Wednesday, August 21, 2024

இயல் 4

 பத்தாம் வகுப்பு இயல் 4

பலவுள் தெரிக 

1.“உனதருளே பார்ப்பன் அடியேனே”- யாரிடம் யார் கூறியது?

இறைவனிடம் குலசேகராழ்வார்

2.தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க. 

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு 

குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது

விடை: தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

3.பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

வானத்தையும் பேரொலியையும்

4.குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழு அமைதி முறையே-

பால் வழுவமைதி, திணை வழுவமைதி

5.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

இலா

குறுவினா

1.வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

செயற்கை நுண்ணறிவு

  1. வயதானவர்களுக்குஉதவி செய்யும் ரோபோக்கள் 
  2. குழந்தைகளைப் பராமரிக்கும் ரோபோக்கள் 

2.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

கால வழுவமைதி

  1. எதிர்காலத்தில் நடக்க இருப்பதை நிகழ்காலத்தில் நடப்பது போல கூறப்பட்டுள்ளது. இது வழு. 
  2. ஆயினும் இது திட்டமிடப்பட்ட உறுதியான நிகழ்ச்சி ஆகும். எனவே இது வழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.

3.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

பெருமாள் திருமொழி

  1. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். 
  2.  இந்த அன்பும் நம்பிக்கையும் நோயாளியை விரைவில் குணமடையச் செய்யும்.

4.உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

பரிபாடல்-புவியின் உருவாக்கம்

  1. ஏதுமில்லாப் பெருவெளியில் கரு பேரொலியுடன் தோன்றியது. 
  2. கருவிலிருந்து காற்றும் வானமும் தோன்றின. 
  3.  கரு வளர்ந்து கிளர்ந்து வெடித்துச் சிதறியது. 
  4. அதில் நெருப்புப் பந்துபோல பூமி உருவானது. 
  5. பின்னர் தொடர்ந்து பெய்த மழையால் கடலும் நிலமும் உருவாயின. 
  6. இவை பூமியில் உயிர்கள் தோன்றி வளரக் காரணமாக அமைந்தன.

5.“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்து கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றி பெருமையாகக் கூறினார். -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக

திணை வழுவமைதிகள்- திருத்தம்

சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்து குரைக்குமே தவிர கடிக்காது.

சிறுவினா

1.மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

பெருமாள் திருமொழி

  1. மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். 
  2. வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையே எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன்.

2.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக. 

செயற்கை நுண்ணறிவு

  1. உயிரினங்களில் மனிதரை உயர்த்தி காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! 
  2. அந்தச் சிந்தனைக்கு தொழில்நுட்பமும் துணை செய்கிறது. 
  3. மனிதர்கள் செய்யும் வேலைகளான மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழ்ந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்யக் கணினிக் கரங்கள் நீள்கின்றன. 
  4. கட்டுரை எழுதும் மென்பொருள்கள், கவிதை பாடும் ரோபோக்கள், மனிதனால் இயலாத செயல்களை செய்யும் ரோபோக்கள், ஆள்கள் இல்லாமலே நடத்தப்படும் வணிகக் கடைகள் எனப் புதிது புதிதான வழிகளில் செயற்கை நுண்ணறிவு என்னும் அறிவியல் தொழில்நுட்பம் மனிதனை மேம்படுத்துகிறது. 

3.மனிதர்களின் மூளையைப் போன்றது செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில்நுட்பம்

  1. திறன்பேசிகளில் இயங்கும் உதவும் மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி சில உதவிகள் செய்கின்றது. 
  2.  இவை நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கும். 
  3. நாம் திறக்கக் கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். 
  4. நாம் கேட்பதை உலாவியில் தேடும். 
  5. நாம் விரும்பும் அழகான கவிதையை இணையத்தில் தேடித் தரும்! 
  6. எந்தக் கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். 
  7. நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றிக் கருத்துரைக்கும். 
  8. எதிர்காலத்தில் உங்கள் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மெய்நிகர் உதவியாளர் உங்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கும்; “டாக்டர் திரும்பவும் ஐயாவுக்கு மூச்சுத் திணறல்! டெரிஃப்லின் ஊசி போட்டுவிடட்டுமா?” என்று கேட்கும். இந்த உதவியாளர்களை ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ என்று பாரதியார் மெச்சுவதுபோல் மெச்சிக்கொள்ளலாம். 

4.“நேற்று இரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலட்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். “இதோ சென்று விட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட இலட்சுமி தொட்டியில் இருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

திணை வழுவமைதி 

  1. இலட்சுமி கூப்பிடுகிறாள்.
  2. இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்
  3. “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டேன்.

இட வழுவமைதி

நீயும் இவனும் விளையாடுங்கள்

கால வழுவமைதி

  1. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.
  2. இதோ சென்று விட்டேன்.

மரபு வழுவமைதி

வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது.

நெடுவினா

1.ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேநீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்

முன்னுரை 

நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம். நாம் நினைப்பதை விடவும் வேகமாக இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. உலகில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் பயன்படுத்துவதிலும் விற்பனை செய்வதிலும் கவனம் செலுத்துகின்றன. இத்தொழில்நுட்பம் உலகளாவிய வணிகத்துக்கு உதவுகிறது. வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப் போகிறது.

குழந்தைப் பராமரிப்பாளராக…

எதிர்காலத்தில் ரோபோவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்க்கப் போகிறோம். 

உற்ற தோழனாக …

வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும் அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக்கொடுத்தும் பேணும் ரோபோக்களை நாம் பார்க்கப் போகிறோம்!

கடின வேலைகளைச் செய்யும் பணியாளராக…

செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால் மனிதர் செய்ய இயலாத, அலுப்புத்தட்டக் கூடிய, கடினமான செயல்களைச் செய்ய முடியும். மனிதன் முயற்சியில் பேராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய முடியும்!

உற்பத்தி மற்றும் வணிகத்தில்…

புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு நல்குகிறது. பெருநிறுவனங்கள் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன.

போக்குவரத்தில்…

எதிர்காலத்தில் நாம் பயணிக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயக்க வேண்டியிருக்கும். இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்துகள் குறையும்; போக்குவரத்து நெரிசல் இருக்காது. அதன் மூலம் பயண நேரம் குறையும்; எரிபொருள் மிச்சப்படும். 

மனிதனுடன் போட்டியிடும் போட்டியாளராக…

இத்தகைய மென்பொருள் கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு அவை மனிதர்களுடன் போட்டியிடும். கல்வித்துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பலவிதங்களில் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. 

உதவியாளராக…

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளை ரோபோக்கள் அளிக்கும். மேலும், நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, உடன் வந்திருக்கும் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவது எனப் பலவற்றைச் செய்யும். 

மருத்துவத்தில்…

மனித இனத்தைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றவும் உடல் நலத்தைப் பேணவும் கொடிய நோய்களைத் தொடக்க நிலையிலையே கண்டறியவும் மருத்துவம் செய்யும் முறைகளைப் பட்டறிவுமிக்க மருத்துவரைப் போல பரிந்துரை செய்யவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

முன்னேற்றம்

செயற்கை நுண்ணறிவு நமது வாழ்க்கையையும் வணிகத்தையும் நம்மை அறியாமலேயே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது உலகில் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பயன்பாட்டில் இருக்கின்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், எதிர்காலத்தில் உலகின் ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய முன்னேற்றத்தைத் தரும். 

முடிவுரை 

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பு அறிமுகமாகும்போதும் பழைய வேலை வாய்ப்புகள் புதிய வடிவில் மாற்றம் பெறுவதால் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கண்டு நாம் அச்சப்பட வேண்டியதில்லை. ஆகவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அளிக்கும் வியக்கத்தக்க நன்மைகளைப் புரிந்து கொள்ளவும் வரவேற்கவும் நாம் அணியமாக வேண்டும்.

2.நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பரிபாடல்-புவியின் உருவாக்கம்

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதி காலந்தொட்டு இயங்கிவரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளது இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்… புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகின்ற கருத்து கூறப்பட்டிருக்கிறது.  

எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்திற்குக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது. உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளருகின்ற வானம் என்னும் முதல் பூதத்தின் ஊழி அது. 

அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருட்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. 

பிறகு நெருப்புப் பந்து போல புவி உருவாகி விளங்கிய ஊழிக்காலம் தொடர்ந்தது. 

பின்னர் பூமி குளிரும்படியாக தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது. 

மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது. 

உயிர்கள் தோன்றிய நிலைபெறும்படியான ஊழிக்காலம் வந்தது. 

இவ்வாறாக இன்றைய அறிவியல் கூறுகின்ற கருத்தை அன்றே காட்டிய பழங்கவிதை நமக்கு வியப்பிலும் வியப்பைத் தருகிறது.

3.“அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்” என்னும் தலைப்பில் கற்பனை கதை ஒன்று எழுதுக.

அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்

முன்னுரை

அறிவை விட முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில், அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டுமொத்த பேரண்டத்தையும் அளப்பது.

ஹாக்கிங்குடன் நான்…

நாசா நடத்திய தேர்வில் நான் முதலிடம் பெற்றதால், ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றேன். ஏற்கனவே அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் “காலத்தின் சுருக்கமான வரலாறு” நூலை வாசித்திருந்தேன். அதனால் பேரண்டம் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட்டது.

தன்னம்பிக்கை மனிதர்

கொலம்பியா விண்வெளி ஓடத்தில் அமர்ந்தோம். அவர் புன்முறுவல் செய்தார். என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சக்கரநாற்காலியில் அமர்ந்திருந்த அவரின் கன்னத்தசை அசைவுகளை உள்வாங்கி, நுண்ணறிவுக் கணினி என்னிடம் மொழிபெயர்க்கத் தொடங்கியது. அவரின் தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைத்தது.

கலந்துரையாடல்

அவருடனான கலந்துரையாடலின்போது பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். மாற்றத்திற்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்திகூர்மை. அறியாமை அறிவாற்றலில் மிகப்பெரிய எதிரி அல்ல. அது அறிவின் மாயை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதைக் கணிதவியல் அடிப்படையில் விளக்கினார். இப்பிரபஞ்சத்தைப் படைத்தவர் ‘கடவுள்’ என்ற கருத்தை மறுத்தார்.

கருந்துளை

நம் பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளன. ஒரு விண்மீனின் ஆயுட்கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை சுருங்கி, அதன் ஈர்ப்பு உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. அப்போது அதிலிருந்து ஒளிகூட தப்பி வரமுடியாது. அதனைச் சுற்றிய பகுதிகளில் இருந்து வரும் கதிர்வீச்சுகளைக் கொண்டுதான் அது ஒரு கருந்துளை என்பதை அறிய முடியும். அது இறுதியில் வெடித்துச் சிதறிவிடும். சிதறியவை மீண்டும் நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகும். ஆகவே, கருந்துளை என்பது படைப்பு ஆற்றல்.

பெற்ற விருதுகள்

  1. அமெரிக்க அதிபர் விருது
  2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது
  3. உல்ஃப் விருது முதலிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

நகைச்சுவை உணர்வு

தலைவிதி தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? எள்ளி நகையாடுகிறார்.

துணிச்சல்காரர்

சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். போயிங் 727 என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.

உலகிற்கு எடுத்துக்காட்டு

“உடலில் ஏற்பட்ட உறுப்பு இழப்போ ஊனமோ ஒருவனுக்குக் குறையாகாது. ஊக்கமும் உழைப்பும் சேர்ந்த ஆளுமைத்தன்மை இல்லாமல் இருப்பதே குறையாகும்” என்ற உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் ஹாக்கிங்.

முடிவுரை

விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். அவர் என் மனக்கண்ணில் தன்னம்பிக்கையின் சிகரமாக நிழலாடுகிறார். அறிவுத்தேடலில் உடல் உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை. அவரின் வாழ்வு உலகிற்கான பாதை.

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Malar : Devi, switch off the lights when you leave the room.

Devi : yeah. We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi : who knows? In feature our country may launch artificial moons to light our night time sky!

Malar : I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi : superb news! If we have lunch artificial moons they can assist in disaster relief by beaming light on areas that lost power!

மலர் : தேவி, நீ அறையை விட்டுச் செல்லும்போது விளக்குகளை அனைத்து விட்டுச் செல்.

தேவி: ஆமாம், நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்

மலர்: இரவில் நம் வீதிகளை ஒளிரச் செய்வதற்காக நம் நாடு நிறைய மின்சாரத்தைச் செலவு செய்கிறது

தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில் நம் நாடு இரவு நேர வானத்தை ஒளிரச் செய்ய செயற்கை நிலவுகளை நிறுவலாம்.

மலர்: வேறு சில நாடுகளும் எதிர்காலத்தில் இந்த ஒளியூட்டும் செயற்கைக்கோள்களை விரைவில் நிறுவ உள்ளதாக நான் படித்திருக்கிறேன்.

தேவி: அற்புதமான செய்தி! செயற்கை நிலவுகளை நாமும் நிறுவினால், மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஒளி வீசச் செய்வதன்மூலம் பேரிடர் மீட்பில் அவற்றைப் பயன்படுத்தலாம்.

பத்தியைப் படித்து பதில் தருக

பருப்பொருள்கள் குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகியஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக் காலம் கடந்தது

1.பத்தியில் உள்ள அடுக்கு தொடர்களை எடுத்து எழுதுக.

மீண்டும் மீண்டும்

2.புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

3.பெய்த மழை- இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

பெய்மழை 

4.இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

பெருவெடிப்புக் கொள்கை 

5.உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவீர் கருதுவன யாவை?

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை அடங்கிய சூழலே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும்.

வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?

எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளது போல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும்.

பறவைகளுக்கு பார்த்தல் கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்

யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு

திருத்தம்

காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடியிருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது கேட்கும்.

பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.

கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ) இயற்கை- செயற்கை

பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.

ஆ) கொடு- கோடு 

கோடு போட உன்னுடைய அளவுகோலைக் கொடு.

இ) கொள்- கோள் 

பூமிக்கோள் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏற்ற சூழலைக் கொண்டிருக்கின்றது.

ஈ) சிறு- சீறு 

சீறும் பாம்பைக் கண்டதும் சிறுவன் நடுங்கினான்.

உ) தான்-தாம் 

அவர்கள் தாமே செய்ய வேண்டிய செயல்களைக் கூட என்னிடம்தான் ஒப்படைத்தார்கள்.

ஊ) விதி- வீதி 

விதியை நொந்து வீதியில் அலையாதே

தொடரைப் படித்து விடையைக் கண்டறிக 

1.நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ________(கற்றல்)

2.விதைக்கு தேவை எரு எனில், கதைக்குத் தேவை_______(கரு)

3.கல் சிலை ஆகுமெனில், நெல் ______ஆகும். (சோறு

4.குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ______(எழுத்து)

5.மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது_______(பூவில்)

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக 

குறிப்பு: எதிர்மறையான சொற்கள்

  1. மீளாத் துயர்- மீண்ட இன்பம்
  2. கொடுத்துச் சிவந்த- கொடாது கறுத்த  
  3. மறைத்துக் காட்டு- மறையாது காட்டு 
  4. அருகில் அமர்க- தொலைவில் நிற்க
  5. பெரியவரின் அமைதி- சிறுவனின் கூச்சல்
  6. புயலுக்கு பின்- புயலுக்கு முன்.
  7. பார்த்த படம்- பார்க்காத படம் 
  8. எழுதாக் கவிதை -எழுதிய கவிதை

அகராதியில் காண்க

  1. அவிர்தல்-பிரகாசித்தல்,ஒளிர்தல் விளங்குதல்
  2. அழல்-நெருப்பு, கோபம், நஞ்சு
  3. உவா -முழுநிலவு, கடல், இளமை, யானை
  4. கங்குல்-இரவு
  5. கனலி-சூரியன், நெருப்பு

கலைச்சொல் அறிவோம் 

  1. Nanotechnology – மீநுண் தொழில்நுட்பம்
  2. Biotechnology -உயிரித் தொழில்நுட்பம்
  3. Ultraviolet rays -புற ஊதாக் கதிர்கள்
  4. Space technology -விண்வெளித் தொழில்நுட்பம்
  5. Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
  6. Infrared rays -அகச்சிவப்புக் கதிர்கள்

கட்டுரை- விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி

பேணி வளர்த்திடும் ஈசன்“

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, ஞானப் பெண்ணாய் ஞாலம் அளந்தாள், வீரமங்கை. நிலவைப் பார்த்து உணவுண்ட காலத்திலேயே, நிலவில் சோறு உண்ணக் கனாக் கண்டவள், கல்பனா. வானில் நட்சத்திரங்களை எண்ணி எண்ணி, அவள் வானத்து நட்சத்திரமான வரலாறு காண்போம், வாரீர்!

குழந்தைப் பருவம்

அரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் பனாரஸ் லால் சாவ்லா – சன்யோகிதா தேவி இணையருக்கு மகளாக மார்ச் 17, 1962 ஆம் ஆண்டு பிறந்தார், கல்பனா. கல்பனா என்ற பெயருக்கு ‘கற்பனை’ என்று பொருள். கல்பனாவுக்கு, விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜே. ஆர். டி. டாடா (ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா) அவர்களைப் பார்த்தது முதல் விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.

கல்வி

கல்பனா பள்ளிக்கல்வியைத் தாகூர் அரசுப் பள்ளியிலும், இளங்கலை விண்வெளிப் பொறியியல் படிப்பைப் பஞ்சாப் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையிலும், முனைவர்பட்ட விண்வெளிப் பொறியியல் படிப்பைக் கொலராடோ பல்கலையிலும் படித்தார்.

பணி

நாசாவின் அமெஸ் ஆராய்ச்சி மையத்தோடு இணைக்கப்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட முறைகள் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார். செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரை இறங்குதல் பற்றித் திரவ இயக்கவியல் கணக்கீடு ஆராய்ச்சி மேற்கொண்டார். விமானம் மற்றும் மிதவை வானூர்திகளை (கிளைடர்களை) ஓட்டக் கற்றுக் கொடுக்கும் தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு, ஓட்ட அனுமதியும் பெற்றார்.

1995ஆம் ஆண்டு நாசா விண்வெளிவீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.

சாதனைகள்

1997ஆம் ஆண்டு விண்வெளி விண்கலப் பணி ஊர்தி 87 இல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தொழில்நுட்ப வல்லுநராக விண்வெளி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டார்.

ஜனவரி 16, 2003 விண்வெளி விண்கலப்பணி ஊர்தி 107 இல் விண்வெளிக்குச் சென்றார். கல்பனா சாவ்லாவின் பொறுப்புகளாக ‘நுண் ஈர்ப்புச்’ ( மைக்ரோ கிராவிட்டி) சோதனைகள் அமைந்திருந்தன. கல்பனாவின் குழு எண்பது பரிசோதனைகளை மேற்கொண்டது.

விபத்து

பிப்ரவரி 1, 2003 இல் தனது பதினாறுநாள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருந்த நிலையில் விண்கலம் விபத்துக்குள்ளானது. இரண்டு பெண்கள் உட்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியானார்கள். இந்தியா, அமெரிக்கா உட்பட உலகமே அதிர்ச்சியோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

விருதுகள்

அமெரிக்க காங்கிரஸ் விண்வெளிப் பதக்கமும், நாசாவின் விண்ணோட்டப் பதக்கம் மற்றும் சிறப்பு சமூக சேவைக்கான பதக்கமும் கல்பனாவுக்கு வழங்கப்பட்டது. இளம்பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடக அரசு 2004 முதல் ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கி வருகிறது. இஸ்ரோ ‘கல்பனா சாவ்லா’ பெயரில் ஒரு விண்கலத்தை ஏவியது. அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனம் தனது விண்கலத்திற்கு ‘எஸ்எஸ் கல்பனா’ என்று பெயரிட்டுள்ளது.

முடிவுரை

விண்வெளி வீரராக கல்பனா சாவ்லாவின் பங்களிப்பு, தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது தியாகம் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் வரிகளை மனத்தில் கொண்டு, கனவுகளை நனவாக்கிச், சாதனை படைத்த சாவ்லாவின் வழியைப் பின்பற்றுவோம், வாரீர்!

பா நயம் பாராட்டல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

கோல வெறிபடைத்தோம்;

உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ?

மனத்தை வாழ்த்துதல்

திரண்ட கருத்து

நிலாவையும் விண்மீனையும் காற்றையும் சமமாகக் கருதி, அவற்றின் அமுதைப் பருகி, அவற்றிலே நிலைகொண்டோம். மனப்பறவையை எங்கும் ஓட்டி மகிழ்ந்திடுவோம். பழவண்டியில் பலாச்சுளையை வட்டமிட்டு வண்டு பாடுவதில் ஒன்றும் வியப்பில்லையே.

சொல் நயம்

பாரதியார் தம் கவிதையில், ‘அமுதக்குழம்பு, கோலவெறி, மனச்சிறுபுள்’ ஆகிய அழகான சொற்களைக் கையாண்டுள்ளார். 

பொருள் நயம்

‘பாலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு பாடுவதும் வியப்போ’ என்ற கவிதைவரி ‘கவிஞர்கள், இயற்கை அழகில் மயங்கிக் கவிபாடுவதில் வியப்பில்லை’ என்னும் உள்ளுறை கருத்தை வெளிப்படுத்துகின்றது. இது, உள்ளுறை உவமமாக அமைந்து கவிதைக்குச் சுவை கூட்டுகிறது.

சந்த நயம்

“குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு கோலவெறி படைத்தோம்;

உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்” என்ற வரிகளில் சந்தநயம் பயின்று வந்துள்ளது.

தொடை நயம்

“தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்” என்பார்கள். இப்பாடலில் மோனை, எதுகை, இயைபு ஆகிய தொடை நயங்கள் பயின்று வந்துள்ளன.

மோனை நயம்

குழம்பை 

குடித்தொரு 

என்ற இடங்களில் மோனை நயம் பயின்று வந்துள்ளது.

எதுகை நயம்

நிலாவையும்

குலாவும்

என்ற இடங்களில் எதுகை நயம் பயின்று வந்துள்ளது.

இயைபு நயம்

படைத்தோம்

மகிழ்ந்திடுவோம்

என்ற இடங்களில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணி நயம்

அமுதைக் குழம்பாகவும், மனத்தைச் சிறுபறவையாகவும் கவிஞர் உருவகம் செய்துள்ளார். எனவே, இது ‘உருவக அணி’ ஆகும்.

பா வகை

இப்பாடல், ‘அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்’ ஆகும்.

நிற்க அதற்குத் தக

தொலைக்காட்சி மற்றும் திறன்பேசிகளில் மூழ்கி இருக்கும் நண்பர்களுக்கு நீங்கள் காட்டும் வழி யாது?

1.நண்பர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும்

2.நூலகங்களுக்குச் சென்று நல்ல நூல்களை வாசிக்க வேண்டும்

3.நண்பர்களுடன் பேசி மகிழ வேண்டும்.

4.நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்

5.பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும்

No comments:

Post a Comment