Saturday, November 21, 2020

பொருளியலும் புறநானூறும்

பண்டைத்தமிழரின் அறநெறி வாழ்க்கை

//உலகில் எங்கும் காணப்படாத தமிழரின் அறநெறி//

செல்வத்துப் பயனே ஈதல்

//பொருளியலின் செல்வப் பகிர்வுக் கோட்பாடு புறநானூற்றில் மிளிர்கிறது//

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

//அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் உண்பது நாழி, உடுப்பவை இரண்டே//

//செல்வம் நிலையில்லாதது. மிகுதியான செல்வத்தை வீட்டிற்குள் பூட்டி வைப்பது அறமாகாது. வறியவருக்குப் பயன்படும்படி செய்தலே அறமாகும்//

புறநானூறு 189

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி 

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் 

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், 

உண்பது நாழி உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே,

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே; தப்புந பலவே.


பாடலின் பொருள்

தெளிந்த நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் முழுவதையும் பிற வேந்தற்குப் பொதுவாதலின்றித் தமக்கே உரித்தாக ஆட்சிசெய்து வெண்கொற்றக் குடையால் காத்த அரசருக்கும், இடையாமத்தும் நண்பகலும் துயிலாது விரைந்த வேகம் கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வியறிவு இல்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாளித் தானியமே; உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை ஆகிய இரண்டே; இவற்றைப் போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே விளங்கும். எனவே செல்வத்தால் பெறும்பயன் பிறருக்கு கொடுத்தலே ஆகும். செல்வத்தைத் தாமே நுகர்வோம் எனக் கருதினால் அறம், பொருள், இன்பம் ஆகியன கிடைக்கா.


-மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

உலகம் அழியுமா? புறநானூறு

உலகம் அழியாமல் இருக்கக் காரணமாகப் புறநானூறு கூறுவது...


//பிறருக்காக வாழும் நல்லவர்கள் இருக்கும் வரை உலகம் அழியாது.//

புறநானூறு 182

உண்டால் அம்ம, இவ்வுலகம் - இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத் 

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர் ;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப் 

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,

 உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்வு இலர்; 

அன்ன மாட்சி அனைய ராகித்,

 தமக்கென முயலா நோன்தாள்,

 பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. 

பாடலின் பொருள் :

தேவருக்கு உரிய அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனக் கொண்டு தனித்து உண்டலும் இலரே.  பிறர் அஞ்சத் தகும் துன்பத்திற்கு அஞ்சி, அதைத் தீர்க்கும் பொருட்டு சோம்பி இருத்தலும் இலர். புகழ் கிடைக்குமாயின் தம் உயிரையும் கொடுப்பர். பழி எனின் அதனால் உலகம் முழுவதும் பெறினும் கொள்ளார்.  மனக் கவலை இல்லார். அத்தகைய உயர்ந்த தன்மையராய்த் தமக்கென முயலா பிறர்க்கென முயலும் சான்றோர் இருப்பதால்தான் இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது 

-கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய பாடல் இது

வரிச்சுமை GST - புறநானூறு

அரசனுக்கு அறிவுரை

வரி மேல் வரி விதித்து மக்களைத் துன்புறுத்த கூடாது என்று பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்குப் புலவர் பிசிராந்தையார் அறிவுரை கூறுவதாகப் பாடிய புறநானூற்றுப் பாடல்....(184)

காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே; 

மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்; 

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, 

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; 

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, 

கோடி யாத்து நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் 

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, 

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், 

யானை புக்க புலம் போல, 

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.


பாடலின் பொருள்:

ஒரு மாவிற்குக் குறைந்த நிலம் ஆயினும் அதில் விளைந்த காய்ந்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொண்டால் யானைக்குப் பல நாள்களுக்கு அது உணவாகப் பயன்படும். நூறு வயல்கள் ஆயினும் யானை தனித்துச் சென்று புகுந்து உண்டால் அதன் வாயில் புகுந்த நெல்லை விட அதன் காலடியில் பட்டு அழிவது மிகுதியாகும். அறிவுடைய அரசன் தான் கொள்ளும் அரசு இறையைக் (வரியை) கொள்ளும் அளவு (மக்கள் தாங்கும் அளவு) அறிந்து கொள்ள (வரி வசூலிக்க) வேண்டும். அவ்வாறு செய்தால் அவன் நாடு கோடி பொருளை ஈட்டிக் கொடுத்துச் செழிப்படையும்.   வேந்தன் அறிவு குறைந்து நாள்தோறும் முறை அறியாத ஆரவாரம் உடைய சுற்றத்துடன் சேர்ந்து குடி மக்களின் அன்பு நீக்குமாறு கேட்டுப் பெரும்பொருளை விரும்பினால், அது அந்த யானை புகுந்த நிலம் போல் தானும் உண்ணப் பெறாமல் உலகமும் கெடும்.


-பாண்டியன் அறிவுடை நம்பியிடம் சென்ற பிசிராந்தையார் பாடியது.

Monday, November 9, 2020

இயல் 1, கற்பவை கற்றபின்

1).  பின்வரும் நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களைக் கேட்டறிந்து வகுப்பறையில் பகிர்க.

தரிசு, சிவல், கரிசல், முரம்பு, புறம்போக்கு, சுவல், அவல்.


தரிசு: பயிரிடப்படாத நிலம்

சிவல்: செந்நிலம்

கரிசல்: கரிய நிறமுடைய கரிசல்மண்

முரம்பு: பருக்கைக் கற்கள் உள்ள மேட்டுநிலம்

புறம்போக்கு: ஊர்ப்புறத்தில் குடிகள் வசம் இல்லாத நிலப்பகுதி

சுவல்: மேடு

அவல்: அகன்ற பள்ளம், விளைநிலம்


2).  ஒரு பொருள் தரும் பல சொற்களைப் பட்டியலிடுக. எடுத்துக்காட்டு. 

சொல்லுதல்: பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்.

ஒருபொருட்பன்மொழி

சொல்: பதம், மொழி, கிளவி.

காற்று: வளி, வாயு

அம்மா: தாய், அன்னை.

குழந்தை: குழவி, பிள்ளை.

விடை: செப்பு, இறை.

போல: புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, நேர, நிகர, அன்ன. 

பெரிய: மா, நனி, கழி, கடி, கூர், சால, தவ, உறு, குரு

துயில்: உறக்கம், தூக்கம்.

கதிரவன்: வெய்யோன், பகலவன், ஞாயிறு, பரிதி. 

நிலா :மதி, திங்கள், அம்புலி.

அழகு: அணி, வனப்பு, எழில், கவின்.

இன்பம்: உவகை, மகிழ்ச்சி களிப்பு. 

வீடு: இல்லம், உறையுள், மனை.

சோலை: பொதும்பர், கா, பொழில் 

Sunday, November 8, 2020

தமிழ் அகராதி pdf

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இங்கு பகிரப்படுகிறது.  உரிமையாளர் தரப்பில் இருந்து நீக்கக் கோரும் கோரிக்கைகள் எழுந்தால் இப்பதிவு நீக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 19000 பக்கங்களுக்கு மேல்...70 MB Data pdf download for teachers Click here

Tamil dictionary pdf download Click here

மயங்கொலிச் சொற்கள் pdf download Click here

பட்டதாரி ஆசிரியர்களுக்கானG.O.

 பட்டதாரி ஆசிரியர்களுக்கானG.O. Click here