Saturday, September 21, 2024

பயிற்சித் தேர்வு 1

 

மெல்லக் கற்போர் பயிற்சித் தேர்வு வினாத்தாள் 1

இயல் 1

பலவுள் தெரிக.

1.      மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது------

a.      வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

b.      பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

c.       ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

d.      வணிக கப்பல்களும் அணிகலன்களும்

2.      காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள் -இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

a.      இலையும் சருகும்

b.      தோகையும் சண்டும்

c.       தாளும் ஓலையும்

d.      சருகும் சண்டும்

3.      எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

a.      எந்+தமிழ்+நா

b.      எந்த+தமிழ்+நா

c.       எம்+தமிழ்+நா

d.      எந்தம்+தமிழ்+நா

4.      கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’- தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

a.      பாடிய; கேட்டவர்

b.      பாடல்; பாடிய

c.       கேட்டவர்; பாடிய

d.      பாடல்; கேட்டவர்

5.      வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை-

a.      குலை வகை

b.      மணிவகை

c.       கொழுந்து வகை

d.      இலை வகை

இயல் 2

6.      உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்”- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

a.      உருவகம், எதுகை

b.      மோனை, எதுகை

c.       முரண், இயைபு

d.      உவமை, எதுகை

7.      செய்தி 1- ஒவ்வோர்ர ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2- காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3- காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

a.      செய்தி 1 மட்டும் சரி

b.      செய்தி 1, 2 ஆகியன சரி

c.       செய்தி 3 மட்டும் சரி

d.      செய்தி 1, 3 ஆகியன சரி

8.      பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

a.       கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

b.      கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

c.       கடல் நீர் ஒலித்தல்

d.      கடல் நீர் கொந்தளித்தல்

9.      பெரிய மீசை சிரித்தார். வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

a.      பண்புத்தொகை

b.      உவமைத்தொகை

c.       அன்மொழித்தொகை

d.      உம்மைத்தொகை

10.  பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க

                                                                     i.       கொண்டல்-1.மேற்கு

                                                                   ii.       கோடை-2.தெற்கு

                                                                 iii.       வாடை-3.கிழக்கு

                                                                 iv.       தென்றல்-4.வடக்கு

) 1,2,3,4.  ) 3,1,4,2 ) 4,3,2,1 ) 3,4,1,2

 

Wednesday, September 4, 2024

மரம் பேசுகிறது

மனிதா? மனிதா?

நான் பேசுவது கேட்கிறதா?

நான் தான் மரம் பேசுகிறேன்

எனக்கு ஓரறிவு என்கிறாய்.

உனக்கு ஆறறிவு என்கிறாய் !

என்னால் இடம்விட்டு இடம் நகரமுடியாது என நினைத்தா எனக்கு ஓரறிவு என்றாய்?

எனக்கு ஒரே ஒரு உணர்வு மட்டுமே உண்டு என்பதாலா எனக்கு ஓரறிவு என்கிறாய்?

எனக்கு ஏழு அறிவு இருக்கிறது.

சொல்லட்டுமா?

1. நான் விதையாக கரும்பாறையில் விழுந்தாலும், கலங்க மாட்டேன். பாறையைப் பிளந்து என் வேர்களை நுழைப்பேன்.

2. கடும்புயலிலும் மழையிலும் கலங்கமாட்டேன். மண்ணை இறுகப் பிடித்து மண்ணரிப்பைத் தடுப்பேன்.

3. எதிர்வரும் வறட்சியை முன்னரே கணித்து என் இலைகளை உதிர்ப்பேன்.

4. என் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் உனக்காக உணவாகத் தந்தேன்; தருவேன்.

5. மழையைத் தந்து உயிர்களை வாழ வைப்பேன். உன்னையும் வாழ வைப்பேன். உன்னால் மழைபெய்ய வைக்க முடியுமா?

6. நீ உயிர் வாழ ஆக்ஸிஜனை தந்தேன். உன்னால் ஆக்சிஜனை உருவாக்க முடியுமா?

7. நீ எத்தனை முறை என்னை வெட்டினாலும் வெட்ட வெட்ட உனக்காக முளைப்பேன். யாருக்கு ஏழு அறிவு என்று யோசி மனிதா!

நான் வருகிறேன், நன்றி!


Saturday, August 31, 2024

5th STD independence speech content

 “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்ற பாரதியின் சுதந்திரத் தீ பரப்பும் பாடல் வரிகளுடன் என் உரையைத் தொடங்குகிறேன்.

ஆன்றோர்களே,

சான்றோர்களே,

நல்லாசிரியர் பெருமக்களே,

உடன்பயிலும் சகோதர சகோதரிகளே,

உங்கள் அனைவருக்கும் 78வது இனிய சுதந்திரதின வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமாகவே பிறக்கிறது.

அப்படி பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் சுதந்திரமாய் வாழ உரிமை உண்டு.

ஆனால் அந்த உரிமை 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பறிக்கப்பட்டது.

வரிகள் உயர்த்தப்பட்டன

உடைமைகள் பறிக்கப்பட்டன.

வெளிநாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

உள்நாட்டுத் தொழில்கள் சிதைக்கப்பட்டன.

உழவர்கள் நிலங்களை இழந்தனர்.

நெசவாளர்கள் வறுமையில் வீழ்ந்தனர்.

தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

வறுமை வாட்டியது.

பஞ்சம் தலைவிரித்தாடியது.

பஞ்சம் பசி பட்டினியால் செத்துமடிந்தனர் நம் மக்கள்.

இதனைக்கண்டு படித்த இந்தியர் துடித்தனர்.

ஆங்கில அரசின் அட்டூழியங்களைக் கண்டு கொதித்து எழுந்தனர்.

அறவழியில் நின்றனர்.

அகிம்சை வழியில் போராடினர்.

இரத்தம் சிந்தினர்.

இன்னுயிர் ஈந்தனர்.

ஒத்துழையாமை இயக்கப் போராட்டம்,

வரிகொடா இயக்கம்,

சட்ட மறுப்புப் போராட்டம்,

அந்நியத் துணி எரிப்புப் போராட்டம்,

வெள்ளையனே வெளியேறு இயக்கம் எனப் பல வழிகளில் போராடினர்.

உடைமைகளை இழந்து,

உரிமைகளை இழந்து,

இன்னுயிரை ஈந்து,

அரும்பாடுபட்ட தீரர்களின் தியாகம்

சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தது.

அப்படிப்பட்ட சுதந்திரத்தைப் பேணிக் காப்பது நமது கடமை.

சுதந்திரத்திற்காகப் போராடிய மகாத்மா காந்தியின் மகிமை வாழ்க

நேதாஜியின் நாமம் ஓங்குக

பட்டேலின் புகழ் ஓங்குக,

பகத்சிங்கின் துணிவு ஓங்குக,

பாரதியின் கவிதை பொங்குக,

வ உ சி யின் ஆவேசம் பொங்குக,

திலகரின் தீரம் சிலிர்க்க.

இன்னும் பல தியாகிகளின் தியாகங்களை நெஞ்சில் கல்வெட்டாய் பொறிப்போம்.

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய திலகரை நினைப்போம்.

வந்தே மாதரம்

வாழ்க பாரதம்

ஜெய்ஹிந்த்.


மாதிரி வரவேற்புரை

 வரவேற்புரை

பொருப்பிலே பிறந்து

தென்னன் புகழிலே கிடந்து

சங்கத்து இருப்பிலே இருந்து

வையை ஏட்டிலே தவழ்ந்த

தமிழன்னையை வணங்கி

என் வரவேற்புரையைத் தொடங்குகிறேன்.

கருமம் சிதையாது கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்து இவ்வுலகு

 என்ற தெய்வப் புலவரின் திருவாக்கினைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின்பால் அன்பு கொண்டு, மாணவர்களின் நலத்தையே எப்போதும் மனத்தில் கொண்டு, ______நல மையத்தை திறந்து வைப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் வணக்கத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களே…

பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும் இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம். மக்கள் யாக்கை இது என உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் என்று நல்ல அறத்தையே என்றும் விரும்பிச் செயலாற்றி வருகின்ற மதிப்பிற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே…

இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அதனால் அவன்கண் விடல் என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கினை மெய்யாக்கி, கல்விக்கூடங்களை கலைக்கூடங்களாக்கி, அவற்றை அறிவின் ஊற்றுக் கண்ணாக்கி திறம்படச் செயலாற்றி வருகின்ற பெருமைக்குரிய தலைமை ஆசிரியர் பெருமக்களே….

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா. நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் படமாடக் கோயில் பகவற்கு அது ஆகுமே என்ற நற்சிந்தனையோடு______________நலவாழ்வு மையத்தை அமைத்து மாணவர்களின் நலனுக்காக செயலாற்றி வருகின்ற_________தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த பொறுப்பாளர்களே….

மனைக்கு விளக்கம் மடவாள். மடவாளுக்கு விளக்கம் புதல்வர். புதல்வருக்கு விளக்கம் கல்வி. கல்விக்கு விளக்கம் தகைசால் உணர்வு என்கிறது நான்மணிக்கடிகை. அப்படிப்பட்ட ஒழுக்கத்தோடு கல்வியையும் தாயுள்ளத்தோடு மாணவர்களுக்கு கற்பித்து வருகின்ற மேலான ஆசிரியர் பெருமக்களே….

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல. நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு என்பதை மனத்தில் கொண்டு, கல்வியில் கவனம் கொண்டு, அக்கறையோடு இங்கு கூடி அமர்ந்திருக்கும் அன்பான மாணவச் செல்வங்களே..

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் பேருவகை கொள்கிறேன்.


குழந்தைகள் தின விழா பேச்சு

 நானொரு குழந்தை.

காரணமின்றிச் சிரிப்பேன். சில நேரம் காரணமின்றி அழவும் செய்வேன். பூத்த மலரைப் போன்ற என் புன்னகை, பெரியவர் இதயத்தை மலரச் செய்யும். என் அழுகை, கல் நெஞ்சத்தையும் கரைக்கும். எனக்காக மேகமும் கண்ணீர் வடிக்கும்.

என்னுடைய உலகம் தனித்துவமானது. தனிமையை விரும்ப மாட்டேன். என்றாலும் தனிமையை தனிமையாக நினைத்து வெறுப்படைந்ததில்லை. மரமும் செடியும், மண்ணும் பொம்மையும், சிறிய எறும்பும் வண்ணத்துப்பூச்சியும், இன்னும் கண்ணில் படும் எல்லாமும் என்னிடம் பேசும். நானும் மணிக்கணக்கில் அவைகளுடன் பேசுவேன். நலம் விசாரிப்பேன். நட்பு பாராட்டுவேன். பொழுது போவதைப் பற்றிக் கவலை கொண்டதில்லை. இன்னும் சொல்லப்போனால், இறந்த காலம் பற்றியோ, எதிர்கால எதிர்பார்ப்போ, நிகழ்கால பரபரப்போ என்னிடம் கிடையாது. ஏனெனில் நான் குழந்தை. மாலை நேர மேகக் கூட்டங்களில், விந்தை விலங்குகளின் உருவங்களைக் கற்பனை செய்து, ரசித்து மகிழ்வேன். பட்டாம்பூச்சியின் சிறகசைப்பைக் கண்டு பரவசமடைவேன். நானும் அதனுடன் பறந்து திரிவேன். இறக்கைகள் இல்லாமல்…

இளங்கன்று போலத் துள்ளிக் குதித்து ஓடுவேன். நடந்து செல்வதை விரும்ப மாட்டேன். தேனீ போல சுறுசுறுப்பாகச் சுற்றி வருவேன். அன்பு காட்டும் அனைவரையும் எனக்குப் பிடிக்கும். இவர் நண்பர், இவர் மற்றவர் என்று பாகுபாடு காட்டத் தெரியாது. சண்டையிட்டாலும், கோபித்துக் கொண்டாலும், சில வினாடிகளில் அதை மறந்து விடுவேன். ஆனால் அவர்கள் மீது உள்ள அன்பை மறக்க மாட்டேன். எனக்குள் வன்மம் கிடையாது; வன்முறை தெரியாது; பொறாமை கிடையாது; கேடு அறியேன். ஏனெனில், நான் குழந்தை. கணியன் பூங்குன்றனைப் போல, எனக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

நான் ஒரு களிமண்; ஈரமண். என்னைப் பெரியவர்களாகிய நீங்கள், எப்படி வழி நடத்துகிறீர்களோ, அப்படியே நாங்கள் வளர்கிறோம். எப்படிப்பட்ட உணர்வுகளை எங்களிடம் விதைக்கிறீர்களோ, அப்படிப்பட்ட உணர்வுகளையே வெளிப்படுத்துகிறோம். நீங்கள் பொய் பேசினால், நான் உங்களிடம் பொய் பேசக் கற்றுக் கொள்கிறேன். நீங்கள் சினம் கொண்டால், உங்களைப் பார்த்து, நானும் சினம் கொள்ளக் கற்றுக் கொள்கிறேன். நீங்கள் கெட்ட வார்த்தைகள் பேசினால், உங்களைப் பார்த்து, நானும் கெட்ட வார்த்தைகள் பேசக் கற்றுக் கொள்கிறேன்.

நான் சுயமாக எதையும் செய்வதில்லை; ஏனென்றால் நான் குழந்தை. என்னைப் போன்ற குழந்தைகள் நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் வளர்வதற்கு, நாங்கள் காரணம் அல்ல. நாங்கள் நல்லவர்களானால் அந்தப் பெருமைக்கு உரியவர்கள், நீங்கள்தான். நாங்கள் தீயவர்களாக வளர்ந்தாலும் அந்தச் சிறுமைக்கு உரியவர்கள், நீங்கள் தான். எங்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு, உங்களுக்கு மிக அதிகம். நீங்கள் எப்படி வழிகாட்டுகிறீர்களோ, நீங்கள் எப்படி வாழ்ந்து காட்டுகிறீர்களோ, நீங்கள் எப்படி வார்த்தெடுக்குறீர்களோ, அப்படியே நாங்கள் வார்க்கப்படுவோம்.

எங்கள் முன் எங்களை இழிவுபடுத்தும் காட்சிகளைக் காட்டாதீர்கள்! எங்களிடம் சினம் கொள்ளாதீர்கள்! எங்களைத் திட்டாதீர்கள்! எங்களை அடிக்காதீர்கள்! ஏனென்றால், நாங்கள் குழந்தைகள்!

எங்களிடம் அன்பு காட்டுங்கள்! எங்களிடம் நட்பாகப் பழகுங்கள்! எங்களுக்கு வழி காட்டுங்கள்! எங்கள்முன், முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள்! ஏனென்றால், நீங்கள்தான் நாங்கள்! நாங்கள் வேற்றுக் கிரகவாசிகள் அல்ல. உங்களின் வாரிசுகள்! உங்களின் வார்ப்புகள்! உங்களின் பிரதிபலிப்புகள்! உங்களைப் பற்றிப் பெருமைப்படப் பிறந்தவர்கள்!

ஏனென்றால், நாங்கள் குழந்தைகள்! நாங்கள் குழந்தைகள்! நாங்கள் குழந்தைகள்!


மாதிரி நிகழ்ச்சித் தொகுப்பாளர் உரை-RJ

அன்பினில் இன்பம் காண்போம்

அறத்தினில் நேர்மை காண்போம்

துன்புறும் உயிர்கள் கண்டால்

துரிசறு கனிவு காண்போம்

வன்புகழ் கொடையில் காண்போம்

வலிமையைப் போரில் காண்போம்

தன் பிறப்புரிமை யாகத்

தமிழ்மொழி போற்றக் காண்போம் என்று தமிழை வாழ்த்தி எனது தொகுப்புரையைத் தொடங்குகிறேன்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து. பாடலைப் பாட 12ஆம் வகுப்பு மாணவிகளை அன்போடு அழைக்கிறோம்.

தமிழ்த்தாய் வாழ்த்து

“குழந்தை

வரைந்தது

பறவைகளை மட்டுமே

வானம்

தானாக உருவானது” என்பார் கவிஞர் கலாப்ரியா. இன்றைய தினம் குழந்தைகள் தினமாக இனிமையாக, இனிப்புடன் கொண்டாடப்பட இருக்கிறது.

காலங்கள் உருண்டோடி வருகின்றன. அறத்தை மறந்த இந்தக் காலத்தில்தான் அறம் பற்றிய சிந்தனையும் உயிர்ப்புறுகிறது. ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம்’ என்கிறார் வள்ளுவர். மனத்தில் சிறிதும் குற்றம் இல்லாத தலைமையாசிரியர் அவர்களை, இந்த விழாவிற்குத் தலைமையேற்று நடத்தி, தலைமை உரை ஆற்ற வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

தலைமையாசிரியர் உரை

தலைமை உரை வழங்கி, எங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டிய தலைமையாசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகளைக் காணிக்கையாக்குகிறோம்.

“எலிமருந்து வாங்க

அப்பாவுடன்

கடைக்குச் சென்ற

குழந்தை

அப்பாவிடம்,

“அப்பா, நம்ம வீட்டு எலிக்கு

உடல் நலம் சரியில்லையா?”

என்று கேட்டாள்.

அப்பா

எலிமருந்து

வாங்காமல்

வீடுதிரும்பினார்”.

இதுதான் குழந்தை. குழந்தைக்கு பேதம் கிடையாது. குழந்தைக்கு அன்பு காட்ட மட்டும்தான் தெரியும்.

அப்படிப்பட்ட அன்புக்குழந்தையாக, குழந்தையின் உலகை அறிமுகப்படுத்த வருகிறார் ஆறாம் வகுப்புக் குழந்தை மிதுனா ஸ்ரீ. கரவொலி எழுப்பி குழந்தையை வரவேற்போமாக…

பேச்சு 1

“உங்கள் சுயத்துடன்

நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும் போது

நீங்கள் நல்லவர்”

என்கிறார் கவிஞர் கலீல் கிப்ரான். குழந்தைகள் நல்லவர்கள். குழந்தை மிதுனா ஸ்ரீ-க்கு நன்றிகளும் பாராட்டுகளும்…

1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நம் நாடு குழந்தையாகப் பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘சுதந்திர இந்தியா’ என்ற பெயர் சூட்டி, பசிபட்டினியைத் தீர்க்கத் திட்டங்கள் பல தீட்டி, பல இன்னல்களுக்கிடையே இந்தியாவை ஒரு குழந்தையைப் போல வளர்த்தெடுத்த ‘நேரு மாமா’ பற்றிப் பேச வருகிறார் ஒன்பதாம் வகுப்பு மாணவி _________. அவர்களைக் கரவொலி எழுப்பி வரவேற்போமாக…

பேச்சு 2

நேரு மாமா குறித்தும், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதன் காரணம் பற்றியும் நம்மிடையே எடுத்துரைத்த மாணவி _______ க்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“வெள்ளத்தால் அழியாது. வெந்தணலால் வேகாது. வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது. கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது. கள்ளர்க்கோ பயமில்லை. காவலுக்கு மிக எளிது – கல்வி”. – என்ற தனிப்பாடல் கல்வியின் சிறப்பை உணர்த்துகிறது.

கல்வியின் சிறப்பை, பெருமையை நாடக வடிவில் தர வருகிறார்கள் பத்தாம் வகுப்பு மாணவர்கள். அவர்களை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்துவோமாக…

கல்வி- நாடகம் 1

காட்சிக்கு விருந்தையும் மருந்தென கருத்தையும் நாடகம் மூலம் விதைத்த அன்பிற்கினிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கரவொலியை நன்றியாக்குகிறோம்.

சுதந்திர இந்தியா தற்போது இளைஞனாக வல்லவனாக நல்லவனாக வளர்ந்து நிற்கிறது. இதற்கு எவ்வாறெல்லாம் நேரு அடித்தளமிட்டார் என்பது பற்றிப் பேச வருகிறார் பத்தாம் வகுப்பு மாணவி கோமதி சரண்யா.

பேச்சு 3

அழகாகவும் இனிமையாகவும் பேசிய பத்தாம் வகுப்பு மாணவி_________க்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

எதிர்கால இந்தியா இன்றைய இளைஞர்களின் கைகளில் உள்ளது. இளைஞர்களின் ஆற்றல் நெருப்பு போன்றது. சரியாக கையாளாவிட்டால் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். இளைஞர்கள் அசைவிலா ஊக்கம் உடையவனாக இருக்க வேண்டும். இளைஞர்களைப் பற்றிய கவிதை ஒன்று வாசிக்க ஒன்பதாம் வகுப்பு மாணவி தனலட்சுமி வருகிறார். கரவொலி எழுப்பி அவரை வரவேற்போமாக…

கவிதை 1

கவிதை வாசித்தளித்த மாணவிக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்!

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல… நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு.

நாம் விதவிதமான ஆடைகளை அணிந்து அழகு படுத்திக் கொள்கிறோம். விதவிதமான சிகை அலங்காரங்கள் செய்து அழகு பார்க்கிறோம். மஞ்சள் பூசி நம் முகத்தை கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறோம். ஆனால் உண்மையான அழகு என்பது கல்வி தரும் அழகே ஆகும். கல்வியால் நம் நெஞ்சம் அழகாகிறது. அதனால் நமது வாழ்க்கையும் அழகாகிறது. கல்வியின் அவசியம் குறித்தான நாடகம் ஒன்றை நடித்துக் காட்ட ஏழாம் வகுப்பு மாணவர்கள் வருகிறார்கள். அவர்களை கரவொலி எழுப்பி உற்சாகமூட்டுவோமாக…

நாடகம் 2

நாடகத்தை நடித்துக் காட்டிய மாணவர்களுக்கு நன்றிகள்!

திரைகடல் ஓடித் திரவியம் தேடியவர் தமிழர். மேலைக் கடல் முழுவதும் கப்பல் விட்டவர் தமிழர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடி இன்புற்றவர் தமிழர். அறிவிலும் ஆற்றலிலும் தமிழர் சிறந்தவர் என்பதற்கு இஸ்ரோ சான்றாகும். விண்வெளித் துறையில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விண்வெளித் துறையில் தமிழர்களின் சாதனை பற்றிப் பேச வருகிறார் பத்தாம் வகுப்பு மாணவன் யஸ்வந்தாமன்.

பேச்சு 4

சாதனைத் தமிழர்களின் வழியைப் பின்பற்றி நாமும் சாதனை படைக்க உறுதி ஏற்போமாக…

வாழ்க்கை என்பது

நீ சாகும் வரை அல்ல

மற்றவர் மனதில்

நீ வாழும் வரை…என்கிறார் அன்னை தெரசா. இன்றைய காலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டி இருக்கிறது. இளைஞர்களே இன்றைய குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். இளைஞர்கள் தவறு செய்தால் இளம் குழந்தைகளும் அத்தகைய தவறுகளைத் தவறாமல் செய்வார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். இளைஞர்களுக்கு உரிய கடமைகளைப் பற்றி கவிதையாக வழங்க ஒன்பதாம் வகுப்பு மாணவி சர்மிளா வருகிறார். அவர்களை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்துவோம்.

கவிதை 2

கவிதை வாசித்தளித்த மாணவிக்கு வாழ்த்துக்கள்…

அணை உடைஞ்சு போன வெள்ளம், அழுதாலும் வராதும்பாங்க. இளமைப் பருவம் இன்றியமையாதது. அதனால்தான் “இளமையில் கல்” என்று கூறுகிறார்கள். கல்வி கரையில கற்பவர் நாள் சில… மெல்ல நினைக்கின் பிணிபல… தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவை நீர் ஒழியப் பால் உண் குருகின் தெரிந்து. அன்னப்பறவையானது நீரையும் பாலையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் தனித்துப் பிரித்து உண்ணும். நம்முடைய வாழ்நாளோ மிகவும் குறைவு. படிக்க வேண்டிய நூல்களோ அளவில்லாதது. நம்முடைய மிகக் குறைந்த வாழ்நாளில் நல்ல நூல்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். அப்படிப்பட்ட கல்வியைச் சிறப்பாக போதித்து வருகின்ற தாவரவியல் ஆசிரியர் திரு. இசக்கி முத்துக்குமார் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வாழ்த்துரை 1

வாழ்த்துரை வழங்கிய தாவரவியல் ஆசிரியருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

குத்துக்கல்லுக்கு என்ன குளிரா? வெயிலா? என்கிற மாதிரி மாணவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு “எறும்பு ஊரக் கல்லும் தேயும்கிற” மாதிரி அறிவுரைகளை வழங்கி வருகின்ற விலங்கியல் ஆசிரியர் திரு. சின்னச்சாமி அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

வாழ்த்துரை 2

வாழ்த்துரை வழங்கிய விலங்கியல் ஆசிரியருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்…

நன்றியுரை வழங்க வருமாறு தமிழாசிரியர் திரு.மகேந்திரன் அவர்களை வரவேற்கிறோம்.

நன்றியுரை

நன்றியுரை வழங்கிய தமிழாசிரியருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்…

நிகழ்ச்சியின் இறுதியாக நாட்டுப்பண் பாட பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளை அழைக்கின்றோம்.

அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வு குறித்துக் கட்டுரை எழுதுக

கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வு குறித்துக் கட்டுரை எழுதுக

கட்டுரை -கலைத்திருவிழா

முன்னுரை 

மனிதன் கொண்ட விழைவின் வெளிப்பாடே விழா. இவ்விழாவில் அவரவர் சார்ந்த சமூகத்தின் விழுமியங்கள் கலைகள் வடிவில் பொதுவில் நிகழ்த்தப்படும். சமூகத்தின் பன்முகத் தன்மையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் கலைகள் மனத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தருவதோடு வாழ்க்கை நெறிகளையும் வகுத்துக் கூறும்.  இத்தன்மை வாய்ந்த கலைத் திருவிழாவைக் காண மதுரைக்குச் சென்று வந்தேன். அதைப் பற்றிக் கூறுகிறேன், கேளுங்கள்.

கண்கவர் கலைத் திருவிழா 

மதுரை அரசுக் கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்" என்பதை மனத்தில் கொண்டு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்துகொள்ள மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே வந்திருந்தனர்.  "ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி, விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கம்" என்ற சிலப்பதிகார அரங்கம் போல் இக்கலைத் திருவிழா அரங்கம் விளங்கிற்று. வண்ணவண்ணத் தோரணங்களும் வரவேற்புப் பதாகைகளும் சிவப்புக்கம்பள விரிப்பும் விசாலமான பார்வையாளர் அரங்கும் கண்களைக் கவர்ந்தன!

நிகழ்ச்சித் தொடக்கம் 

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அமைச்சர் பெருமக்கள், பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், கலைஞர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

நோக்கம் மற்றும் குறிக்கோள் 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த கலைத் திறன்களை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இக்கலைத் திருவிழா 2022ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற குறிக்கோளில் நடத்தப்பட்டது.

பல்வேறு போட்டிகள் 

வகுப்புகள் 1-2, 3-5, 6-8, 9-10, 11-12 என ஐந்து பிரிவுகளில் கவின்கலை, இசை, நாடகம், நடனம் என்னும் வகைகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பல்வேறு செதுக்குச் சிற்பங்களிலும் வண்ண ஓவியங்களிலும் சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை வெளிப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் சிறந்த சிற்பக் கலைஞர்களையும் ஓவியக் கலைஞர்களையும் அடையாளம் காண முடிந்தது.

கருவி இசையும் வாய்ப்பாட்டும் 

கருவி இசைக்கென்று தனியாக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. கருவி இசையில் தோற்கருவி, துளைக்கருவி, தந்திக்கருவி எனப் பலவகை இசைக்கருவிகளை இசைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. "மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத" என்று ஆண்டாள் பாடியது போன்று மாணவர்கள் பம்பை, உறுமி, உடுக்கை, பறை, மிருதங்கம், தபேலா, டிரம்ஸ், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், கிட்டார் ஆகியவற்றை இசைத்தனர்; பார்வையாளர்கள்  மயங்கினர்.  மற்றொருபுறம் வாய்ப்பாட்டு இசையில் பங்கேற்ற மாணவர்கள்  நாட்டுப்புறப் பாடல்களையும் செவ்வியல் இசைப் பாடல்களையும் பாடி அசத்தினர்.

நடனமும் நாடகமும்

தனிநபர் நடனம் மற்றும் குழு நடனம் என்னும் இரண்டு பிரிவுகளாக நடனப் போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் பாடல்களுக்கு ஏற்ப வண்ண வண்ண ஆடை அலங்காரங்களுடன் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் எனப் பலவகை நடனங்களை ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.  தனிநபர் நடிப்பு, பலகுரல் பேச்சு, நகைச்சுவை வழங்குதல், குழுநாடகம் என்னும் பிரிவுகளில் நாடகப் போட்டி நடத்தப்பட்டது. சூழல் பாதுகாப்பைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகங்கள் பார்வையாளர்கள் மனத்தில் பதிந்தன. மாணவர்களின் நடனமும் நடிப்பும் தேர்ந்த திரைக் கலைஞர்களைப் போலவே இருந்தது. இக்கலைத் திருவிழாக் காட்சிகளையெல்லாம்,"அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் அருகிய சிறை விரித்தாடப் பூஞ்சினை மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்" என்பது போல நாங்கள் நோக்கினோம்.

விருது வழங்கும் நிகழ்ச்சி

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதன்மை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற மாணவர்கள் முகத்திலே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. "போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாட்டுச்சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்" என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அமைச்சர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களின் வாழ்த்துரையுடன் கலைத்திருவிழா இனிதே நிறைவடைந்தது. ஆயினும், கலைத்திருவிழாக்காட்சிகள் என் கண்களைவிட்டு அகலவே இல்லை!

முடிவுரை

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரின் நெஞ்சிலும் கலைத் திருவிழாவே குடிகொண்டிருந்தது. "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலாய்" மாணவர்கள் ஒவ்வொருவரும் கலைஞர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களின் திறன்கள் மெருகூட்டப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் மாணவர்கள் மிகப்பெரிய சாதனையைப் படைக்க இக்கலைத் திருவிழா நிச்சயம் தூண்டுகோலாக அமையும் என உறுதியாக நம்பலாம்.