மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
பாராட்டுக் கடிதம்
6, திருவள்ளுவர் தெரு,
சங்கரலிங்கபுரம்,
23-09-2020.
அன்புள்ள நண்பா,
நான் இங்கு நலம். உனது நலம் அறிய ஆவல். உன் குடும்பத்தினர் நலமும் அறிய ஆவல். "தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" என்ற பொய்யாமொழிப் புலவரின் வரிகளை மெய்யாக்கியவன் நீ. 'மரம் இயற்கையின் வரம்' எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றாய் என்பதை ஊடகங்கள் மூலம் அறிந்தேன்; உள்ளம் மகிழ்ந்தேன்.
மரங்கள் கடவுள் தந்த வரங்கள். மரங்களைத் தெய்வமாக வணங்கும் பண்பாடு கொண்டவர்கள் நாம். சுற்றுச்சூழல் ஆர்வலன் நீ. பசுமைக் காவலன் நீ. உன்னுடைய அறிவுத்தேடலும் ஆக்க சிந்தனையும் வெல்லும் திறம் உடையன. "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து" என்ற குறளுக்கு ஏற்ப அழகுதமிழ்ச் சொல்லால் சொற்சுவையும் பொருட்சுவையும் மிளிர அடுக்கிக் கூறும் ஆற்றல் உடையவனே. உன்னுடைய கருத்தாழமும் கவிச் சிறப்பும் கட்டமைக்கும் பாங்கும் கட்டுரையில் நேர்த்தியை ஏற்படுத்துவன.
உன்னுடைய வெற்றி தொடர வேண்டும். உன்னுடைய எழுத்தும் பேச்சும் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும். நமது பசுமைப்பூமி பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே, என்னுடைய ஆசை. உன்னுடைய பதில் மடலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
அன்புள்ள நண்பன்,
எழிலன்
உறைமேல் முகவரி:
பெறுநர்
தமிழன்
6, தொல்காப்பியர் தெரு,
ஒண்டிப்புலி நாயக்கனூர்,
விருதுநகர் (மாவட்டம்).
No comments:
Post a Comment