Friday, April 22, 2022

மெல்லக் கற்போருக்கான இரண்டு மதிப்பெண் வினாக்கள் 2022

1. “மண்ணும் சிலம்பே மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்கப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  1. சீவக சிந்தாமணி 
  2. வளையாபதி 
  3. குண்டலகேசி

2. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
1). சரியான தொடர்கள்:
    1. ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
    2. ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
2). பிழையான தொடர்:
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
3). பிழைக்கான காரணம்:
தாற்றில் தான் சீப்புகள் இருக்கும்.

3. ‘வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
  1. வேங்கை = மரம்
  2. வேம்+கை = வேகின்ற கை
  3. ‘வேங்கை’ எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்து, பொதுமொழியாகிறது.

4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்‘ – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.
  1. உடுப்பதூஉம் உண்பதூஉம்-இன்னிசை அளபெடை
  2. செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக உயிர் எழுத்துகள் அளபெடுப்பது, இன்னிசை அளபெடையாகும்.

5). “நமக்கு உயிர் காற்று 
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி அறியாமல் நட்டு வளர்ப்போம்” – இது போன்ற உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழுக்கத் தொடர்களை எழுதுக.

1). மரம் தரும் உயிர்வளி 
     மனிதர் வாழ …
     மரம் வளர்ப்பதே ஒரே வழி.

2). பட்டம் கூட முட்டும்!
     பாழ்படுத்தாதீர்..!
     நித்தம் மூச்சும் முட்டும்!

6). வசன கவிதை – குறிப்பு வரைக.
  1. உரைநடையும் கவிதையும் இணைந்து, யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் ‘வசனகவிதை’ எனப்படுகிறது.  
  2. இவ்வடிவம் பாரதியாரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது.  

7). பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
  1. அம்மாவும் அப்பாவும் இப்போதே வந்துவிடுவர். அழாதே செல்லம்! அழாதே!
  2. உனக்குப் பிடித்த தின்பண்டம் வாங்கி வருவார்கள். உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள். அழாதே தங்கம்! அழாதே!

8). மாஅல் – பொருளும் இலக்கண குறிப்பும் தருக.
  1. பொருள்: திருமால்.
  2. இலக்கணக்குறிப்பு:  செய்யுளிசை அளபெடை

9). தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

  1. தண்ணீரைக் குடி. தினமும் ஐந்து லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  2. தயிரை உடைய குடம். அவள் தயிரை உடைய குடத்தை எடுத்து வந்தாள்.

10). ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடர் ஆனது. ‘சிரித்துப் பேசினாள்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
‘சிரித்துப் பேசினாள்’ என்பது ‘சிரித்துச் சிரித்துப் பேசினாள்’ என அடுக்குத்தொடர் ஆகும்.

11). பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
  1. பாரதியார் கவிஞர்- பெயர்ப் பயனிலை
  2. நூலகம் சென்றார்-வினைப் பயனிலை
  3. அவர் யார்?- வினாப் பயனிலை.

12). ‘நச்சப்படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப்படாதவன் – பிறருக்கு உதவி செய்யாததால், ஒருவராலும் விரும்பப்படாதவன்.

13). கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். – இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடை

14). பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.
அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணி காக்கப்படும் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம்பழுத்து போன்று – உயிரினும் ஓம்பப்படும்.
இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் – நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

விடை:
அ) உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் – உயிரினும் ஓம்பப் படும்.
ஆ) ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்று – நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.
இ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.

15). எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ). கூவிளம் தேமா மலர்

ஆ). கூவிளம் புளிமா மலர்

இ). தேமா புளிமா காசு

ஈ). புளிமா தேமா பிறப்பு

விடை:
அ). கூவிளம் தேமா மலர்

16). மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும், அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். 

17). வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்- இத்தொடர் காலவழுவமைதி எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

‘வருகின்ற கோடை விடுமுறை’ என்பது எதிர்காலம். நிகழ்ச்சியின் உறுதித்தன்மை குறித்து இது காலவழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.

18). “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிரக் கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிரக் கடிக்காது” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

19). செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக.

அ) அருளைப் பெருக்கு!
       அறிவைத் திருத்து !!
       மயக்கம் அகற்று !!!

ஆ) அறிவுக்குத் தெளிவு தரும் !
       உயிருக்குத் துணையாய் வரும்!!


20). அமர்ந்தான்- பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்+த்(ந்)+த்+ஆன்
  • அமர் – பகுதி
  • த் – சந்தி
  • ந் – விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

21). இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ இருக்கிறதே …சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே !மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.

  1. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியா வினா
  2. மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? – ஐய வினா


22). “நேற்று நான் பார்த்த ‘அருச்சுனன் தபசு’ என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற் கூற்றாக எழுதுக.
அயற்கூற்று:
முன்தினம் அவன் பார்த்த ‘அருச்சுனன் தபசு’ என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் கூறினான்.

23). உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ 
காலதூதர் கையில் ‘உறங்குவாய் உறங்குவாய்’
 கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
  1. உம்முடைய பொய்யான வாழ்வு இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது என்று எழுப்புகிறார்கள்.. 
  2. காலனுக்குத் தூதரானவர் கையில் இனிப் படுத்து உறங்குவாயாக” என்று உறங்கச் சொல்கிறார்கள்.

24). காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
முதற்பொருள்:
  1. நிலம்: முல்லை (காடு)
  2. பெரும்பொழுது: கார்காலம் (மழைக்காலம்)
சிறுபொழுது: மாலை
கருப்பொருள்:
உணவு: வரகு

25). கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
  1. உழவர்கள் வயலில் உழுதனர்.
  2. நெய்தல் பூச்செடிகளைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
26). ‘கரப்பிடும்பை இல்லார்’ இத்தொடரின் பொருள் கூறுக.

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்’ என்பது இதன் பொருளாகும்.

27). தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.
  • தஞ்/சம் – நேர் நேர் – தேமா
  • எளி/யர் – நிரை நேர் – புளிமா
  • பகைக்/கு – (நிரை நேர்) – நிரைபு – பிறப்பு
 
28). வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
குறளின் கருத்து:
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்.
29). பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
 பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.
  1. உழைத்ததால் கிடைத்த ஊதியம்
  2. ஏனெனில், அது பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதமாகும்
30)வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். 

31). பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறி இடுக.

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

விடை:

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

32). மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பி, அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.

33). பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  1. பாசவர் – வெற்றிலை விற்பவர் 
  2. வாசவர் – ஏலம் முதலான நறுமணப்பொருள்கள் விற்பவர்
  3. பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சி விற்பவர் 
  4. உமணர் – வெண்மையான உப்பு விற்பவர்

34). புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

  1. வெட்சி × கரந்தை 
  2. வஞ்சி × காஞ்சி 
  3. நொச்சி × உழிஞை

35)குறிப்பு வரைக. – அவையம்

அவையம்:
அறம் கூறும் மன்றங்கள், அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன. 

36). ‘கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

அ).அடி எதுகையை எடுத்து எழுதுக.

ஆ)இலக்கணக் குறிப்பு எழுதுக.

 கொள்க, குரைக்க.

விடை:

அ). அடியெதுகை: ‘ள்‘
கொள்வோர்
ள்வாய்

ஆ). இலக்கணக் குறிப்பு:
கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்றுகள்

37). குறள் வெண்பாவின் இலக்கணத்தைக் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதல் அடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

எடுத்துக்காட்டு:
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

38). வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கலோசை ஆகும். துள்ளலோசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

கலவைத் தொடர்:
வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும், கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியன.

39). நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. – இத்தொடரை இரு தொடர்களாக்குக.

தனி வாக்கியங்கள்:
  1. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.
  2. அதற்கு உரிய காரணமும் உண்டு.

40). “காய் மணி ஆகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” – உவமை உணர்த்தும் கருத்து யாது?

இளம்பயிர் நெல்மணிகளைக் காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டன போல, கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றான்.

 

41). தீவக அணியின் வகைகள் யாவை?
  1. முதல் நிலைத் தீவகம் 
  2. இடை நிலைத் தீவகம் 
  3. கடை நிலைத் தீவகம்.
42). ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’ – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
இக்குறளில் சொல்லையும் பொருளையும் வரிசைப்படி நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், இது நிரல்நிறை அணியாயிற்று.

No comments:

Post a Comment