Tuesday, April 26, 2022

மொழியோடு விளையாடு அனைத்து இயல்களும்

சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)

எ.கா. பூமணி

  1. மணிமேகலை
  2. தேன் மழை
  3. பூமழை
  4. வான்மழை
  5. பொன்மழை
  6. செய்விளக்கு 
  7. பொன்செய்
  8. செய்மணி
  9. செய்தேன்
  10. வான்விளக்கு
  11. பொன்மணி
  12. பூந்தேன்
  13. பூத்தேன்

குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க

(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)

எ.கா. குறளின்பத்தில் திளைக்காத புலவர் உண்டோ?

  1. சுவை தராத இளநீர் உண்டோ?
  2. காப்பியச் சுவை அறியாத தமிழ்ப்புலவர் உண்டோ?
  3. அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவும் மனித குல மேன்மையே அன்றி வேறெதுவும் உண்டோ?
  4. பாடும் பறவைகளுக்கு விடுமுறை நாள் உண்டோ?

எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.

  1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை: நான்கு - ச
  2. எறும்புந்தன் கையால் எண்சாண்: எட்டு - அ
  3. ஐந்துசால்பு ஊன்றிய தூண்: ஐந்து- ரு
  4. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி: நான்கு, இரண்டு- ச, உ
  5. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி: ஆயிரம் - க000


அகராதியில் காண்க 

  1. அடவி-மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி, காடு , சோலை
  2. அவல்(அகன்ற பள்ளம்)-பள்ளம், விளைநிலம், குளம், வயல்
  3. சுவல்-மேட்டு நிலம், பிடரி, முதுகு, குதிரையின் கழுத்து மயிர், தொல்லை.
  4. செறு(சேறு நிறைந்த நிலம்)-வயல், பாத்தி, செய்
  5. பழனம்-பொய்கை, மருத நிலம், நீர்நிலச்சேறு, பொது நிலம், வயல்
  6. புறவு-காடு, முல்லை நிலம், புறம்பு, புறா, முல்லைக்கொடி.

தலைப்பு : கல்வி


புத்தகம் வாசித்திடு; புதிதாய்ச் சுவாசித்திடு
தீமை துரத்திடும்; தூய்மை ஆக்கிடும்
வறுமை ஓட்டிடும்; வளமை கூட்டிடும்
விதியை விலக்கிடும்; விழியைத் திறந்திடும்
மதியை வளர்த்திடும்; மதிப்பை உயர்த்திடும்
அற்றம் காத்திடும்; நம் சுற்றம் காத்திடும்
உளியாய்ச் செதுக்கிடும்; பழியை அகற்றிடும் 
இன்பம் ஊட்டிடும்; வீட்டைக் காட்டிடும்.

இயல் 2


சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.


1) முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

விடை: நறுமணம்

2) பழமைக்கு எதிரானது- எழுதுகோலில் பயன்படும்.

விடை: புதுமை

3) இருக்கும்பொழுது உருவமில்லை- இல்லாமல் உயிரினம் இல்லை.

விடை: காற்று

4) நாலெழுத்தில் கண் சிமிட்டும்- கடையிரண்டில் நீந்திச் செல்லும்

விடை: விண்மீன்

5) ஓரெழுத்தில் சோலை- இரண்டு எழுத்தில் வனம்.

விடை: காடு

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்து எழுதுக.

1) கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
தலைப்பு: காற்றின் பாடல்

2) புவி சிலிர்த்து, மண்ணில் இருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாக பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

தலைப்பு: மொட்டின் வருகை

3) சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூ வாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

தலைப்பு: மிதக்கும் வாசம்

4) இரவின் இருள் அமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும். கசகசத்த உயிரினங்கள்.
தலைப்பு: உயிர்ப்பின் ஏக்கம்

5) நின்றுவிட்ட மழை தரும் குளிர். சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர் பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

தலைப்பு: நீரின் சிலிர்ப்பு

6) குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக் காற்றின் ஆலோலம்.

தலைப்பு: வனத்தின் நடனம்

இயல் 2


  1. அகன்சுடர்-உயர்ந்த தீபம்(அகன்ற சுடர், பெரிய சுடர், உயர்ந்த சுடர்) கதிரவன்
  2. ஆர்கலி- கடல்(ஆர்ப்பரிக்கும் கடல்), மழை(ஆரவாரத்துடன் பெய்யும் மழை), பறவை ம்ம்
  3. கட்புள்-விழித்திருக்கும் பறவை(கண் விழித்திருக்கும் பறவை)கண்+புள்(பறவை)
  4. திருவில்-வானவில்(பெரிய வில், அழகான வில்)
  5. திரு-அழகு, செல்வம்
  6. கொடுவாய் - வாள் முதலிய வற்றின் வளைந்த வாய், குறளை, பழிச்சொல், ஒருவகை மீன், புலி வகை, வாயில் இருந்து வடியும் நீர்;கொடு- வளைந்த, கொடுமையான

தலைப்பு: மரம் வளர்த்திடு


ஆறறிவு படைத்த மானிடா!
புல்லறிவு கொண்டது ஏனடா?!
சூழல் கெடுத்து சூனியம் வைத்தாய்!
முற்றும் மறந்து உற்றவை அழித்தாய்!
ஓரறிவு கொண்டது தானடா!
உலகிற்கு உயிரென்று ஆனதடா!
மழை தந்து வாழ வைக்கும்!
மன்னுயிர்க் கெல்லாம் உரமாய் நிற்கும்!
தவமிருந்து மரங்கள் வளர்த்திடு!
தலைமுறை தனைக் காத்திடு!

விடுபட்ட எழுத்துக்களை நிரப்பி அந்த எழுத்துக்களை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.

இ_கு (பறவையிடம் இருப்பது)

கு_தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)

வா_ (மன்னரிடம் இருப்பது)

அ_கா (தங்கைக்கு மூத்தவள்)

ம_ (அறிவின் மறுபெயர்)

பட_ (நீரில் செல்வது)

இறகு, குருதி, வாள், அக்கா, மதி, படகு. (தி-ரு-க்-கு-ற-ள்)

நூலின் பெயர்: திருக்குறள்


இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக

சிலை- சீலை

சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்.

தொடு-தோடு

காதில் தொங்கிய தோடு, தோளைத் தொட்டுக் கொண்டிருந்தது.

மடு-மாடு

மடுவில் மாடு குளித்தது. (மடு-குளம்)

மலை-மாலை

மாலையில் மலைமீது ஏறினார்.

வளி-வாளி

வாளியில் வளியே நிறைந்திருக்கிறது

விடு-வீடு

வீடுபேறு அடைய தீய செயல்களைக் கைவிட வேண்டும்

இயல் 3

  1. ஊன்-இறைச்சி
  2. ஊண்-உணவு
  3. திணை-ஒழுக்கம், பிரிவு; உயர்+திணை=உயர்திணை (கடவுள்,மனிதர்);அல்+திணை=அஃறிணை;(விலங்குகள் மற்றும் உயிரற்ற பொருள்கள்)
  4. தினை-ஒருவகை தானியம்
  5. அன்னம்(அன்னப்பறவை, சோறு)
  6. அண்ணம்- வாயின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ மேற்பகுதி
  7. வெல்லம்- சருக்கரை, இனிப்புக் கட்டி
  8. வெள்ளம்-நீர்

தலைப்பு: அன்பு


ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும்...
ஒருவேளைக் கூழே உண்டாலும்...
உள்ளம் நிறைய அன்புடனே...
ஒருகை நீயும் அளித்தாயே!
கசங்கிய உடையை அணிந்தாலும்...
கலங்கா உள்ளம் படைத்தாயே!
இல்லா நிலையை அடைந்தாலும்...
இரங்கிய உள்ளம் படைத்தாயே!
உன்போல் ஒருவரைக் கண்டாலே...
ஊக்கத்தால் உள்ளம் துளிர்த்திடுமே!!

தொடரைப் படித்து விடையைக் கண்டறிக 

1) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ________(கற்றல்)

2) விதைக்கு தேவை எரு எனில், கதைக்குத் தேவை_______(கரு)

3. கல் சிலை ஆகுமெனில், நெல் ______ஆகும். ( சோறு

4) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ______( எழுத்து)

5) மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது_______(பூவில்)

இயல் 4

  1. அவிர்தல்-பிரகாசித்தல்,ஒளிர்தல் விளங்குதல்
  2. அழல்-நெருப்பு, கோபம், நஞ்சு
  3. உவா -முழுநிலவு, கடல், இளமை, யானை
  4. கங்குல்-இரவு
  5. கனலி-சூரியன், நெருப்பு

பக்கம் 97

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக 

குறிப்பு: எதிர்மறையான சொற்கள்

  1. மீளாத் துயர்- மீண்ட துயர்
  2. கொடுத்துச் சிவந்த- கொடாது சிவந்த  
  3. மறைத்துக் காட்டு- மறையாது காட்டு 
  4. அருகில் அமர்க- தொலைவில் அமர்க
  5. பெரியவரின் அமைதி- பெரியவரின் கூச்சல்
  6. புயலுக்கு பின்- புயலுக்கு முன்.

தலைப்பு: தொழில்நுட்ப அடிமை



கிரகாம்பெல் கண்ட அற்புத விளக்கு!

மார்ட்டின் கூப்பரின் மந்திர விளக்கு!

பேஜ் பிரினின் கூகுள் தேடல்...

சூக்கர் பெர்கின் முகநூல் நட்பு...

ஆக்டன்- கௌமின் புலனப் பார்வை ...

ஆளை மயக்கும் ஆண்ட்ராய்டு பதிப்பு..!

ஆட் கொண்டதில் இல்லையே வியப்பு..!

ஆசை உறவை அலைபேசியில் கண்டாய்!

படிப்பும் பணியும் கைபேசியில் முடித்தாய்!

தொழில்நுட்பத் தொல்லையில் தொலைந்தேன் போனாய்?!

தொடுதிரை உலகில் அடிமை ஆனாய்..!

புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க

தார்போன்ற நிறமுண்டு கரியும் இல்லை

பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமும் இல்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியும் இல்லை

சோர்ந்து போகாமல் வீடு அமைப்பேன் பொறியாளரும் இல்லை

வீட்டுக்கு வரும் முன்னே, வருவதை கூறுவேன்.

நான் யார்?

விடை: காகம்

தொழில் பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1) நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருட்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்.

2) காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது.

3) காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலை ஆக்குகிறது

4) பசுமையான காட்சியைக் காணுதல் கண்ணுக்கு நல்லது.

5) பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.

அகராதியில் காண்க

  1. மன்றல்- திருமணம்
  2. அகராதி- அகரமுதலி
  3. மருள்- மயக்கம், வியப்பு
  4. அடிச்சுவடு- காலடியின் அடையாளம்
  5. தூவல்- மழை, இறகு, பேனா, ஓவியம்

தலைப்பு: மரம் வளர்த்திடுக!


மரம் அழித்த மானிடர்..!

வரம் இழந்து போயினர்..!

சோலைகள் பாலைகள் ஆயின...

சுவாசமும் சுவர்க்கமும் ஏகின...

கரும்பலகையில் மரம் வரைந்து

கற்பதில் ஏது பயன்?

உணவும் உயிரும் தந்திடும்!

உணர்வும் ஊக்கமும் தந்திடும்!

உள்ளம் தெளிந்து,

விருட்சம் வளர்த்து,

பெறுக நற்பயன்!

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக

  1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது. 
  2. அனைவரின் பாராட்டுக்களால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது 
  3. வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
  4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசுமையான புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது 
  5. வெயிலில் அலையாதே; உடல் கருக்கும் 

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக 

(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து).
  1. விரட்டாதீர்கள்- பறவைக்கு மரம் வீடு. வெட்டாதீர்கள் -மனிதருக்கு அவை தரும் மரவீடு.
  2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும். சோலைப்பூவினில் வண்டினம் கவிழும்.
  3. மலைமுகட்டில் மேகம் தங்கும்- அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.
  4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும்-இதைத் தத்துவமாய்த் தோற்பாவைக்கூத்து சொல்லும்.
  5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது.- அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.

இயல் 6

  1. தால்- நாக்கு(தாலாட்டு -நாவால் பாடப்படும் பாட்டு)
  2. அகவுதல்- அழைத்தல், ஒலித்தல், பாடுதல்
  3. அணிமை- அண்மை, அருகு, பக்கம்
  4. உழுவை- புலி 
  5. ஏந்தொழில்- மிகுந்த அழகு(ஏந்து+எழில், ஏந்து-மிக)

தலைப்பு: ஒயிலாட்டம்

காலின் சலங்கையில் கனவுகள் நில்லும்!

கைச்சிறு துணியில் காரியம் செல்லும்!

இடுப்பின் கச்சையில் ஈரம் சிந்தும்!

உருமியின் ஓசையில் உணர்ச்சிகள் உந்தும்!

ஒய்யார ஆட்டத்தில் வீரமே முந்தும்!

தாளத்தின் நீளத்தில் தாவலும் இருக்கும்!

ஒத்த அசைவில் ஓர்மை ஒளிரும்!

கலையின் நிறைவில் கண்கள் மிளிரும்!

ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக

  1. புதுக்கோட்டை- புதுகை
  2. திருச்சிராப்பள்ளி- திருச்சி
  3. உதகமண்டலம் -உதகை
  4. கோயம்புத்தூர் -கோவை
  5. நாகப்பட்டினம்- நாகை
  6. புதுச்சேரி -புதுவை
  7. கும்பகோணம் -குடந்தை
  8. திருநெல்வேலி -நெல்லை
  9. மன்னார்குடி-மன்னை
  10. மைலாப்பூர் -மயிலை
  11. சைதாப்பேட்டை- சைதை


படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக








இந்தப் படம் திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் கண்டுபிடிக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டின் சுவர் ஓவியம் ஆகும். இப்படம் போருக்குச் செல்லும் குதிரைப்படை, காலாட்படை, யானைப் படை வீரர்களைக் காட்சிப்படுத்துகிறது. போருக்குச் செல்லும் வீரர்கள் வாள், வேல், வில்- அம்பு முதலியவற்றை ஏந்திச் செல்வர். தமிழர்கள் வீரத்தைத் உயிராகக் கருதினர். போரில் விழுப்புண் பட்டு உயிர் விடுவதை பெருமையாகக் கருதினர்.

இயல்-7

  1. மிரியல்- மிளகு
  2. அதசி- சணல்
  3. வருத்தலை- பெருகுதல், தொழில்,சீவனம்
  4. துரிஞ்சில்- வௌவால் வகை, சீக்கி மரம்

தலைப்பு : உழவன்


ஏர்பிடித்து உழுபவன்...

ஏற்றம்கட்டி இறைப்பவன்...

இறைவனுக்கு அடுத்தவன்...

இருதொழிலே தெரிந்தவன்...

வள்ளலாரின் மூத்தவன்...

வழுவாமல் காப்பவன்...

பசிப்பிணி அறிந்தவன்...

பயிர்களை ஆள்பவன்...

பேரிடரைப் பொறுப்பவன்...

பெருமைதான் சொல்லிடவோ..!

கண்டுபிடித்து எழுதுக

1 2 3 4 5 6 7 8 10 ஆகிய எண்ணுப்பெயர்கள் இடம்பெறும் திருக்குறள்களைக் கண்டுபிடித்து எழுதுக….



  1. பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு
  2. கண்ணுடையர் என்பவர் கற்றோர் கல்லாதவர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
  3. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு
  4. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
  5. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு
  6. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு
  7. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து
  8. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை
  9. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்

சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக



1. கானடை
கான் அடை-காட்டைச் சேர்
கான்+நடை-காட்டுக்கு நடத்தல்
கால் +நடை-காலால் நடத்தல்
2. வருந்தாமரை
வரும்+தாமரை-வருகின்ற தாமரைமலர்
வருந்தா மரை-வருந்தாத மான்
வரும் தா மரை-வருகின்ற தாவுகின்ற மான்
3. பிண்ணாக்கு-
எண்ணெய் எடுத்த கழிவு
பிள்+நாக்கு-பிளவுபட்ட நாக்கு
4. பலகையொலி
பலகை ஒலி-பலகையின் ஓசை
பல கையொலி-பலருடைய கை ஓசை
பல கை ஒலி-பல்வேறு சிறிய ஓசைகள்


  1. ஆசுகவி- இன்னசொல் கொண்டு, இன்ன பொருள்படப் பாடுக என்றால் உடனே பாடுவது(கவி காளமேகப் புலவர் , பாடுக என்று சொன்னவுடனே பாடுவதில் வல்லவர்)
  2. மதுரகவி - சொற்களையும் பொருட்களையும் சுவை ததும்பப் பாடுவது (கம்பராமாயணம் போன்ற இனிமையான பாடல்கள்)
  3. சித்திரகவி -எழுத்தைச் சித்திராக வடிப்பது
  4. வித்தாரகவி - விரித்து பாடப்பெறும் பாட்டு, விரிவாகப் பாடும் நூல்(ஐம்பெருஙகாப்பியங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்)

தலைப்பு : ஈகை



அன்பே அகிலம் ஆள வேண்டும்

ஆசை நிலவாய்த் தேய வேண்டும்

இன்பம் கடலாய்ப் பெருக வேண்டும்

ஈகை என்றும் நிலைக்க வேண்டும்

உழைப்பை யாவரும் மதிக்க வேண்டும்

ஊக்கம் கொண்டு உழைக்க வேண்டும்

உள்ளம் குளம் போல் இருக்க வேண்டும்

கைகள் கொடுத்துச் சிவக்க வேண்டும்

தானம், தருமம் வளர வேண்டும்

தடுப்போர் இல்லாமல் இருக்க வேண்டும்.

இயல்- 9

  1. குணதரன்- முனிவன், நற்குணமுடையவள்
  2. செவ்வை- நேர்மை, மிகுதி, வழி, சரியான நிலை
  3. நகல்- நட்பு, படி, ஏளனம், மகிழ்ச்சி(நகுதல்)
  4. பூட்கை- கொள்கை, மனவுறுதி, வலிமை, சிங்கம், யானை(உறுதி பூண்டார்)

இயல் 9 கவிதை


எல்லாம் இழந்த கணம்!

ஈயென இரங்கும் மனம்!

பணம் இடுவர் சிலர்!

சினம் இடுவர் சிலர்!

தன்பி எடுப்போரும் உளர்!!

வாடும் உடலும் தினம்!

வாழ்வும் சில்லறைப் பணம்!

காட்சியில் மனிதம் பிணம்!

காணும் என்மனம் கனம்!

பெருக வேண்டும் தானம்!


விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க .


விருதுநகர் மாவட்டம் போக்குவரத்துக் காவல் துறை சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. "சாலை பாதுகாப்பு தொடர் அன்று -அது தொடரும் வாழ்க்கை முறை"  என்ற குறிக்கோளை மையமாகக் கொண்ட இந்நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்பு தொடர்பான குறியீடுகள் விளக்கிக் கூறப்பட்டன. 

கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன்கிழமையை 1-ஆம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.



No comments:

Post a Comment