

4.தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது.- இத்தொடருக்கான வினா எது?

கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

5.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அங்கு வறுமை இல்லாததால்

குறுவினா

1.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள் கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்

1.நிலம்-காடு (முல்லை)

2.பொழுது-

  1. பெரும்பொழுது-மழைக்காலம்(கார்காலம்) 
  2. சிறுபொழுது-மாலை

கருப்பொருள்

உணவு: வரகு

2.“கலைஞர், பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளர், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்”- பேராசிரியர் அன்பழகன். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

கலைஞர், பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளராகவும், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளராகவும் திகழ்ந்ததாகப் பேராசிரியர் அன்பழகன் பாராட்டியுள்ளார்.

3.உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

  1. உறங்குகின்ற “கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!” என்ற சொல்லி எழுப்புகிறார்கள். 
  2. “காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக!” என்று அவனை உறங்கச் சொல்கிறார்கள்.

4.சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித்தண்டுகள். இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

  1. ஒல்லித்தண்டுகளே பெரிய மலர்களைத் தாங்குகின்றன. 
  2. அதுபோல, மென்மையான அன்பு என்னும் பண்பே அமைதியான பிரபஞ்சத்தைச் சுமக்கின்றது.

5.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக. 

உழவர்கள் மலையில் உழுதனர். 

முல்லை பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

  1. உழவர்கள் வயலில் உழுதனர். 
  2. நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.


சிறுவினா

1.வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

  1. திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும். 
  2. இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும். 
  3. பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயறு சரிந்தாடட்டும். 
  4. பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும். 
  5. கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும். 
  6. உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும். 
  7. தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளியுள்ள முருகனே! செங்கீரை அடி அருள்க! 
  8. இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.

2.நவீன கவிதையில் வெளிப்படும் நுன்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

நவீன கவிதை

இறுக்கி முடிச்சிட்டால் 

காம்புகளின் கழுத்து முறியும் 

தளரப் பிணைத்தால் 

மலர்கள் தரையில் நழுவும் 

வாசலில் மரணம் நிற்பதறிந்தும் 

வருந்தாமல் சிரிக்கும் 

இந்தப் பூவை 

எப்படித் தொடுக்க நான்.

நாட்டுப்புறப் பாடல்

கையாலே பூவெடுத்தா - மாரிக்கு 

காம்பழுகிப் போகுமின்னு 

விரலாலே பூவெடுத்தா- மாரிக்கு 

வெம்பி விடுமென்று சொல்லி 

தங்கத் துரட்டி கொண்டு மாரிக்குத் 

தாங்கி மலரெடுத்தார்.

நாட்டுப்புறப் பாடலிலும் வெளிப்படும் நுண்மை உள்ளம்

  1. மலர்கள் மென்மையானவை. மனமே நூலாகும் நுண்மையுற்றாலொழிய பூத்தொடுப்பது அரிது. மிகுந்த கவனத்தோடு பூத்தொடுக்க வேண்டும் என்ற நுட்பம், நாட்டுப்புறப் பாடலிலும் வெளிப்படுகிறது.
  2. மலரைக் கையாலோ விரலாலோ பூத்தொடுத்தால் பாழாகிக் போய்விடும். அதனால் அழுக்குப் படாமல் மிகுந்த கவனத்தோடு, தங்கத் துரட்டி கொண்டு மாரியம்மனுக்கு மலர் பறித்தனர்.

3.‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’.- காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணை நிலைத்தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

  1. குறிஞ்சி: அன்று தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல். இன்று இவற்றுடன் சுற்றுலாவும் வளர்ச்சியடைந்துள்ளது. 
  2. முல்லை: அன்று ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல். இன்று காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
  3. மருதம்: அன்று நெல்லரிதல், களைபறித்தல். இன்று இவற்றுடன் பலவகைத் தொழில்களும் பெருகியுள்ளன. 
  4. நெய்தல்: அன்று மீன்பிடித்தல், உப்பு விளைத்தல். இன்று இவற்றுடன் பல்வகைப் தொழில்களும் நடைபெறுகின்றன.
  5. பாலை: அன்று வழிப்பறி, நிரைகவர்தல். இன்று இத்தகைய தொழில்களுக்கு இடமில்லை.

4.தமிழ் மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.

  1. மனோன்மணியம் சுந்தரனாரின் “நீராரும் கடலுடுத்த” என்னும் பாடலை அரசுவிழாக்கள் அனைத்தும் தொடக்கப் பாடலாக பாடுவதற்கு வழிவகுத்தார்.
  2. அத்துடன், கல்வித்துறையைப் பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்ததோடு தமிழ் வளர்ச்சித்துறை எனப் புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்குத் தமிழறிஞர் ஒருவரையே அமைச்சராக்கி அழகு பார்த்தார்.

நெடுவினா

1.நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக

பாராட்டுரை

பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போன்றது. விரல் நுனியில் காட்சிகளை மாற்றி கண்முன்னே நிறுத்துவது இதன் சிறப்பம்சம். உயிருள்ள மனிதர்கள் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளுணர்வில் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. 

நெகிழிப் பைகளின் தீமை

நமது பள்ளி ஆண்டு விழா என்பது ஒவ்வொரு மாணவருக்கும் மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். என்றும் பசுமையான நினைவுகளாக இருக்கக்கூடிய ஆண்டுவிழாவில், ஆண்டுதோறும் புதியபுதிய சிந்தனைகளை மாணவர்கள் மனத்தில் விதைப்பீர்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நெகிழிப்பைகளின் தீமையைக் கருவாகக் கொண்டமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதை விதைப்பதற்கு நமது பாரம்பரியக் கலையான பொம்மலாட்டக் கலையைத் தேர்வு செய்த பள்ளி ஆண்டுவிழா ஏற்பாட்டாளர்களுக்குத் தலை வணங்குகிறேன். 

பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர்வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. நீர்தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. நெகிழிப்பைகள் பல்லுயிர்பெருக்கச் சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன.

நிகழ்ச்சியின் தாக்கம்

 ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல இந்த நிகழ்ச்சியின் மூலம் பொம்மலாட்டக் கலையின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டதோடு நெகிழிப் பைகளின் தீமைகளையும் அறிந்துகொண்டோம். நெகிழிப் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற மனமாற்றத்தைப் பெற்றோம்.

நிறைவாக…

அழிவில் இருக்கும் பொம்மலாட்டக் கலையைக் காக்க மத்திய மாநில அரசுகள் பள்ளிப்பாடத்திட்டத்தில் செயல்முறைப்பயிற்சியாக பொம்மலாட்டத்தை வைக்க வேண்டும் என்று கூறி எனது பாராட்டுரையை நிறைவு செய்கிறேன்.

போராட்டக் கலைஞர்- பேச்சுக் 2.கலைஞர்- நாடகக் கலைஞர்- திரைக்கலைஞர்- இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

பன்முகக் கலைஞர்

முன்னுரை 

இயற்பெயர் மறைந்து இட்டபெயர் நிலைக்கும் அளவுக்குக் கலைஞர் மு.கருணாநிதி அவர்களை அடையாளப்படுத்தி தன்னைப் பெருமை படுத்திக் கொண்டது கலை! கலைஞர் பகுத்தறிவுக்கொள்கை பரப்பும் சிந்தனையாளர்; பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளர்; படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்; கலைத்துறையில் வாகைசூடிய படைப்பாளர்; தொட்டது துலங்க துறைதோறும் தம் முத்திரை பதிக்கும் திறமையாளர்; முத்தமிழிலும் வல்ல வித்தகர்; செந்தமிழுக்கு ஒரு தீமையெனில் தம்முயிரும் தந்திடத் துணியும் தியாகத் திருவுருவம்!

போராட்டக் கலைஞர்

கலைஞர் திருவாரூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது அரசியல் அரிச்சுவடியாய் அமைந்த ஒரு புத்தகத்தைத் துணைப்பாடமாகப் படித்தார். பள்ளி முடிந்த மாலை வேளைகளில் தாம் எழுதிய ‘வாருங்கள் எல்லோரும் போருக்குச்!’ என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் வந்தார். இப்படிப் போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

பேச்சுக் கலைஞர்

பேச்சுக் கலையில் பெருவிருப்புக் கொண்ட கலைஞர் ‘நட்பு’ என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. சிறுவயதிலேயே ‘சிறுவர் சீர்திருத்தச் சங்கம்’, ‘தமிழ்நாடு மாணவர் மன்றம்’ ஆகிய அமைப்புகளைத் தொடங்கினார். தாம் சென்றவிடமெல்லாம் தெளிவாகத் தமிழ்பேசித் தன்மானத்தை, தமிழ் உணர்வை, தமிழ் இலக்கியத்தை, பகுத்தறிவை, மத ஒருமைப்பாட்டை, சமூக நல்லிணக்கத்தை நமக்கெல்லாம் ஊட்டினார்.

நாடகக் கலைஞர்

இவர் எழுதிய ‘பழனியப்பன்’ என்னும் நாடகம் 1944 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னர் ‘சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப் பூ’ உட்பட பல நாடகங்களை எழுதினார். ‘தூக்குமேடை’ என்னும் நாடகத்திற்கான பாராட்டுவிழாவில்தான் அவருக்குக் ‘கலைஞர்’ என்னும் சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது.

திரைக்கலைஞர்

1947இல் இராஜகுமாரி என்னும் படத்துக்கான முழுவசனத்தையும் எழுதினார். அதன்பின்னர் மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, நாம், மலைக்கள்ளன், பராசக்தி, திரும்பிப்பார், ராஜாராணி, ரங்கோன் ராதா, ஆகியவற்றுக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றார். இவரது வசனங்கள் பகுத்தறிவு, சமூகம், பெண்கள் முன்னேற்றம், அரசியல், இலக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இயற்றமிழ்க் கலைஞர்

‘கயிற்றில் தொங்கிய கணபதி’ என்ற கட்டுரை நூலை எழுதினார். பின்னர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக்கிண்ணம், தாய்மை, புகழேந்தி, அணில் குஞ்சு ஆகிய சிறுகதைகளையும் ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், ஒரே ரத்தம் ஆகிய புதினங்களையும் சங்கத்தமிழ், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா ஆகிய உரைநூல்களையும் எழுதியுள்ளார். தம் வாழ்க்கை வரலாற்றை ‘நெஞ்சுக்கு நீதி’ எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.

முடிவுரை 

தமிழின் பெருமிதங்களையும் விழுமியங்களையும் மீட்டெடுக்க எண்ணிய கலைஞர் அதற்கான பணிகளை தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தார். இலட்சக்கணக்கான பக்கங்கள் எழுதியதும் ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியதும் அவர் அளவுக்குச் செயல்பட்டதுமான தலைவர்கள் மிகக் குறைவு. இவ்வாறு, ‘உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’ என்னும் கூற்றுக்குச் சான்றாக வாழ்ந்த கலைஞர் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் நாள் தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானார்.

3.சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட… இவ்வுரையைத் தொடர்க!

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்

ஆன்றோர்களே, கல்வியில் சிறந்த சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மருத நிலக் காட்சி

வண்டுகள் பாட, மயில்கள் ஆட, மேகங்கள் மத்தளம் கொட்ட, தாமரை மலர்கள் விளக்குகளை ஏற்ற, குவளை மலர்கள் கண்விழித்துப் பார்க்கும் மருதநிலக் காட்சியை நீரலைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. 

இராமனின் அழகுக் காட்சி

இராமனுடைய மேனியில் பகலவனின் ஒளி கரைகிறது. மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? என்று உவமை சொன்ன கம்பர் இறுதியில் அழியாத அழகு உடையான் என்று முடிக்கிறார். 

குகனின் மனவோட்டம் 

பெரிய யானைப்படை கொண்ட பரதனை, கங்கை ஆற்றைக் கடந்து போகவிட்டால் வேடன் ஆகிய என்னை இறந்திருக்கலாமே என உலகத்தார் பழி சொல்ல மாட்டார்களா? என்று குகன் எண்ணுகிறான்.

கும்பகருணனை எழுப்புதல்

உறங்குகின்ற கும்பகருணனே, உம்முடைய பொய்யான வாழ்வு இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. இனிக் காலதூதர் கையில் படுத்து உறங்குவாயாக என்று கும்பகருணனை எழுப்புகிறார்கள்.

இவையெல்லாம் இயற்கைக் காட்சிகளைச் சந்த நயத்தோடு வருணிப்பதில் கம்பர் சிறந்தவர் என்பதற்குச் சான்று பகர்கின்றன.

கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வு குறித்துக் கட்டுரை எழுதுக

கட்டுரை -கலைத்திருவிழா

முன்னுரை 

மனிதன் கொண்ட விழைவின் வெளிப்பாடே விழா. இவ்விழாவில் அவரவர் சார்ந்த சமூகத்தின் விழுமியங்கள் கலைகள் வடிவில் பொதுவில் நிகழ்த்தப்படும். சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கலைகள் மனத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருவதோடு வாழ்க்கை நெறிகளையும் வகுத்துக் கூறும்.  இத்தன்மை வாய்ந்த கலைத் திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று வந்தேன். அதைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.

கண்கவர் கலைத் திருவிழா 

மதுரை அரசுக் கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்" என்பதை மனத்தில் கொண்டு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்திருந்தனர்.  "ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்" என்ற சிலப்பதிகார அரங்கம் போல் இக்கலைத் திருவிழா அரங்கம் விளங்கிற்று. வண்ணவண்ணத் தோரணங்களும் வரவேற்புப் பதாகைகளும் சிவப்புக்கம்பள விரிப்பும் விசாலமான பார்வையாளர் அரங்கும் கண்களைக் கவர்ந்தன!

நிகழ்ச்சித் தொடக்கம் 

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அமைச்சர் பெருமக்கள், பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

நோக்கம் மற்றும் குறிக்கோள் 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த கலைத் திறன்களை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இக்கலைத் திருவிழா 2022ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற குறிக்கோளில் நடத்தப்பட்டது.

பல்வேறு போட்டிகள் 

வகுப்புகள் 1-2, 3-5, 6-8, 9-10, 11-12 என ஐந்து பிரிவுகளில் கவின்கலை, இசை, நாடகம், நடனம் என்னும் வகைகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு செதுக்குச் சிற்பங்களிலும் வண்ண ஓவியங்களிலும் சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை வெளிப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சிறந்த சிற்பக் கலைஞர்களையும் ஓவியக் கலைஞர்களையும் அடையாளம் காண முடிந்தது.

கருவி இசையும் வாய்ப்பாட்டும் 

கருவி இசைக்கென்று தனியாக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. கருவி இசையில் தோற்கருவி, துளைக்கருவி, தந்திக்கருவி எனப் பலவகை இசைக்கருவிகளை இசைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத" என்று ஆண்டாள் பாடியது போன்று மாணவர்கள் பம்பை, உறுமி, உடுக்கை, பறை, மிருதங்கம், தபேலா, டிரம்ஸ், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், கிட்டார் ஆகியவற்றை இசைத்தனர்; பார்வையாளர்கள்  மயங்கினர்.  மற்றொருபுறம் வாய்ப்பாட்டு இசையில் பங்கேற்ற மாணவர்கள்  நாட்டுப்புறப் பாடல்களையும் செவ்வியல் இசைப் பாடல்களையும் பாடி அசத்தினர்.

நடனமும் நாடகமும்

தனிநபர் நடனம் மற்றும் குழு நடனம் என்னும் இரண்டு பிரிவுகளாக நடனப் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் பாடல்களுக்கு ஏற்ப வண்ண வண்ண ஆடை அலங்காரங்களுடன் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எனப் பலவகை நடனங்களை ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.  தனிநபர் நடிப்பு, பலகுரல் பேச்சு, நகைச்சுவை வழங்குதல், குழுநாடகம் என்னும் பிரிவுகளில் நாடகப் போட்டி நடத்தப்பட்டது. சூழல் பாதுகாப்பைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகங்கள் பார்வையாளர்கள் மனத்தில் பதிந்தன. மாணவர்களின் நடனமும் நடிப்பும் தேர்ந்த திரைக் கலைஞர்களைப் போலவே இருந்தது. இக்கலைத் திருவிழாக் காட்சிகளையெல்லாம்,"அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறை விரித்தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்" என்பது போல நாங்கள் நோக்கினோம்.

விருது வழங்கும் நிகழ்ச்சி

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற மாணவர்கள் முகத்திலே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. "போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாட்டுச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அமைச்சர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்த்துரையுடன் கலைத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. ஆயினும், கலைத்திருவிழாக்காட்சிகள் என் கண்களைவிட்டு அகலவே இல்லை!

முடிவுரை

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரின் நெஞ்சிலும் கலைத் திருவிழாவே குடிகொண்டிருந்தது. "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலாய்" மாணவர்கள் ஒவ்வொருவரும் கலைஞர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களின் திறன்கள் மெருகூட்டப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் மாணவர்கள் மிகப்பெரிய சாதனையைப் படைக்க இக்கலைத் திருவிழா நிச்சயம் தூண்டுகோலாக அமையும் என உறுதியாக நம்பலாம்.

மொழிபெயர்க்க

Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions covers a wide range; poems, letters, screenplays, novels, biograpies, historical novels, stage-plays, dialogues and movie songs. Written kuralovium for thirukkural, tholkappiya poonga, poompukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture.. Like the kuralovium in which kalaignar Wrote about thirukural, through the construction of valluvar kottam he have an architectural presence to thiruvalluvar, in Chennai. At kanyakumari, karunanidhi constructed a 133-foot-high statue of thiruvalluvar in honour of the scholar. 

கலைஞர் கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்குத் தனது பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். அவரது பங்களிப்புகள் பரந்த அளவிலானவை; அவை கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று நாவல்கள், மேடை நாடகங்கள், உரையாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள் ஆகியனவாகும். குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார் முதலிய நூல்களையும் மற்றும் பல கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலக்கியம் மட்டுமின்றிக் கலை, கட்டிடக்கலை மூலமும் தமிழ்மொழிக்குக் கருணாநிதி பங்களித்துள்ளார். திருவள்ளுவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை நிறுவியுள்ளார். கன்னியாகுமரியில் 133 அடி உயரமுடைய திருவள்ளுவர் சிலையைக் கருணாநிதி நிர்மாணித்துள்ளார்.

தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக. 

1.அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.(தனிச்சொற்றொடர்களை கலவைச் சொற்றொடராக மாற்றுக)

அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.

2.இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்ககங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார் (தொடர் சொற்றொடராக மாற்றுக)

இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்; அடுக்கி வைத்தார்; எடுத்துக் கொடுத்தார்.

3.கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர் எழுத்து வழியாக தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)

கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்து, தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.

4.முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி வார இதழாக்கி, நாளேடாக்கினார் கலைஞர். (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)

கலைஞர் முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கினார். பின்னர் அதனை வார இதழாக்கினார். பின்னர் அதனை நாளேடாக்கினார்

5.ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)

ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அதனால், அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைப்பட்டது.

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக

1.வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது. 

2.அனைவரின் பாராட்டுக்களால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது 

3.வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

4.கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசுமையான புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது 

5.வெயிலில் அலையாதே; உடல் கருக்கும் 

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக 

(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து).

1.விரட்டாதீர்கள்- பறவைக்கு மரம் வீடு. வெட்டாதீர்கள் -மனிதருக்கு அவை தரும் மரவீடு.

2.காலை ஒளியினில் மலரிதழ் அவிழும். சோலைப்பூவினில் வண்டினம் கவிழும்.

3.மலைமுகட்டில் மேகம் தங்கும்- அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.

4.வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும்-இதைத் தத்துவமாய்த் தோற்பாவைக்கூத்து சொல்லும்.

5.தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது.- அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.

அகராதியில் காண்க

1.தால்- நாக்கு

2.அகவுதல்- அழைத்தல், ஒலித்தல், பாடுதல்

3.அணிமை- அண்மை, அருகு, பக்கம்

4.உழுவை- புலி 

5.ஏந்தொழில்- மிகுந்த அழகு

கலைச்சொல் அறிவோம் 

1.Playwrite -நாடக ஆசிரியர்

2.storyteller -கதை சொல்லி 

3.screenplay -திரைக்கதை

4.Asthetics-அழகியல், முருகியல்

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக

பிறமொழிச் சொல் -தமிழ்ச்சொல்

  1. கோல்ட் பிஸ்கட்- தங்கக் கட்டி 
  2. யூஸ் பண்ணி- பயன்படுத்தி 
  3. ஈக்வலாக- சமமாக 
  4. வெயிட்- எடை 
  5. பட்- ஆனால் 
  6. எக்ஸ்பெரிமெண்ட் -பரிசோதனை 
  7. ரிப்பீட்- மீண்டும் 
  8. ஆன்சர் -விடை 
  9. ஆல் தி பெஸ்ட் -வாழ்த்துக்கள்

நிற்க அதற்குத் தக

நீங்கள் படித்து முடித்த பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.

  1. என் துறையில் வல்லுநரானபின் அத்துறையினைப் பற்றிய நூல்களைத் தமிழாக்கம் செய்வேன் 
  2. என் துறையில் இருக்கும் கலைச்சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன்.
  3. என் துறையைத் தமிழோடு தொடர்புபடுத்துவேன். 
  4. என் துறையின் சிறப்புக் கூறுகளைத் தமிழ்ப் படுத்துவேன்.
  5. என் துறையைத் தமிழர் வாழ்வுக்காக மேம்படுத்துவேன்.

திருக்குறள் குறுவினா

1.கரப்பிடும்பை இல்லார்’ இத்தொடரின் பொருள் கூறுக.

கரப்பிடும்பை இல்லார்: 

‘தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்’ என்பது இதன் பொருளாகும்.

2.தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

  1. தஞ்/சம் – நேர் நேர் – தேமா
  2. எளி/யர் – நிரை நேர் – புளிமா
  3. பகைக்/கு – (நிரை நேர்) – நிரைபு - பிறப்பு (வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீராகக் கருதி)

3.வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

குறளின் கருத்து:

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.

4.பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.

  1. செந்நாப்போதார், உழைத்ததால் கிடைத்த ஊதியத்தைக் கூரான ஆயுதம் என்கிறார்.
  2. ஏனெனில், உழைத்ததால் கிடைத்த ஊதியமே, பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்.

சிறுவினா

1.வள்ளுவம் , சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

அமைச்சு 

  1. ஒரு செயலைச் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார். 
  2. மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சர் ஆவார்.
  3. இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் பெற்றிருப்பவரே அமைச்சர் ஆவார்.
  4. ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செய்பவரே அமைச்சர் ஆவார். 
  5. இவ்வாறாக வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துகின்றன.

2.பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

தமக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்காதவருக்கு வள்ளுவர் கூறும் அறிவுரை:

  1. சுற்றத்தாருடன் ஒருவர், அன்பு இல்லாமலும், பொருந்திய துணை இல்லாமலும், வலிமை இல்லாமலும், இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?
  2. மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் அன்பு இல்லாதவராய், பிறர்க்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.

Monday, January 30, 2023

ஸ்டீபன் ஹாக்கிங்


அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்

 

முன்னுரை

அறிவை விட முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில், அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்த பேரண்டத்தையும் அளப்பது.

ஹாக்கிங்குடன் நான்

நாசா நடத்திய தேர்வில் நான் முதலிடம் பெற்றதால், ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றேன். ஏற்கனவே அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் காலத்தின் சுருக்கமான வரலாறு நூலை வாசித்திருந்தேன். அதனால் பேரண்டம் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட்டது.

தன்னம்பிக்கை மனிதர்

கொலம்பியா விண்வெளி ஓடத்தில் அமர்ந்தோம். அவர் புன்முறுவல் செய்தார். என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த அவரின் கன்னத்தசை அசைவுகளை உள்வாங்கி, நுண்ணறிவுக் கணினி என்னிடம் மொழிபெயர்க்கத் தொடங்கியது. அவரின் தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைத்தது.

கலந்துரையாடல்

அவருடனான கலந்துரையாடலின்போது பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை. அறியாமை அறிவாற்றலில் மிகப்பெரிய எதிரி அல்ல. அது அறிவின் மாயை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கினார். இப்பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுள் என்ற கருத்தை மறுத்தார்.

கருந்துளை

நம் பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன. ஒரு விண்மீனின் ஆயுட்கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை சுருங்கி, அதன் ஈர்ப்பு உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. அப்போது அதிலிருந்து ஒளிகூட தப்பி வரமுடியாது. அதனைச் சுற்றிய பகுதிகளில் இருந்து வரும் கதிர்வீச்சுகளைக் கொண்டுதான் அது ஒரு கருந்துளை என்பதை அறிய முடியும். அது இறுதியில் வெடித்துச் சிதறிவிடும். சிதறியவை மீண்டும் நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகும். ஆகவே, கருந்துளை என்பது படைப்பு ஆற்றல்.

பெற்ற விருதுகள்

  1. அமெரிக்க அதிபர் விருது
  2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது
  3. உல்ஃப் விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

நகைச்சுவை உணர்வு

தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? எள்ளி நகையாடுகிறார்.

துணிச்சல்காரர்

சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.

உலகிற்கு எடுத்துக்காட்டு

"உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ ஊனமோ ஒருவனுக்குக் குறையாகாது. ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத்தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும்" என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ஹாக்கிங்.

முடிவுரை

விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். அவர் என் மனக்கண்ணில் தன்னம்பிக்கையின் சிகரமாக நிழலாடுகிறார். அறிவுத்தேடலில் உடல் உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை. அவரின் வாழ்வு உலகிற்கான பாதை.

 

 

Thursday, January 26, 2023

மிகவும் மெல்லக் கற்போருக்கு

 கவிதை

ஓவியம்… ஓவியம்… 

இது 

காவியம்… காவியம்…


ஓவியம்… ஓவியம்…

இது 

அழியாத… ஓவியம்…


ஓவியம்… ஓவியம்…

இது 

அழியாத… காவியம்…


ஓவியம்… ஓவியம்…

இது 

அழியாத… பாவியம்…


(நன்றி: சேட்டு மதார்ஸா ஈரோடு)

சான்றோர் வளர்த்த தமிழ்

1. சங்கப் புலவர்கள் தமிழ் வளர்த்தனர்

2. சமணப் பள்ளிகள், மடங்கள் தமிழ் வளர்த்தன

3. ஆழ்வார்கள், நாயன்மார்கள் தமிழ் வளர்த்தனர்

4. திருவள்ளுவர், கம்பர் தமிழ் வளர்த்தனர்

5. பாரதியார், பாரதிதாசன் தமிழ் வளர்த்தனர்.


விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

1. அரியானாவில் பிறந்தார்

2. அரசுப் பள்ளியில் படித்தார்

3. வானில் பறக்க ஆசைப்பட்டார்

4. வானியல் படித்தார்

5. விண்வெளியில் பறந்தார்

6. விண்கலம் வெடித்து இறந்தார்


அரசுப் பொருட்காட்சி

1. அரசுப் பொருட்காட்சி சென்றோம்

2. பல்துறை அரங்குகளைப் பார்த்தோம்

3. அழகாக இருந்தது

4. கண்ணைக் கவர்ந்தது

5. கருத்தைக் கவர்ந்தது

6. அறுசுவை உணவு உண்டோம்

7. மகிழ்வுடன் திரும்பினோம்


தமிழ்ச் சொல் வளம்

1. தமிழ் சொல் வளம் நிறைந்தது

2. எல்லாப் பொருளுக்கும் சொற்கள் உண்டு

3. ஒரு பொருளுக்குப் பல சொற்கள் உண்டு

4. அடிவகை, கிளை வகை, இலை வகை, பூ வகை, காய்கனி வகை, மணிவகை எனப் பல வகையான சொற்கள் உண்டு

5. புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப புதிய சொல்லாக்கம் தேவை.


ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

தமிழ் வாரஇதழ் வெளியிடும் ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

1. புதினங்கள்

2. குறும் புதினங்கள்

3. சிறுகதைகள்

4. சினிமா

5. விருதுகள்

6. சிறப்புகள்

வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள்!

விலை ரூ.30/-

தமிழ்ப் பதிப்பகம், மதுரை.


அன்னமய்யா

1. புதியவன் வந்தான்

2. தண்ணீர் கேட்டான்

3. அன்னமையா, நீச்சுத் தண்ணீர் கொடுத்தான்

4. பழைய சோறு தந்தான்

5. அன்பு காட்டினான்

6. அன்னமிட்டவனின் பெயர் அன்னமய்யா


ஒருவன் இருக்கிறான்

1. குப்புசாமி அனாதை

2. வயிற்று வலியால் துடித்தான்

3. வீரப்பன் குப்புசாமிக்கு உணவுவிட்டான்

4. கடன் வாங்கி உதவி செய்தான்

5. நோய் குணமாக கடவுளிடம் வேண்டினான்

6. அளவற்ற அன்பு காட்டினான்.


தற்குறிப்பேற்ற அணி

1. தன் குறிப்பு ஏற்றிக் கூறுவது

2. போருழத் தெடுத்த…

3. காற்றில் கொடி அசைவது இயல்பு. கோவலனை வர வேண்டாம் என்று கை அசைத்ததாகக் கவிஞர் கூறுகிறார்.


தீவக அணி

1. தீபம் போல நின்று பொருள் தருவது

2. சேந்தன வேந்தன்…

3. சேந்தன என்னும் சொல் விளக்கு போல நின்று பொருள் தருகிறது


நிரல்நிறை அணி

1. நிரல்நிறையாகப் பொருள் தருவது

2. அன்பும் அறனும் உடைத்தாயின் என் வாழ்க்கை பண்பும் பயனும் அது

3. அன்புக்குப் பண்பு அறனுக்குப் பயன். நிரல் நிறையாக வந்துள்ளது.


தன்மை அணி

1. இயல்புத் தன்மையைக் கூறுவது

2. மெய்யில் பொடியும்…

3. கண்ணகியின் கலைந்த கோலத்தை இயல்பாகக் கூறுகிறது.


மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

வாழ்த்து மடல்

சென்னை,

01-01-2023.

அன்புள்ள நண்பா,

நான் நலம். நீ நலமா? மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றாய். உன்னை வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

___________.

பெறுநர்

_________,

_________,

_________.

 

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

 புகார்க் கடிதம்

அனுப்புநர்

__________,

__________,

__________.

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

சென்னை.

அம்மா,

வணக்கம். முல்லை உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது விடுதலை மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________.

இடம்: சென்னை

நாள்:01-01-2023

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

சென்னை.

இணைப்பு:

1.       உணவின் புகைப்படம்

2.       உணவுக் கட்டணச் சீட்டு

 

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந் நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக

நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்

அனுப்புநர்

__________,

__________,

__________.

 

பெறுநர்

தினமணி ஆசிரியர்

சென்னை.

அம்மா,

வணக்கம்.  தினமணி நாளிதழின் பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் என்ற எனது கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________

இடம்: சென்னை

நாள்: 01-01-2023.

பெறுநர்

தினமணி ஆசிரியர்,

சென்னை.

 

உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுந்தடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

_________,

_________,

_________.

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

சென்னை.

அம்மா,

வணக்கம். ங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்ல அச்சமாக இருக்கிறது. சரி செய்யும் படி வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

___________

 

இடம்: சென்னை

நாள்: 01-01-2023.

பெறுநர்

மின்வாரிய அலுவலர்,

சென்னை.

 

பா நயம் பாராட்டல்

1.       திரண்ட கருத்து

பாடல்

2.       மோனை

முதல் எழுத்து ஒன்று போல் வருவது

3.       எதுகை

இரண்டாம் எழுத்து ஒன்று போல் வருவது

4.       இயைபு

கடைசி எழுத்து ஒன்று போல் வருவது

5.       சொல் நயம்

பாடல்