விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
முன்னுரை
"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன் "
என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, ஞானப் பெண்ணாய் ஞாலம் அளந்தாள், வீரமங்கை. நிலவைப் பார்த்து உணவுண்ட காலத்திலேயே, நிலவில் சோறு உண்ணக் கனாக் கண்டவள், கல்பனா. வானில் நட்சத்திரங்களை எண்ணி, அவள் வானத்து நட்சத்திரமான வரலாறு காண்போம், வாரீர்!
குழந்தைப் பருவம்
அரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் பனாரஸ் லால் சாவ்லா - சன்யோகிதா தேவி இணையருக்கு மகளாக மார்ச் 17, 1962 ஆம் ஆண்டு பிறந்தார், கல்பனா. கல்பனா என்ற பெயருக்கு 'கற்பனை' என்று பொருள். கல்பனாவுக்கு, விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜே. ஆர். டி. டாடா (ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அவர்களைப் பார்த்தது முதல் விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.
கல்வி
கல்பனா பள்ளிக்கல்வியைத் தாகூர் அரசுப் பள்ளியிலும், இளங்கலை விண்வெளிப் பொறியியல் படிப்பைப் பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையிலும், முனைவர்பட்ட விண்வெளிப் பொறியியல் படிப்பைக் கொலராடோ பல்கலையிலும் படித்தார்.
பணி
நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தோடு இணைக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட முறைகள் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரை இறங்குதல் பற்றிக் திரவ இயக்கவியல் கணக்கீடு ஆராய்ச்சி மேற்கொண்டார். விமானம் மற்றும் மிதவை வானூர்திகளை (கிளைடர்களை) ஓட்டக் கற்றுக் கொடுக்கும் தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு, ஓட்ட அனுமதியும் பெற்றார்.
1995ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.
சாதனைகள்
1997ஆம் ஆண்டு விண்வெளி விண்கலப் பணி ஊர்தி 87 இல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தொழில் நுட்ப வல்லுநராக விண்வெளி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார்.
ஜனவரி 16, 2003 விண்வெளி விண்கலப்பணி ஊர்தி 107 இல் விண்வெளிக்குச் சென்றார். கல்பனா சாவ்லாவின் பொறுப்புகளாக 'மைக்ரோ ஈர்ப்பு' (கிராவிட்டி) சோதனைகள் அமைந்திருந்தன. கல்பனாவின் குழு எண்பது பரிசோதனைகளை மேற்கொண்டது.
விபத்து
பிப்ரவரி 1, 2003 இல் தனது பதினாறு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியானார்கள். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
விருதுகள்
அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசாவின் விண்ணோட்டப் பதக்கம் மற்றும் சிறப்பு சமூக சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கப்பட்டது. இளம்பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடக அரசு 2004 முதல் 'கல்பனா சாவ்லா விருது' வழங்கி வருகிறது. இஸ்ரோ 'கல்பனா சாவ்லா' பெயரில் ஒரு விண்கலத்தை ஏவியது. அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் தனது விண்கலத்திற்கு 'எஸ்எஸ் கல்பனா' என்று பெயரிட்டுள்ளது.
முடிவுரை
விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது தியாகம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டு, கனவுகளை நனவாக்கிச், சாதனை படைத்த சாவ்லாவின் வழியைப் பின்பற்றுவோம், வாரீர்!
- மலர் மகேந்திரன்
No comments:
Post a Comment