Saturday, August 31, 2024

மாதிரி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உரை-RJ

அன்பினில் இன்பம் காண்போம்

அறத்தினில் நேர்மை காண்போம்

துன்புறும் உயிர்கள் கண்டால்

துரிசறு கனிவு காண்போம்

வன்புகழ் கொடையில் காண்போம்

வலிமையைப் போரில் காண்போம்

தன் பிறப்புரிமை யாகத்

தமிழ்மொழி போற்றக் காண்போம் என்று தமிழை வாழ்த்தி எனது தொகுப்புரையைத் தொடங்குகிறேன்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து. பாடலைப் பாட 12ஆம் வகுப்பு மாணவிகளை அன்போடு அழைக்கிறோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து

“குழந்தை

வரைந்தது

பறவைகளை மட்டுமே

வானம்

தானாக உருவானது” என்பார் கவிஞர் கலாப்ரியா. இன்றைய தினம் குழந்தைகள் தினமாக இனிமையாக, இனிப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.

காலங்கள் உருண்டோடி வருகின்றன. அறத்தை மறந்த இந்தக் காலத்தில்தான் அறம் பற்றிய சிந்தனையும் உயிர்ப்புறுகிறது. ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம்’ என்கிறார் வள்ளுவர். மனத்தில் சிறிதும் குற்றம் இல்லாத தலைமையாசிரியர் அவர்களை, இந்த விழாவிற்குத் தலைமையேற்று நடத்தி, தலைமை உரை ஆற்ற வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

தலைமையாசிரியர் உரை

தலைமை உரை வழங்கி, எங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டிய தலைமையாசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகளைக் காணிக்கையாக்குகிறோம்.

“எலிமருந்து வாங்க

அப்பாவுடன்

கடைக்குச் சென்ற

குழந்தை

அப்பாவிடம்,

“அப்பா, நம்ம வீட்டு எலிக்கு

உடல் நலம் சரியில்லையா?”

என்று கேட்டாள்.

அப்பா

எலிமருந்து

வாங்காமல்

வீடுதிரும்பினார்”.

இதுதான் குழந்தை. குழந்தைக்கு பேதம் கிடையாது. குழந்தைக்கு அன்பு காட்ட மட்டும்தான் தெரியும்.

அப்படிப்பட்ட அன்புக்குழந்தையாக, குழந்தையின் உலகை அறிமுகப்படுத்த வருகிறார் ஆறாம் வகுப்புக் குழந்தை மிதுனா ஸ்ரீ. கரவொலி எழுப்பி குழந்தையை வரவேற்போமாக…

பேச்சு 1

“உங்கள் சுயத்துடன்

நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும் போது

நீங்கள் நல்லவர்”

என்கிறார் கவிஞர் கலீல் கிப்ரான். குழந்தைகள் நல்லவர்கள். குழந்தை மிதுனா ஸ்ரீ-க்கு நன்றிகளும் பாராட்டுகளும்…

1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நம் நாடு குழந்தையாகப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘சுதந்திர இந்தியா’ என்ற பெயர் சூட்டி, பசிபட்டினியைத் தீர்க்கத் திட்டங்கள் பல தீட்டி, பல இன்னல்களுக்கிடையே இந்தியாவை ஒரு குழந்தையைப் போல வளர்த்தெடுத்த ‘நேரு மாமா’ பற்றிப் பேச வருகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவி _________. அவர்களைக் கரவொலி எழுப்பி வரவேற்போமாக…

பேச்சு 2

நேரு மாமா குறித்தும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதன் காரணம் பற்றியும் நம்மிடையே எடுத்துரைத்த மாணவி _______ க்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“வெள்ளத்தால் அழியாது. வெந்தணலால் வேகாது. வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது. கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது. கள்ளர்க்கோ பயமில்லை. காவலுக்கு மிக எளிது – கல்வி”. – என்ற தனிப்பாடல் கல்வியின் சிறப்பை உணர்த்துகிறது.

கல்வியின் சிறப்பை, பெருமையை நாடக வடிவில் தர வருகிறார்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள். அவர்களை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்துவோமாக…

கல்வி- நாடகம் 1

காட்சிக்கு விருந்தையும் மருந்தென கருத்தையும் நாடகம் மூலம் விதைத்த அன்பிற்கினிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கரவொலியை நன்றியாக்குகிறோம்.

சுதந்திர இந்தியா தற்போது இளைஞனாக வல்லவனாக நல்லவனாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு எவ்வாறெல்லாம் நேரு அடித்தளமிட்டார் என்பது பற்றிப் பேச வருகிறார் பத்தாம் வகுப்பு மாணவி கோமதி சரண்யா.

பேச்சு 3

அழகாகவும் இனிமையாகவும் பேசிய பத்தாம் வகுப்பு மாணவி_________க்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர்களின் கைகளில் உள்ளது. இளைஞர்களின் ஆற்றல் நெருப்பு போன்றது. சரியாக கையாளாவிட்டால் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். இளைஞர்கள் அசைவிலா ஊக்கம் உடையவனாக இருக்க வேண்டும். இளைஞர்களைப் பற்றிய கவிதை ஒன்று வாசிக்க ஒன்பதாம் வகுப்பு மாணவி தனலட்சுமி வருகிறார். கரவொலி எழுப்பி அவரை வரவேற்போமாக…

கவிதை 1

கவிதை வாசித்தளித்த மாணவிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்!

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல… நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு.

நாம் விதவிதமான ஆடைகளை அணிந்து அழகு படுத்திக் கொள்கிறோம். விதவிதமான சிகை அலங்காரங்கள் செய்து அழகு பார்க்கிறோம். மஞ்சள் பூசி நம் முகத்தை கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறோம். ஆனால் உண்மையான அழகு என்பது கல்வி தரும் அழகே ஆகும். கல்வியால் நம் நெஞ்சம் அழகாகிறது. அதனால் நமது வாழ்க்கையும் அழகாகிறது. கல்வியின் அவசியம் குறித்தான நாடகம் ஒன்றை நடித்துக் காட்ட ஏழாம் வகுப்பு மாணவர்கள் வருகிறார்கள். அவர்களை கரவொலி எழுப்பி உற்சாகமூட்டுவோமாக…

நாடகம் 2

நாடகத்தை நடித்துக் காட்டிய மாணவர்களுக்கு நன்றிகள்!

திரைகடல் ஓடித் திரவியம் தேடியவர் தமிழர். மேலைக் கடல் முழுவதும் கப்பல் விட்டவர் தமிழர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடி இன்புற்றவர் தமிழர். அறிவிலும் ஆற்றலிலும் தமிழர் சிறந்தவர் என்பதற்கு இஸ்ரோ சான்றாகும். விண்வெளித் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விண்வெளித் துறையில் தமிழர்களின் சாதனை பற்றிப் பேச வருகிறார் பத்தாம் வகுப்பு மாணவன் யஸ்வந்தாமன்.

பேச்சு 4

சாதனைத் தமிழர்களின் வழியைப் பின்பற்றி நாமும் சாதனை படைக்க உறுதி ஏற்போமாக…

வாழ்க்கை என்பது

நீ சாகும் வரை அல்ல

மற்றவர் மனதில்

நீ வாழும் வரை…என்கிறார் அன்னை தெரசா. இன்றைய காலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டி இருக்கிறது. இளைஞர்களே இன்றைய குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். இளைஞர்கள் தவறு செய்தால் இளம் குழந்தைகளும் அத்தகைய தவறுகளைத் தவறாமல் செய்வார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இளைஞர்களுக்கு உரிய கடமைகளைப் பற்றி கவிதையாக வழங்க ஒன்பதாம் வகுப்பு மாணவி சர்மிளா வருகிறார். அவர்களை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்துவோம்.

கவிதை 2

கவிதை வாசித்தளித்த மாணவிக்கு வாழ்த்துக்கள்…

அணை உடைஞ்சு போன வெள்ளம், அழுதாலும் வராதும்பாங்க. இளமைப் பருவம் இன்றியமையாதது. அதனால்தான் “இளமையில் கல்” என்று கூறுகிறார்கள். கல்வி கரையில கற்பவர் நாள் சில… மெல்ல நினைக்கின் பிணிபல… தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவை நீர் ஒழியப் பால் உண் குருகின் தெரிந்து. அன்னப்பறவையானது நீரையும் பாலையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனித்துப் பிரித்து உண்ணும். நம்முடைய வாழ்நாளோ மிகவும் குறைவு. படிக்க வேண்டிய நூல்களோ அளவில்லாதது. நம்முடைய மிகக் குறைந்த வாழ்நாளில் நல்ல நூல்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். அப்படிப்பட்ட கல்வியைச் சிறப்பாக போதித்து வருகின்ற தாவரவியல் ஆசிரியர் திரு. இசக்கி முத்துக்குமார் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வாழ்த்துரை 1

வாழ்த்துரை வழங்கிய தாவரவியல் ஆசிரியருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

குத்துக்கல்லுக்கு என்ன குளிரா? வெயிலா? என்கிற மாதிரி மாணவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு “எறும்பு ஊரக் கல்லும் தேயும்கிற” மாதிரி அறிவுரைகளை வழங்கி வருகின்ற விலங்கியல் ஆசிரியர் திரு. சின்னச்சாமி அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வாழ்த்துரை 2

வாழ்த்துரை வழங்கிய விலங்கியல் ஆசிரியருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்…

நன்றியுரை வழங்க வருமாறு தமிழாசிரியர் திரு.மகேந்திரன் அவர்களை வரவேற்கிறோம்.

நன்றியுரை

நன்றியுரை வழங்கிய தமிழாசிரியருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்…

நிகழ்ச்சியின் இறுதியாக நாட்டுப்பண் பாட பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளை அழைக்கின்றோம்.

அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


No comments:

Post a Comment