Thursday, September 10, 2020

உரைநடையின் அணிகலன்கள்

 உரைநடையின் அணிகலன்கள்


புதிய உரைநடை என்ற நூலிலிருந்து ... எழில்முதல்வன்

காலந்தோறும் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

🔥சங்கப் பாடல்கள்

🔥அற இலக்கியங்கள்

🔥காப்பிய இலக்கியங்கள்

🔥சிற்றிலக்கியங்கள்

🔥சந்தக் கவிதைகள்

🔥புதுக்கவிதைகள்

🔥நவீன கவிதைகள்


உரைநடை இலக்கியத்தின் புதுப்புது வடிவங்கள்

✍️சிறுகதை

✍️கட்டுரை

✍️புதினம்


பேசினால் உரையாடல்; எழுதினால் உரைநடை.

உவமை

உணர்ச்சியை காட்ட உவமை கொண்ட மொழிநடையை ஏற்ற கருவி

எடுத்துக்காட்டு:

"திருப்பரங்குன்றத்தின் அழகைப் பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய நிலைக்கண்ணாடிகளைப் போல் வடபுறமும் தென்புறமும் நீர் நிறைந்த கண்மாய்கள்" என்று 'குறிஞ்சி மலரில்' நா. பார்த்தசாரதி உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.

உருவகம்

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்தண்டி

இலக்கியங்களில் உணர்வுகளைத் தூண்டுவதில் உவமையைவிட  உருவகமே வெற்றி பெறுகிறது.

எடுத்துக்காட்டுகள்

1.முக நிலவில் வியர்வை முத்துக்கள் துளிர்த்தன.

2. "களம் புகத் துடித்து நின்ற உனக்கு வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்; உன் புன்னகை தான் அதற்குச் சான்று".  -அண்ணாவின் உரைநடை.


எடுத்துக்காட்டு உவமையணி

உவம உருபு மறைந்து வந்தால், அதற்கு எடுத்துக்காட்டு உவமை அணி என்று பெயர்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 

வாய்மையால் காணப் படும்.

 இதில் உவமை உருபு இல்லை

எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்தும்போது 'இணை ஒப்பு' என்கிறோம்.

எடுத்துக்காட்டு

"ஊர்கூடிச் செக்கு தள்ள முடியுமா? என்று கேட்கிறார்கள், ஊர் கூடின பிறகுதான் செக்கு தள்ள வேண்டும் என்று  நினைப்பவர்களின் காரியம் கைகூடாது, புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை" என்று எழுத்தாளர் வ.ராமசாமி 'மழையும் புயலும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.


இலக்கணை

உயிர் இல்லாத பொருள்களை உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்லாத பொருள்களை உணர்வு உள்ளன போலவும் கற்பனை செய்வது.


"ஞாயிறு, திங்கள், நெஞ்சம் போன்ற அஃறிணைப் பொருள்கள், சொல்லுந போலவும், கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்" (தொல்காப்பியம், செய்யுளியல், 192)

எடுத்துக்காட்டு

தமிழ்த் தென்றல் திரு வி க அவர்களின் உரைநடை

"சோலையில் புகுவேன்; மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும்; ஆல்,'என் விழுதைப் பார், அந்த அரசுக்கு இஃது உண்டா?' என்னும். அரசு கண்ணில் படும், 'யான் விழுது இன்றி ஓங்கி உயர்ந்து நிற்கிறேன், என்னை மக்கள் சுற்றிச் செல்கிறார்கள், காண்' என்னும். வேம்பு,'என் நிழல் நலம் செய்யும், என் பூவின் குணங்களைச் சொல்கிறேன், வா' என்னும். அத்தி, நாகை, விளா, மா, வில்வம் முதலிய மரங்கள் விளியாமல் இருக்குமோ? சிந்தனையில் அவைகளின் நுட்பங்கள் விளங்கும். மலை என்னை அடிக்கடி அழைக்கும். மலை மீது இவர்வேன்; ஓரிடத்தில் அமர்வேன்; மேலும் கீழும் பார்ப்பேன்; சுற்றுமுற்றும் பார்ப்பேன்; மனம் அமைதி எய்தும்."

மோனையும் எதுகையும்

மோனையும் எதுகையும் செய்யுளில் வருமாயின் இனிய ஓசை இன்பம் விளையும்.

எடுத்துக்காட்டு

சொல்லின் செல்வர் ரா பி சேதுப்பிள்ளை அவர்களின் 'தமிழ் இன்பம்' என்ற நூலிலிருந்து....

"தென்றல் தவழ்ந்து வரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மழைவளம் படைத்த பழம்பதி ஆகும் ; கோங்கும் வேங்கையும் ஓங்கி வளரும்; குரவமும் முல்லையும் நறுமணம் கமழும்; கோலமா மயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப்பாட்டிசைக்கும்.  இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச் சுனையிலே விழுந்து பொங்கும் போது சிதறும் நீர்த்திவலைகள் பாலாவி போல் பரந்து எழுந்து  மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்"

உணர்வு வெளிப்பாட்டிற்கும் சொல்லப்படும் கருத்துக்கு அழுத்தம் தரவும் பயன்படுத்தப்படும் உத்தி

சொல்லையோ கருத்தையோ திரும்பத் திரும்பச் சொல்வது...


எடுத்துக்காட்டு

டாக்டர் மு.வ. வின் தம் நாட்டுப் பற்று என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து...

"வாழ்க்கை நடத்துவதற்கு பொருள்கள் பல வேண்டும்; அரிசி, காய், கனி முதலியவை வேண்டும்.  உடை, வீடு முதலியவை வேண்டும்; காசும் காகித நோட்டும் வேண்டும்; இன்னும் பல வேண்டும்; இவற்றை ஆளும் அறிவு வேண்டும்".

முரண்படு மெய்ம்மை

படிப்பவருக்கு முரண்படுவது போல் இருக்கும். ஆனால், உண்மையில் முரண்படாத மெய்ம்மையைச் சொல்வது முரண்படு மெய்ம்மை.

எடுத்துக்காட்டு

"இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?"

சொல் முரண்

முரண்பட்ட சொற்களைச் சேர்த்து எழுதுவது...

எடுத்துக்காட்டு

'கலப்பில்லாத பொய்'


எதிரிணை இசைவு

சொல்லும் முறையில் அழுத்தம் கொடுப்பதற்காக எதிரும் புதிருமான முரண்படும் கருத்துக்களை அமைத்து எழுதுவது...

எடுத்துக்காட்டு

தோழர் ப.ஜீவானந்தம் எழுதியிருப்பது....


"குடிசைகள் ஒருபக்கம்; கோபுரங்கள் மறுபக்கம் ; பசித்தவர்கள் ஒருபக்கம் ; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒரு பக்கம்; பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்? தோழர்களே, சிந்தியுங்கள்!"


கேள்வியிலேயே பதில் இருப்பது

அண்ணா பேசியது...

"அவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவர் தாக்குதலைப் பெறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது?... எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை தனிமனிதனின்  வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம் - ஒரு காலகட்டம் - ஒரு திருப்பம் - என்று கூறுகிறேன்".

உச்சநிலை

சொல்லையோ, கருத்தையோ அடுத்தடுத்து வைக்கும் முறையிலே உள்ள சிறப்பு தான்...


எடுத்துக்காட்டு

பாரதியின் வரிகள்...

இந்தியா தான் என்னுடைய மோட்சம்; இந்தியாவின் நன்மை தான் என் நன்மை; இந்தியா தான் என் இளமையின் மெத்தை; என் யௌவனத்தின் நந்தவனம்; என் கிழக்காலத்தின் காசி"


1 comment: