Monday, October 19, 2020

3 மதிப்பெண் வினாக்கள், இயல் 4

 இயல் 4

3 மதிப்பெண் வினாக்கள்


1). இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

 

மனிதனை மேம்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள்

சுற்றுப்புறத்தை உற்றுநோக்கிப் பகுத்தாராயும் மனிதன், பல அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறான். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக, அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே செய்ய முடிகிறது.  விண்ணிற்கு செயற்கைக்கோள்களை ஏவி, பூமியின் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து, திட்டமிட்டுச் செயல்பட முடிகிறது.  ஆழ்கடல் ஆராய்ச்சியிலும், விண்வெளித் தொழில்நுட்பத்திலும், அணுக்கரு உலைகளிலும் இயந்திர மனிதனின் பங்கு அளவிடற்கரியது.

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய இயந்திர மனிதன் ஆசிரியராக, வங்கி உதவியாளராக, போக்குவரத்துக் காவலராக, கால்நடைப் பராமரிப்பாளராக,  நுட்பமான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் மருத்துவராகப் பணியாற்றி மனித வாழ்வை வளப்படுத்துகிறான்.  மின் வணிகம், காணொலி வழி மருத்துவ ஆலோசனை, அரசுத்துறைகளின் மின்னணு முறையிலான சேவைகள் முதலியவை மக்களுக்குப் பெரிதும் பயன்தருகின்றன.

நவீன அறிவியலின் தாக்கத்தால் புதிது புதிதான நோய்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து முறையான சிகிச்சைகளை அளிக்க முடிகிறது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள், கடினமான பணிகளை எளிதாக்குகின்றன; கால விரயத்தைத் தடுக்கின்றன; மனிதனின் கவலைகளைப் போக்கி, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்விற்கு அடித்தளம் அமைக்கின்றன.


2). மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியில் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.


எதிர்காலத் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் மனிதர்களால் செய்ய இயலாத, அலுப்புத் தட்ட கூடிய, கடினமான செயல்களைச் செய்யும். மனித முயற்சிக்கு உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்யும்.  குழந்தைகளைப் பாதுகாப்பது, பராமரிப்பது முதல் வயதானவர்களுக்கு உற்ற தோழனாய் இருப்பது வரை அனைத்தையும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களே செய்யும்.

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளை ரோபோக்கள் அளிக்கும். மேலும், நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, உடன் வந்திருக்கும் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது எனப் பலவற்றை செய்யும்.

எதிர்காலத்தில் நாம் அனைவரும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஊர்திகளில் பயணம் செய்வோம்.  அதனால் விபத்துக்கள் குறையும்; எரிபொருள் மிச்சப்படும்; பயண நேரம் குறையும்.  செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருட்கள் நமக்கு கதைகள்,கவிதைகள் கூறும். நம்முடைய மனநிலை அறிந்து, இனிய பாடல்களைப் பாடி நம்மை மகிழ்விக்கும்.  நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, தேர்ந்த மருத்துவரைப் போல சிகிச்சை அளிக்கும்.  


3). "மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

மாளாத காதல் நோயாளன் போல்

உவமை: உடலில் ஏற்பட்ட புண்ணை மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டலும், அது நன்மைக்கே என்று உணர்ந்த நோயாளி, மருத்துவரை நேசிப்பது போல.

உவமை உணர்த்தும் செய்தி: வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னை போன்ற இறைவன், தமது விளையாட்டால் நீங்காத துன்பத்தைத் தந்தாலும், அடியவனாகிய நான், அவனது அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன் என்று குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார்.

4). நேற்று இரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், "இலட்சுமி கூப்பிடுகிறாள், போய் பார்" என்றார். "இதோ சென்று விட்டேன்" என்றவாற அங்குச் சென்றேன்.  துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, "என்னடா விளையாட வேண்டுமா?" என்று கேட்டு, அவனை அவிழ்த்துவிட்டேன்.  என் தங்கை அங்கே வந்தாள்.  அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

வழுவமைதிகள்

  1. நிறைத்திருந்தது- 'நிறைத்தது' என்று 'இறந்த காலத்தில்' வந்திருக்க வேண்டும். 'நிறைத்திருந்தது' என்று இறந்தகாலத் தொடர்ச் சொல்லாக வந்துள்ளது. எனவே, இது 'கால வழுவமைதி' ஆகும்
  2. வாழைத்தோப்பு- வாழைத்தோட்டம் என்பதே மரபு. 'வாழைத்தோப்பு' என்ற சொல்லில், மரபு மீறப்பட்டுள்ளது. எனவே, இது 'மரபு வழுவமைதி' ஆகும்.
  3. குட்டியுடன் நின்றிருந்த மாடு-'குட்டி' என்பதற்குப் பதிலாக 'கன்று' என்று வந்திருக்க வேண்டும். கன்றைக்  'குட்டி' என்று கூறியமை மரபை மீறியதாகும். எனவே, இது 'மரபு வழுவமைதி' ஆகும்.
  4. இலட்சுமி கூப்பிடுகிறாள்- 'இலட்சுமி கூப்பிடுகிறது' என்று வந்திருக்க வேண்டும். அஃறிணையை உயர்திணையாகக் கூறியமையால், இது 'திணை வழுவமைதி' ஆகும்.
  5. இதோ சென்றுவிட்டேன்- 'இதோ செல்கிறேன்' என்று வந்திருக்க வேண்டும். நிகழ்கால வினைமுற்றுக்குப் பதில், இறந்தகால வினைமுற்று வந்துள்ளதால், இது 'கால வழுவமைதி' ஆகும்.
  6. துள்ளிய குட்டியை- 'துள்ளிய கன்றை' என்று வந்திருக்க வேண்டும். கன்றைக் 'குட்டி' என்று கூறியமை மரபை மீறியதாகும். எனவே, இது 'மரபு வழுவமைதி' ஆகும்.
  7. என்னடா விளையாட வேண்டுமா?- அஃறிணையை (கன்றை) உயர்திணையாகக் (தோழனாக) கூறியமையால், இது 'திணை வழுவமைதி' ஆகும்.
  8. அவனை அவிழ்த்து விட்டேன்- 'அதை அவிழ்த்து விட்டேன்' என்று வந்திருக்க வேண்டும். அஃறிணையை உயர்திணையாகக் கூறியமையால், இது 'திணை வழுவமைதி' ஆகும்.
  9. நீயும் இவனும் விளையாடுங்கள்- 'நீ இதனுடன் விளையாடு' என்று வந்திருக்க வேண்டும். அஃறிணை முன்னிலைப் பெயர், உயர்திணை முன்னிலைப் பெயராக வந்துள்ளது. எனவே, இது 'திணை வழுவமைதி' ஆகும்.
  10. இலட்சுமி நீரைக் குடித்தாள்- 'இலட்சுமி நீரைக் குடித்தது' என்று வந்திருக்க வேண்டும்.  அஃறிணை வினைமுற்று, உயர்திணை வினைமுற்றாக வந்துள்ளதால், இது 'திணை வழுவமைதி' ஆகும்.


No comments:

Post a Comment